தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அதிசய சாளகிராமம்!

அதிசய சாளகிராமம்!

அதிசய சாளகிராமம்!


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாளகிராமம் என்பது, விஷ்ணுவின் கல் வடிவம். நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும். பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும். விஷ்ணு இந்த வடிவத்தைப் பெற காரணம் தெரியுமா? ஒருமுறை, தேவர்கள் உள்ளிட்ட உலக உயிர்களின் பாவம் கண்டு கோபமடைந்தார், சிவன். இவர்களை அடக்க, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஜலந்தரன் என்ற அசுரனை உருவாக்கினார். அவனின் பலம் கண்டு, தேவர்கள் உட்பட அனைவரும் நடுங்கினர்.

எப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அசுரனாக இருந்தாலும், கடவுளால் படைக்கப்படும் ஒரு உயிருக்கு மரணம் உண்டு என்பது மட்டும் பொது விதி; ஜலந்தரனுக்கும் இது பொருந்தும். விஷ்ணு பக்தையான பிருந்தா என்பவளை திருமணம் செய்திருந்தான், ஜலந்தரன். கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள், பிருந்தா. இவ்வுலகில் மனமொத்த தம்பதியராக வாழ்ந்தனர்.

மனைவியின் கற்புக்கு எப்போது களங்கம் நேர்கிறதோ, அன்று தன் உயிரை யார் வேண்டுமானாலும் பறித்து விடலாம் என்பது, ஜலந்தரனே கேட்டுப் பெற்ற வரம். தன் மனைவி மீது அவனுக்கு அந்தளவுக்கு அபார நம்பிக்கை.

தான் பெற்ற அதீத பலத்தால் ஆணவம் கொண்டு, பல அநியாயங்களைச் செய்தான், ஜலந்தரன். இந்த விஷயத்தை, சிவனின் கவனத்துக்கு, கொண்டு சென்றனர், தேவர்கள். ஜலந்தரனுக்கு அறிவுரை சொல்லியும் கேட்காததால், அவனுடன் போர் செய்தார், சிவன். ஆனால், பிருந்தாவின் கற்புத்திறன் ஜலந்தரனைக் காத்தது. இந்த விபரம் விஷ்ணுவின் கவனத்துக்கு வந்தது.

ஒருமுறை, போருக்கு சென்று விட்டான், ஜலந்தரன். மாயாவியான விஷ்ணு, ஜலந்தரனைப் போல் தன்னை உருமாற்றி, பிருந்தா அருகில் நெருங்கினார். ஆனால், விஷ்ணு தன் அருகில் நெருங்கியதுமே, அது தன் கணவன் அல்ல என, புரிந்து கொண்டாள்.

அந்தக்கணமே, தன் கற்புக்கு களங்கம் வந்து விட்டதாகவும், தான் வணங்கிய தெய்வமே தனக்கு எதிராக திரும்பி விட்டதையும் அறிந்தவள், விஷ்ணுவை, கல்லாக மாறும்படி சபித்து, சாம்பலாகி விட்டாள். பின், ஜலந்தரன் கோபத்துடன் விஷ்ணுவுடன் மோத, அவன் கொல்லப்பட்டான்.

பிருந்தாவின் சாபத்தை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். சூழ்நிலைக் கைதியான அவர், கல்லாக மாறி, கண்டகி நதியில் கிடந்தார். பிருந்தாவின் சாம்பலில் இருந்து துளசி செடி வளர்ந்தது. தன் பக்தையான அவளுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அதையே தனக்குரிய பிரசாதமாக ஏற்றார்.

உடுப்பி கிருஷ்ணர், உ.பி., மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள, ராதா - ராமன் சிலைகள், சாளகிராமத்தால் ஆனவை. ஒடிசாவில், பூரி ஜகந்நாதர் கோவில் லாக்கரில் உள்ள ஒரு சாளகிராமம், நுாற்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படும் அதிசயம் நடக்கிறது. சாளகிராம சிலைகள் உள்ள கோவில்களில் வழிபட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us