தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அளவோடு பழகுங்கள்!

எங்கள் வீட்டில், 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாள், ஒரு பணிப்பெண். பல ஆண்டுகள் பழகி விட்டதாலும் அவளுடைய பேச்சும், நடவடிக்கைகளும், நம்பிக்கைக்குரியதாக இருந்ததாலும், அவளிடம் என் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். அவளும், என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள்.

எல்லா வேலைகளையும் முடித்து, மதியம், அசதியில் சற்று கண் அயர்ந்தால், துளி சத்தமின்றி பாத்திரங்களை எல்லாம் தேய்த்து, வீடெல்லாம் பளிச்சென்று துடைத்து முடித்து என் அருகில் வந்து, 'அம்மா, நான் போய் வருகிறேன். கதவை தாழ்ப்பாள் போட்டு கொள்ளுங்கள்...' என்று, சொல்லிப் போவாள்.

என் உறவினர் வீட்டு திருமணத்திற்காக, நாங்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தோம். வீடு திரும்பிய போது, பீரோ பூட்டியபடியே இருக்க, அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கம் அனைத்தும் காணாமல் போயிருந்தது. போலீசில் புகார் கொடுத்து, திருடியவர்களை கண்டுபிடித்து விசாரித்ததில், எங்கள் வீட்டு பணிப் பெண்ணின் வழிகாட்டலில் திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. வீடு மற்றும் பீரோ சாவி வைக்கும் இடம் அனைத்தும் அவளுக்கு தெரிந்திருந்ததால் நேர்ந்த விபரீதம் இது.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணிகளே... எவ்வளவு நாணயமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் அளவோடு பழகி, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

எம். ஹேமமாலினி, சென்னை.

பாரம்பரிய உடையின் மகத்துவம்!

அண்மையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்.

அந்த விழாவில், 15 - 20 வயதுள்ள, திருமணம் ஆகாமலிருந்த எல்லா பெண்களும் பாவாடை, தாவணியில் இருந்தனர். ஒருவர் கூட சுடிதார் மற்றும் நாகரிக உடை அணியவில்லை. எல்லாரும் ஒரே கலர் பாவாடை மற்றும் தாவணி அணிந்திருந்தது அனைவரின் மனதையும் கவர்ந்தது.

திருமணம் நடத்தும் மணப் பெண்ணின் தாயிடம் இதுபற்றி கேட்டேன்.

'நான் திருமண பத்திரிகை வைக்கும் போதே, அவர்கள் வீட்டு இள வயது பெண்ணுக்கு, பாவாடை, தாவணி மற்றும் ஜாக்கெட் கொடுத்து விட்டு வந்தேன். திருமணத்தில் இதை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

'நம் பாரம்பரியமான உடையை மறக்கக் கூடாது; பெண் குழந்தைகள் பாவாடை, தாவணியில் தான் அழகாக இருப்பர் என்பதையும் வலியுறுத்துவதற்காகவே இப்படிச் செய்தேன்...' என்று கூறினார்.

அவருடைய நல்ல மனதுக்கு, 'சல்யூட்' அடித்து விட்டு வந்தேன்.

சிவ.லக்ஷ்மி, ஆடுதுறை, தஞ்சை மாவட்டம்.

இப்படியும் ஓர் ஸ்டுடியோக்காரர்!

எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து, குறுஞ்செய்தி வந்தது.

அதில், 'இங்கிருந்து ஸ்டுடியோவை காலி செய்து, சொந்த ஊரில் வைக்க இருக்கிறேன். ஆகவே, தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் பழைய புகைப்படங்கள் தேவைப்பட்டால், பதிவு எண் அல்லது நேரில் வந்து அடையாளம் காட்டினால், மிக குறைந்த விலையில், 'பிரின்ட்' எடுத்து தரப்படும்.

'சிறு வயது படங்கள் பொக்கிஷம் போன்றவை. கம்ப்யூட்டரில் பல ஆயிரம் புகைப்படங்கள் இருக்கின்றன. புகைப்படங்களில் பதிவு எண், தேதி மற்றும் பெயர் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுவரைக்கும் ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி...' என, இருந்தது.

'அடடே... இது வித்தியாசமான அறிவிப்பாக இருக்கிறதே...' என நினைத்து, 10 ஆண்டுகளுக்கு முன், அந்த ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட என் மகளின் படத்தை வாங்குவதற்காக அங்கு சென்றேன்.

கூட்டம் அலை மோதியது. பலரும் தங்களது பழைய படங்களை வாங்கும் ஆவலில், பெயர் மற்றும் பிறந்த தேதி சொல்லி, புகைப்படங்களை, 30 ரூபாயில், 'பிரின்ட்' எடுத்து, பார்த்து மகிழ்ந்தனர்.

நம்மிடம் இல்லாத அல்லது காணாமல் போன பழைய புகைப்படங்களை, பல ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது புரிந்தது. அந்த ஸ்டுடியோகாரரின் வித்தியாசமான முயற்சியை கண்டு, அனைவரும் பாராட்டினோம்.

எம்.புனிதா, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us