/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!
/
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!
PUBLISHED ON : அக் 25, 2015

ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார்.
'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்... இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)
தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.
ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?
'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.
சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.
மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!
பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?
லேனா தமிழ்வாணன்