sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாண்டோ சின்னப்பா தேவர்!

/

சாண்டோ சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர்!


PUBLISHED ON : அக் 25, 2015

Google News

PUBLISHED ON : அக் 25, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

எம்.ஜி.ஆர்., தேவர் ஆத்ம சினேகத்தின் ஆயுளை, சில ஆண்டுகள் விழுங்கி விட்ட நிலையில், நிகழ்ந்த சந்திப்பு என்பதால், அடுத்து என்ன பேசுவதென்று நாக்கு அலை பாய்ந்தது; கண்களில் நீர் அரும்பியது; மனதை எதுவோ அழுத்தியது. மவுனமாக எம்.ஜி.ஆரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் தேவர்.

'அண்ணே... யாரோட ரிகார்டிங்?' எப்போதும் போல், முந்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.,

'தாய் சொல்லை தட்டாதேன்னு புதுப்படம்; அதுக்காக ரெண்டு பாட்டு எடுத்தோம். ஆமா, நீங்க எங்கே முருகா இங்கே...' என்றார் தேவர்.

'பவானி பட விளம்பரத்துக்கு, 'ஸ்டில்' எடுக்க வந்தேன்...' என்றவர், 'உங்க படத்தோட பாட்டை நான் கேட்கலாமா?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,

'உங்களுக்கில்லாததா முருகா...' என்றவர்,

எம்.ஜி.ஆரை ஒலிப்பதிவு அறைக்குள் அழைத்துக் சென்றார்.

எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் இனித்தன; வாய் திறந்து வாய்ப்பு கேட்க நல்ல தருணம்.

'ஆர்ட்டிஸ்ட் யாருண்ணே?'

'புதுசாப் போடலாம்ன்னு...' மென்று விழுங்கினார் தேவர்.

'இவ்ளோ நல்ல பாட்டுக்கு புது ஆளா... என்னண்ணே நீங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,

'வேறே யாரும் நான் நினைக்கிற மாதிரி நடிக்க மாட்டேங்கிறாங்களே...' என்றார் தேவர்.

'ஏன்... நான் எங்கே போனேனாம்...'

'முருகா... இப்பவாவது நீங்க, உங்க இடத்துக்கு வந்து சேர்ந்தீங்களே...' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் தேவர்.

இருவருமே தொழிலில் விடாக் கண்டர்கள். படத் தயாரிப்பாளர் என்ற முதலாளி அந்தஸ்திலேயே, கமுக்கமாகவே காய் நகர்த்தினார் தேவர். ஆனாலும், தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அடிதடி நாயகன் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளாக மனதுக்குள் சுணங்கியே இருந்தார் தேவர்.

ஜெமினி கணேசனை வைத்து, ஆக் ஷன் படம் எடுக்க முடியாமல் அவதியுற்றார். தன் நீலமலை திருடன் படத்தில் நடித்த ரஞ்சனுக்கோ முதுமை. கொங்கு நாட்டு தங்கத்தில் நடித்த ஆனந்தனுக்கோ சண்டை போடத் தெரிந்த அளவுக்கு, நடிக்கத் தெரியவில்லை. உதயகுமார் கன்னடத்துக்கு ஓடி விட்டார்.

'பா' வரிசைப் படங்களின் வெற்றிப் பாதையில், எட்ட முடியாத தொலைவில் பிரகாசித்தார் சிவாஜி கணேசன். ஸ்டுடியோ அதிபர்களே அவரது கண் அசைவுக்காக வரிசையில் நின்றனர். இதில், தேவர் எம்மாத்திரம்!

சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தவர்கள், எஸ்.எஸ்.ஆரை மொய்த்தனர். தேவருக்கு எம்.ஜி.ஆரைப் பார்த்ததும், ஆண்டவனைத் தரிசித்தது போலிருந்தது. அவரே வலிய வந்து நடிக்கிறேன் என்றதும், புதிதாகப் பிறந்தது மாதிரி தோன்றியது.

'அண்ணே... என் கார்லயே தோட்டத்துக்கு போவோம்; இன்னிக்கு எங்கூட தான் சாப்பிடுறீங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,

ஐந்து ஆண்டுகளில் விலகி கிடந்தவர்கள், ஐந்தே நிமிடங்களில், அவர்களின் அன்பு மறுபிறவி எடுத்து விட்டது. இருவரும் காரில் கிளம்பினர்.

தேவரின் கைப்பிடித்து தன் தனி அறைக்கு அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., தன் தாயார் சத்யாவின் புகைப்படத்துக்கு எதிரே நிறுத்தி, 'என் தாய் மேல் ஆணையிட்டுச் சொல்றேன்; நீங்க எப்ப கூப்பிட்டாலும் கால்ஷீட் தர்றேன். இனி, உங்க கூட பரிபூரணமாக ஒத்துழைக்கிறேன்...' என்றார்.

இதைக் கேட்டதும், தேவரின் மனம் நெகிழ்ந்தாலும், எம்.ஜி.ஆரின் தன் படங்களுக்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறித்து சில பயங்கள் இருந்தன.

'அண்ணே... நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது; இப்ப பூஜை போட்டு ஆரம்பிச்சா மூணு அமாவாசைல முடியணும். அதையடுத்து, வர்ற பவுர்ணமிக்குள்ள படம் ரிலீசாகணும். முன்ன மாதிரி, ரெண்டு வருஷம் உங்களுக்காக என்னால காத்திருக்க முடியாது. தேவர் பிலிம்ஸ் நாலு சினிமா எடுத்தாச்சு... அதை நம்பி பல நூறு குடும்பங்கள் இருக்கு. என் வேகத்துக்கு உங்களால ஈடு கொடுக்க முடியுமான்னு யோசிங்க...' என்றார் தேவர்.

தன் முத்திரைச் சிரிப்பை வெளிப்படுத்திய எம்.ஜி.ஆர்., 'அண்ணே... சில ஆண்டுகளாக நாம ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலைன்னாலும், நமக்கு, 17 வருஷம் பழக்கம். இனிமேலும், உங்க வார்த்தையை மீற மாட்டேன். ஆனா, ஒரு விண்ணப்பம்; நீங்க எங்கையில அடிச்சு சத்தியம் செய்து தரணும்...' என்றார்.

எம்.ஜி.ஆரின் பீடிகை தேவருக்கு புரியவில்லை!

'அண்ணே... தம்பி கணேசன் நடிச்ச படம் பார்த்திருக்கீங்களா...' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,

வேகமாக தலையாட்டிய தேவர், 'அவர் படத்தைப் பார்த்து ரசிக்காம இருக்க முடியுமா... உத்தம புத்திரன்ல என்ன ஸ்டைலு... பாவமன்னிப்புல சாய்பு கேரக்டருல என்ன ஒரு உருக்கம். பாசமலர் படத்த ஹிட்லர் பார்த்தாக் கூட அழுதுருவானே... பாகப்பிரிவினையில கை நொண்டியா வருவாரே... அடடா என்ன ஒரு நடிகரு அவர்...' என்ற தேவரின் குரல், புது வீரியம் பெற்று ஒலித்தது.

எம்.ஜி.ஆரின் முக மாறுதலை உணர்ந்த தேவர், அதன் பின், அடக்கி வாசித்தார்.

'ஏன் முருகா... திடீர்ன்னு கணேசனப் பத்தி விசாரிக்கிறீங்க... உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னையா...' என்று கேட்டார்.

'அண்ணே... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. அப்பத்தான் என் நிலைமை புரியும்; தம்பி கணேசனுக்கு நீங்க பரம ரசிகர். அதோட இப்ப நீங்க பட அதிபர். நாங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா, நல்ல நட்போடு இருந்தாலும், நான் இல்லன்னா கணேசன்; கணேசன் இல்லன்னா நான். அப்படித்தான் பல முதலாளிங்க கண்ணாமூச்சி வியாபாரம் செய்ய வராங்க. தேவர் பிலிம்ஸ்ல மட்டும் அது கூடவே கூடாது.

'அஞ்சு ஆண்டுகள் கழிச்சு, நாம மறுபடியும் ஒண்ணு சேர்ந்துருக்கோம். என் கால்ஷீட் கிடைக்கலன்னு, நீங்க சிவாஜியை வெச்சுப் படம் எடுத்தால், நாளைக்கே நமக்குள்ள திரும்பவும் சண்டை, சச்சரவுன்னு பேப்பர்ல எழுதுவாங்க. நம்மள நிரந்தரமா பிரிக்க, எதிரிங்க சதி செய்வாங்க. உங்களுக்கு நான் முக்கியமோ, இல்லையோ, எனக்கு நீங்க வேணும். அதுக்கு நீங்களாவது தம்பி கணேசனைத் தேடிப் போகாம, எப்பவும், எங்கூடவே இருக்கணும்; சத்தியம் செய்ங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,

சத்தியம் செய்து கொடுத்தார் தேவர்.

பாசமலருக்கு வசனம் எழுதிய ஆருர்தாசுக்கு பெரும் வரவேற்பு. தொடர்ந்து சிவாஜி கணேசனின் படங்கள் அவருக்குக் கிடைத்தன. தாய் சொல்லை தட்டாதே படத்தின் கதை வசனகர்த்தாவும் ஆரூர்தாஸ் தான். எப்படி, அவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்துவது என்று தயங்கினார் தேவர்.

கதாநாயகருக்காக கதாசிரியரை மாற்றுவதா, ஆரூர்தாஸே எம்.ஜி.ஆரிடம் சென்று கதை சொல்லட்டும். எம்.ஜி.ஆருக்கு கதை பிடித்திருந்தால், படமாக்குவோம் என்று முடிவெடுத்தார் தேவர்.

ஆரூர்தாஸை விடாமல் கேள்விகள் கேட்டு, தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயன்றார் எம்.ஜி.ஆர்., அவரது வினாக்கள் அத்தனையும், சிவாஜி கணேசனைக் குறித்தே இருந்தன.

கடைசியில், கதையை ஏற்றுக் கொண்டார்

எம்.ஜி.ஆர்., ஆளை விட்டால் போதுமென்று தேவரிடம் ஓடிவந்தார் ஆரூர்தாஸ்.

தேவரும், எம்.ஜி.ஆரும் ஒன்று சேர்ந்ததில் விழாக்கோலம் பூண்டது வாகினி ஸ்டுடியோ. முதல் காட்சியில், எம்.ஜி.ஆருக்கு வசனம் சொல்லித்தர ஆரூர்தாஸை கூப்பிட்டார் தேவர். 'தன்னை விரும்பாதவர்களிடத்தில் பணிசெய்ய, எந்த சுய புத்தியுள்ள படைப்பாளியும் விரும்ப மாட்டான்...' என்று எண்ணிய ஆரூர்தாசுக்கு, எம்.ஜி.ஆரை எதிர்கொள்ள துளியும் இஷ்டமில்லை. ஆனாலும், தேவருக்குப் பட்ட நன்றிக் கடன், அவரைத் துரத்தியது.

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

பா. தீனதயாளன்






      Dinamalar
      Follow us