PUBLISHED ON : செப் 30, 2018

பிற்பகல், 3:00 மணி அளவில், ஹனாய் நகரை சுற்றிப் பார்க்க போகலாம் என்று வழிகாட்டி கூறவே, சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். பின், தயாராகி, வழிகாட்டியுடன், சிட்டி ரவுண்டுக்கு கிளம்பினோம். போகும் வழியில், வியட்நாம் வரலாறை சுருக்கமாக கூற ஆரம்பித்தார் வழிகாட்டி, மாய்...
ஆங்கில, 'எஸ்' போன்ற வடிவில் காட்சியளிக்கும் வியட்நாம், சீனா, கம்போடியா, மலேஷியா, லாவோஸ் மற்றும் தென் சீனக் கடல் ஆகியவை புடைசூழ அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் சீனாவால் ஆளப்பட்டது வியட்நாம். அடுத்த, 900 ஆண்டுகள் வியட்நாம் அரச வம்சத்தின் கீழ் இருந்த பின், 20ம் நுாற்றாண்டில், பிரெஞ்ச் நாட்டின், ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
கடந்த, 1954ல் பிரெஞ்ச் ஆட்சியிலிருந்து மீண்ட போதும், வியட்நாமின் வடக்கு பகுதிக்கும், தெற்கு பகுதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், நாடு இரண்டாக பிளவுபட்டு, வியட்நாம், போருக்கு வழி வகுத்தது. மீண்டும், 1976ல், வட - தென் பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஹனாய், அந்நாட்டின் தலைநகரானது. அதற்கு முன், சைகான் என்று அழைக்கப்பட்ட, 'ஹோச்சி மின் சிட்டி' தான் தலைநகராக விளங்கியது.
இப்போரில், 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலவிதத்திலும், நாடு சீர்குலைந்து, பொருளாதாரத்திலும் படு பாதாளத்திற்கு சென்று விட்டது.
அடுத்தடுத்து பல அடிகளை தாங்கிய வியட்நாம் மக்கள், இனி நம் நாட்டை உயர்த்த பாடுபட வேண்டும் என்று உறுதி எடுத்து, கடுமையாக உழைக்க ஆரம்பித்துள்ளார்.
'பீனிக்ஸ்' பறவை போல, மீண்டும் உயிர்த்தெழுந்து, தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் தீட்டி, செயல்படுத்தியதில், 2000த்தில், பொருளாதார வளர்ச்சியடைய துவங்கியது.
சுற்றுலா துறை மூலம் மிகப்பெரிய வருமானத்தை இந்நாடு பெற்றாலும், வெளிநாட்டினருடன் ஒருவித பயத்துடனே பழகுகின்றனர். இறுகிய முகத்துடன், திரும்பவும் நம்மை யாராவது அடிமைப்படுத்தி விடுவரோ என்ற பயமும், தயக்கமும் அவர்கள் பேச்சில் வெளிப்படுகிறது.
சரி... வரலாற்று பின்னணி போதும். இப்போது, வழிகாட்டி, மாய் உடன், ஹனாய் நகருக்குள் நுழைந்தோம். ஹனாய் என்றால், 'நதியின் நடுவில்' என்று அர்த்தமாம்.
வளர்ச்சியடைந்த ஒரு நகரம், எப்படி இருக்குமோ அதுபோல் சீராக வடிவமைக்கப் பட்டுள்ளது ஹனாய். சீரான நான்கு வழி சாலைகள், குப்பையில்லாமல் சுத்தமாக காட்சியளிக்கிறது. தெரு ஓர விளக்குகள் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டு, மேல் கீழ் பகுதிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் வெளிச்சம் மற்றும் அழகுக்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், வழிகாட்டி.
கடந்த, 2010ல் ஹனாய் நகர், தன் ஆயிரமாவது வயதை கொண்டாடியதாம். அதற்காக, பிரதான சாலை ஒன்றில், 4 கி.மீ., நீளத்திற்கு, மியூரல் ஓவியம் தீட்டப்பட்டதாக, குறிப்பிட்டார் வழிகாட்டி. சிங்கார சென்னையில், அரசு அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுரிகளின் சுற்றுச் சுவரில் ஓவியங்கள் வரைந்திருக்கும் காட்சி கண்முன் விரிந்தது.
வியட்நாம் நாட்டுக்கென்று வரலாற்று பின்னணியும், பாரம்பரியமும் இருக்கிறது என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, சிட்டி ரவுண்டுக்கு போகலாமா என்றார், வழிகாட்டி.
சிட்டி ரவுண்டு என்றதும், நம்ம சென்னை போல், எல்.ஐ.சி., பில்டிங், வள்ளுவர் கோட்டம், பீச், லைட் அவுஸ், கிண்டி பார்க் போன்று அவர்கள் ஊரில் புகழ்பெற்ற இடங்கள் எங்காவது அழைத்துச் செல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தோம்.
இரண்டு பேர் மற்றும் நான்கு பேர் அமரக்கூடிய, மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக் ஷா, நகர் முழுக்க நிறைய சுற்றி வர, நாங்களும், நான்கு பேர் அமரக்கூடிய ரிக் ஷா ஒன்றில் ஏறி, அங்கிருந்த மார்க்கெட்டை சுற்றி வந்தோம். அம்மா, அப்பா தவிர, இங்கு, கிடைக்காத பொருளே இல்லை என்று குறிப்பிட்டார், வழிகாட்டி.
ஒரு தெரு முழுக்க துணி வகைகள், மற்றொரு தெருவில், தோல் பொருட்கள், மற்றொன்றில், வீட்டு அலங்கார விளக்குகள், இன்னொன்றில், காய்கறி மற்றும் பழ வகைகள்.
இது தவிர, பூ மார்க்கெட் இங்கு பிரசித்தமானது என்றார், வழிக்காட்டி.வீடு, அலுவலகம் மற்றும் கடைகளில், பூ அலங்காரம் செய்வது இவர்களது வழக்கமாம்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், ஒரு தெரு முழுக்க, நாட்டு மருந்துக் கடைகள் தான்.
இங்குள்ள மக்கள், தங்களுக்கு ஏதாவது உடல்நல குறைவு ஏற்பட்டால், மருத்துவரை தேடி செல்ல மாட்டார்களாம். இந்த தெருவுக்கு வந்து, தேவையான நாட்டு மருந்துகளை வாங்கி, கஷாயம் வைத்து சாப்பிடுவார்களாம். எத்தகைய வியாதியும் பறந்தோடி விடுமாம்.
இந்த கூற்று உண்மை என்பது போல், அங்குள்ள மக்களை பார்க்கும்போது, ஆரோக்கியமாகவே காணப்பட்டனர்.
மொத்த மார்க்கெட்டை சுற்றி வர, அரை மணி நேரமே ஆனது. அடுத்து, வேறு எங்கோ அழைத்துப் போகப் போகிறார் என்று நினைத்தால், 'பொம்மலாட்ட ேஷாவுக்கு நேரமாயிற்று... நீங்கள், 'டயர்டா' வேறு இருக்கிறீர்கள்... தேநீர் அருந்தி விட்டு செல்லலாம்...' என்றார், வழிகாட்டி.
சிட்டி ரவுண்டு இவ்வளவு தானா என்று கேட்டதற்கு, 'இங்கு பார்த்தீர்களா எவ்வளவு வெளிநாட்டு டூரிஸ்ட்கள் ரிக் ஷாவில் சுற்றி வருகின்றனர். ஹனாய் நகரில், இதுதான் பெரிய ஈர்ப்பு...' என்றார் பெருமிதமாக!
'எங்க ஊருக்கு வந்து பார்த்தால் தானே தெரியும். துணிக் கடைகளுக்காகவே, தி.நகர், பர்னிச்சர்களுக்காக, ராயப்பேட்டை, கையேந்தி பவன்களுக்கு, வடசென்னை, மீன் மார்க்கெட்டுக்கு, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ஜாம்பஜார், நாட்டு மருந்துகளுக்கு, மயிலாப்பூர், ஹோல்சேல் கடைகளுக்கு, பாரீஸ் கார்னர் என்று ஒவ்வொன்றுக்கும் பல ஏக்கர்களுக்கு வளைத்துப் போட்டுள்ளனர்...
வெறும் 2 கி.மீ., துாரத்திற்கு, சந்துக்கு ஒரு வகை பொருள் வீதம் பரப்பி வெச்சுகிட்டு, இதைப் பார்த்தால், வியட்நாமை பார்த்த மாதிரி என்ற தோரணையில், என்னா ஒரு, 'லுக்' வுடறா பாருப்பா...' என்று எங்களுக்குள் பேசியவாறு தேநீர் அருந்த சென்றோம்.
தேநீருக்காக மட்டுமே உள்ள பிரத்யேக சிறு ஓட்டலுக்கு சென்றோம். கிரீன் டீ, லெமன் டீ, மின்ட் டீ என ஏகப்பட்ட வகையில் தேநீர் தயாரித்து, வழங்குகின்றனர். அதேபோல், கோல்டு காபி, ஹாட் காபி, ப்ளாக் காபி என்று விதவிதமாக காபி தயாரிக்கின்றனர்.
பொதுவாகவே, வியட்நாம் மக்கள் காபி பிரியர்களாம். உலகிலேயே காபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர். ஆனால், காபியில், பாலுக்கு பதிலாக, க்ரீம் கலப்பதால், சிறு கசப்புடன் உள்ளது. மேலும், பெரிய பெரிய கோப்பையில், நான்கு பேர் பருகக்கூடிய அளவுக்கு காபியை தந்ததும், நம்மூரில், விரல் அளவு டம்ளரில் குடித்து பழகிய நாங்கள், திணறி விட்டோம்.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும், வகை வகையான, டீ மற்றும் காபி குடிக்க, இங்கு அலை மோதுகின்றனர்.
இந்த தேநீர் கடைக்கு மேல் தளத்தில் தான், தண்ணீர் பொம்மலாட்டம் நடக்கும் அரங்கம் உள்ளதாக கூறி, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, ஒரு மணி நேரம் நடக்கும் அந்நிகழ்ச்சியை கண்டுகளித்து வரும்படியும், அதுவரை, காரில் காத்திருப்பதாகவும் கூறி சென்றார், வழிகாட்டி.
சிட்டி ரவுண்டு மாதிரி, இதுவும் கண்கட்டி வித்தையா இருக்கப் போகுதுப்பா... எதற்கும் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து, அரங்கத்திற்குள் நுழைந்தோம்.
பொம்மலாட்ட ஷோவில் என்ன நடந்தது தெரியுமா?
இந்தியாவை போன்றே, வியட்நாமிலும் வெய்யில் அதிகமாக உள்ளது.தென்னை மரங்கள் ஏராளமாக வளர்கின்றன. ஒவ்வொரு தேங்காயும் ஒரு பலா பழத்தின் பாதி அளவுக்கு பெரிதாக இருக்கிறது. இளநீர் மிகவும் சுவையாக இருக்கிறது.
— தொடரும்
- ந. செல்வி
