PUBLISHED ON : செப் 16, 2018

கே.ஆர்., - பத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த, 'புதுமைபித்தன்!'
தான் சார்ந்த பத்திரிகைக்கு, வேலைக்கு வருபவர்களின், படிப்பு, ஊர், குடும்ப பின்னணி, எது எப்படி இருந்தாலும் கவலைப்படுவதில்லை. இப்பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்த பின், சிந்தனை, எழுத்து, பேச்சு எல்லாம், பத்திரிகையாளனாக தான் இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் கட்டமைப்புக்கு அடித்தளமாக, நான்காவது துாணாக இருக்கும் பத்திரிகை துறையில் பணிபுரிபவர்களுக்கு சில கடமையும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் உள்ளது, என்பார், கே.ஆர்., அதன் ஒரு பக்கம் தான், வெளிநாடு பயணமும்.
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்ற எண்ணம் நம்முள் ஆழ பதிய வேண்டும். அதே சமயம் மற்ற நாடுகளின் வளமும், வளர்ச்சியும் எப்படி இருக்கிறது, அது ஏன் நமக்கு சாத்தியமாகவில்லை என்ற கேள்வியும் எழ வேண்டும்.
அதற்காக அவர் ஏற்படுத்திய வழி தான், செய்தியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது.
அந்த வகையில், 'ராட்சசிகள்' என்று உடன் பணிபுரிபவர்களால் குறிப்பிடப்படும், கலா, பானுமதி, செல்வி மற்றும் கல்பலதா ஆகிய எங்கள் நால்வரையும், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு சென்று வரும் அரிய வாய்ப்பை அளித்தார், எங்கள், கே.ஆர்.,
கே.ஆர்., என்றும், 'பாஸ்' என்றும் அன்புடன் அழைக்கும் நாங்கள், அவருக்கு, மனம் நிறைந்த நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றினோமா என்று தெரியவில்லை. நீதிபதிகளாக இருக்கும் தினமலர் - வாரமலர் வாசகர்களாகிய நீங்கள் தான், அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்... செய்வீர்களா!
வேலைப் பளுவைக் குறைக்க, கே.ஆர்., பின்பற்றும் பாணி, 'ஜோக்' அடிப்பது. சிரிக்கச் சிரிக்க விஷயங்களை விளக்குவது!
அன்று... ஏப்ரல் மாதத்தில் ஒரு சனிக்கிழமை, தோழி பானுமதி, கே.ஆரை பார்க்க போனார். அப்போது, 'ஏ... ஆத்தா... ஆத்தோரமா வாரியா...' என்ற பாடலை, அவ்வப்போது முணுமுணுக்கும் வழக்கம் உள்ள, கே.ஆர்., 'அந்த ஆத்தாவை கூப்பிடு...' என்றழைத்தார், ஆபீஸ் பையன் சரவணனிடம்! அப்படிச் சொன்னால், அது எங்களுடன் பணிபுரியும், கோகிலா என்று அர்த்தம்; அந்தமான் டூருக்கு வந்தாங்களே அவங்க.
கோகிலா, கே.ஆர்., அறைக்குச் சென்றதும், 'அந்தமான் போன கும்பல்ல, மூணு பேரை, 'கழட்டி' விட்டுட்டு, மத்த நாலு பேரும் எங்கேயோ கிளம்புறாங்க... என்ன ஏதுன்னு விசாரி...' என, 'கொளுத்தி'ப் போட்டுட்டு, எதுவுமே நடக்காதது போல், அமைதியாகி விட்டார், கே.ஆர்.,
கோகிலா மனதில், 'திக்... திக்...!' யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. பானுமதியிடம் சென்று, 'என்ன பானு... எங்கேயோ போறதா, கே.ஆர்., சொல்றாரே...' எனக் கேட்க, 'அய்யய்யோ... சொல்லிட்டாரா... நீயும், உன் மகளும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாரே...' என்றதும், கோகிலா முகத்தில் ஈயாடவில்லை; காதிலிருந்து புகை கிளம்பியது!
'இல்லே கோகி... வருத்தப்படாதே... உன் மகளுக்கு, +2 ரிசல்ட், காலேஜ் அட்மிஷன்னு, நீ, 'டென்ஷன்'ல இருப்பே... அந்த பரபரப்பு முடியட்டும்'னு சொல்லிட்டு, 'வாரமலர் செக் ஷன், லட்சுமியும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்...' என்றதும், கோகிலா, சமாதானமாகி விட்டார்.
'எங்கே போறீங்க பானு...' என, கோகிலா கேட்க, 'வெயிட்... இன்னும் செல்வி, கல்பாகிட்டே பேசலை... பேசிட்டு சொல்றேன்...' என்று கூறிட, கோகிலாவுக்கு மீண்டும், காதில் புகை. 'இது, கல்லுளிமங்கி... இதுகிட்டே கேட்டா வேலைக்காகாது... கத்திரிக்காய் விளைஞ்சா சந்தைக்கு வரப் போகுது...' என்றபடி, நகர்ந்து விட்டார்.
அன்றிரவு, பானுமதியிடமிருந்து எனக்கு போன்... உடனே, 'பட்'டென எடுத்தேன். 'செல்வி... காலு தரையில நிக்க மாட்டேங்குது... அடுத்த, 'டூர்' போகச் சொல்லி இருக்கார், கே.ஆர்., 'சவுத் ஈஸ்ட் ஏஷியா' போங்கன்னு சொல்லியிருக்கார்... எங்கே போலாம்ன்னு, 'பிளான்' பண்ணி, திங்கட்கிழமைக்குள் தேதி சொல்லணும்...' என்றார்.
உடனே, என் மனதில், 'தாய்லாந்து, கம்போடியா' வந்து சென்றது. சொல்லி விட்டேன். அடுத்து, கல்பாவிடமும் பேசினோம். கலாதான், 'டூர்' ஏற்பாட்டாளர். கே.ஆர்., சொன்னவுடனேயே, கலாவுக்கும் விஷயம் தெரியும் என்பதால், 'அவோசெட்' என்ற டிராவல் ஏஜென்சி நடத்தும் தேவகியை தொடர்பு கொண்டு, 'வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து' என, 'டூர் ரூட்' போட்டு விட்டார்; செலவு பட்டியலும் தயார்.
திங்கட்கிழமை காலை, நால்வரும், கே.ஆர்., இடம் சென்று, இன்னின்னநாடு என்று சொன்னதும், வேறு எதுவும் கேட்காமல், 'செலவு எவ்ளோன்னு எழுதிக் கொடுங்க; கையெழுத்து போட்டுத் தரேன்...' என்றார். எங்களுக்கு மூச்சே நின்று போனது. 'பட்ஜெட் இவ்ளோ தான்... இந்தந்த ஊருக்குப் போனால் போதும்... என்று சொல்வாருன்னு நினைச்சா, இப்படி சொல்லி, திக்கு முக்காட வச்சிட்டாரே...' என, குதுாகலித்தோம்.
உடனே, 'ஆத்தா'வையும் கூப்பிட்டு, 'இங்கிங்கே போறோம்' என, சொல்லி விட்டோம். கே.ஆருக்கு ஒரு வழக்கம் உண்டு. சில விஷயங்கள் வெளியில் தெரிந்தால், காதில், 'புகை' கிளம்பும் எனக் கருதி விட்டால், அதை, மறக்காமல், உடன் பணிபுரிவோரை தவறாமல் அழைத்து, தகவலைச் சொல்லி விடுவார். எப்படியெல்லாம் புகைச்சல் கிளம்புகிறது என்பதை அறிய அவருக்கு அவ்வளவு ஆவல். அது போலவே, இதையும் செய்து விட்டார்.
'எங்களை எங்கேயும் அனுப்பறதில்லே நீங்க...' என, ஒன்றிரண்டு பேர் மல்லுக்கு நிற்க, அதை ரசித்தபடியே, எப்படி சமாளித்தார் தெரியுமா...
— தொடரும்
ந. செல்வி
