தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.சி.பி.எச்., வெளியீடு, ஜி.ஆளவந்தார் எழுதிய, 'திப்பு சுல்தான்' நுாலிலிருந்து: மைசூரை அடுத்த மேல் கோட்டையில் உள்ள நாராயணசாமி கோவில், ராமானுஜர் காலத்தை சேர்ந்தது.

பல வைணவ கோவில்களில் காணப்படுவதை போல, அங்கேயும் வடகலையினருக்கும், தென் கலையினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

திப்புவின் ஒற்றர் படை தலைவனாக இருந்த, ஆஞ்சி சாமய்யா எனும் சாமா அய்யங்கார், தம் செல்வாக்கை பயன்படுத்தி, தாம் சார்ந்திருக்கும் பிரிவுக்கு ஏற்றம் தரும் வகையில், கோவில் சடங்குகளை நடத்த முற்பட்டதால், தகராறு ஏற்பட்டது.

தகராறின் மூல காரணத்தை அறிந்த திப்பு சுல்தான், தவறை திருத்தும் வரையில், சாமா அய்யங்காரின் தலையீட்டிற்கு முன் நிலவிய மரபுப்படியே கோவில் சடங்குகள் நடந்து வர உத்தரவிட்டார்.

'அறிந்து கொள்வோமே!' என்ற நுாலிலிருந்து: பத்திரிகை தொழிலில் சிறப்பாக பணியாற்றிய சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும், 'புலிட்சர்' பரிசு வழங்கப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் பரிசு இது. இந்த பரிசை ஏற்படுத்தியவர், ஐரோப்பிய கண்டத்தின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, ஜோசப் புலிட்சர்!

கடந்த, 1864ல், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனுக்கு வந்த, 17 வயது இளைஞரான ஜோசப் புலிட்சர், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர முயன்றார். அதற்கு ஏற்ற உடற்கட்டும், பார்வைத் திறனும் இல்லாததால், முதலில் நிராகரிக்கப்பட்டார். பின், அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய, ஏஜன்டின், சிபாரிசால், ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவ சேவையில் ஈடுபட்ட பின், அமெரிக்காவின், மிசோரி - இல்லினாய்ஸ் மாநிலங்களுக்கு இடையேயுள்ள செயின்ட் லுாயிக்கு சென்று, சாதாரண வேலைகளை செய்து பிழைத்தார்.

மூன்று ஆண்டுக்கு பின், ஜெர்மானிய பத்திரிகை ஒன்றின் நிருபராக சேர்ந்தார். தன், 24வது வயதில் அப்பத்திரிகையின் உரிமையாளர்களில் ஒருவராகிவிட்டார்.

அத்துடன், நஷ்டத்தில் நின்றுவிடும் தருவாயில் இருந்த வேறொரு பத்திரிகையை குறைந்த விலைக்கு வாங்கி, அதை, தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு விற்று, அதன்மூலம், நிறைய சம்பாதித்தார்.

பின், அவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. சரியாக நடத்தப்படாமல் இருந்த இரு ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கி, இரண்டையும் ஒன்றாக இணைத்து, 'செயின்ட் லுாயி போஸ்ட் டெஸ்பாட்ச்' என்ற சக்தி மிகுந்த பத்திரிகையை உருவாக்கினார்.

நாளடைவில், தன், 'நியூயார்க் வேர்ல்ட்' என்ற பத்திரிகையின் மூலம், அரசியல் செல்வாக்கை பெற்றார். 40 வயது நிரம்புவதற்குள், அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அப்போது அவர், பார்வையை முற்றிலுமாக இழந்திருந்தார்.

பார்வை இழந்த நிலையிலும், சில அறிவாளிகளின் துணையோடு, தன் பணியை சிறப்பாக செய்தார். அவர் உண்டாக்கிய அறக்கட்டளை மூலம் தான், ஆண்டுதோறும், 'புலிட்சர் பரிசு' வழங்கப்படுகிறது.

'இன்னிசை மன்னர்கள்!' என்ற நுாலிலிருந்து: நாதஸ்வர மேதை, டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் இசை நிகழ்ச்சி ஒன்று, சென்னை வானொலியில் ஒலிபரப்பாக இருந்தது.

குறிப்பிட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் வந்து சேரவில்லை. சினிமா ஸ்டுடியோவில் அவருக்கு படப்பிடிப்பு இருந்தது.

அப்போது அவர், காளமேகம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். வானொலி நிலைய அதிகாரிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.

அந்நேரம் நிலையத்தின் முன், வேகமாக கார் ஒன்று வந்தது. அதிலிருந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்து இறங்கி, நிலையத்துக்குள் புகுந்தார், ராஜரத்தினம் பிள்ளை. எப்படி என்று நினைக்கிறீர்கள்... கவி காளமேகம் வேடம் புனைந்த ஒப்பனையுடன்!

வேடத்தை கலைக்க ஆரம்பித்தால், நேரமாகி விடுமே என்று, அப்படியே வந்து விட்டார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us