
கே.ஆர்., அனுப்பிய, 'வாட்ஸ் - ஆப்'பில் என்ன இருந்தது என்றால், 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...' என்ற, அக்னி நட்சத்திரம் படத்தில் வரும், பிரபலமான டயலாக்கின் பின்னணியில், வெள்ளைக்காரர் ஒருவர், நடுத் தெருவில், மழையில் நனைந்தபடி ஆடிப்பாடி, விழுந்து எழுந்து குத்தாட்டம் போடும் காட்சி ஓடியது.
கூடவே, 'உங்க கணவன்மார்களும் இப்படித்தான், இங்கு, சந்தோஷமாக இருக்கின்றனர்...' என்று, 'கமென்ட்' கொடுத்திருந்தார்.
அந்த வீடியோ, 'க்ளிப்பிங்'கை, தத்தமது கணவருக்கு அனுப்ப, அவர்கள் உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியே, 'உன்னை விட்டு பிரிந்திருப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா...' என்று நீலிக் கண்ணீர் வடித்திருப்பர் என்பது, வேறு விஷயம்.
மறுநாள், காலை, 8:00 மணி.
கம்போடியாவுக்கு வரவேண்டும் என்ற பல ஆண்டு கனவை நிறைவேற்றிய, எங்கள், கே.ஆருக்கு நன்றி கூறி, ஓட்டல் ரிசப்ஷனில் இருந்த விஷ்ணு சிலை மற்றும் அம்சபட்சியின் முன், நாங்கள் நால்வரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்படத்தை, கே.ஆருக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பிவிட்டு, கம்போடியாவின் புகழ்பெற்ற, அங்கோர்வாட் கோவிலை பார்க்க கிளம்பினோம்.
அங்கோர்வாட் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.
இன்றைய கம்போடியாவின் ஆதி கால பெயர், 'கம்பூச்சியா!' இது, சமஸ்கிருத பெயராம்.
இந்திய கலாசாரம் மற்றும் கலைகளின் தாக்கம் அங்கு அதிகம் காணப்படுவதற்கு, ஒரு காலத்தில், கம்பூச்சியாவுக்கும், பாரதத்திற்கும் இடையே நடந்த கடல் வணிகமும் காரணம். இது தவிர, கர்ண பரம்பரை கதைகளும் கூறப்படுகின்றன.
ஒன்பதாம் நுாற்றாண்டு முதல், 15ம் நுாற்றாண்டு வரை, கம்போடியாவில் ஆட்சி புரிந்த, 'கெமர்' சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியதாம், அங்கோர்.
சின்ன சின்னதாக சிதறிக் கிடந்த பகுதிகளையும், அதை ஆண்ட சிற்றரசர்களையும் வென்று, கெமர் சாம்ராஜ்யத்தை, கி.பி., 802ல் ஒன்றிணைத்து, 'விஷ்ணுவின் வழித்தோன்றல்...' என்று அழைத்துக் கொண்டாராம், இந்து அரசனான இரண்டாம் ஜெயவர்மன்.
கி.பி., 889ல், அவர் வம்சத்தில் வந்த யசோ வர்மன், அரியணை ஏறினார். இவர்களது வம்சத்தினரே, 300 ஆண்டுகள், கெமர் சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வந்துள்ளனர். இவர்கள் காலத்தில்தான், அங்கோர்வாட் கோவில்களும், வானுயர்ந்த கோபுரங்களும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டதாம்.
நுாற்றுக்கணக்கான கோவில்கள் நிர்மாணிக்கப் பட்டாலும், தற்சமயம், 72 கோவில்கள் மட்டுமே ஓரளவுக்கு சிதிலமடையாமல், உலக பாரம்பரிய குழுவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அங்கோர்வாட் பகுதிக்குள், எங்கள் வேன் நுழைந்தது. விசாலமான சாலைகள், சாலை ஓரங்களில் மரங்கள் ஏராளமாக வளர்ந்து, பசுமையாக காட்சியளித்தது. இங்கு, ஆண்டுதோறும், 20 லட்சம் சுற்றுலா பயணியர் வருகின்றனராம். நாங்கள் போனபோது, ஒரு பஸ் நிறைய, சேலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியர் வந்து இறங்கினர். அதில், பெரும்பாலானோர், வேட்டி, சட்டையில் இருந்ததோடு, தமிழில் பேசி, நம்மூர் சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
கம்போடியாவின் மிக முக்கிய வருவாய், அங்கோர்வாட் கோவில் மூலமாகவே கிடைப்பதால், தங்கள் நாட்டு கொடியின் மத்தியில், இக்கோவில் படத்தை பொறித்துள்ளனர்.
அனுமதி சீட்டு வாங்கி வந்த வழிகாட்டி, எங்களை கோவில் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறிது துாரம் வரை தான் வாகனத்தில் செல்லலாம். அதன்பின், நடந்து தான் செல்ல வேண்டும். வெயில் சுட்டெரித்தது.
தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி அணிந்தபடி, பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான, 'ஹிப்பாப் ஆதி' எழுதிய, 'ஆளுறான்டா தமிழன்...' என்ற பாடலை முணுமுணுத்தபடி, வழிகாட்டியுடன் சென்றோம்.
ஏழாம் ஜெயவர்மன் கட்டிய, பேயன் கோவிலையும், அங்கோர்வாட் கோவிலையும், யானையின் முற்றத்தையும் பார்த்து ரசித்தோம்.
இதை பார்த்து முடிக்கவே, மதியம் ஆகிவிட, 'சாப்பிட்ட பின், பிரதான கோவிலுக்கு செல்லலாம்' என்று கூறிய வழிகாட்டி, உணவு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு, கம்போடிய உணவை ருசி பார்த்தோம். 'மார்னிங் குளோரி' என்ற புல் போன்ற கீரை, 'பேபி கார்ன்' மற்றும் டோபூ - சோயா பனீர் கலந்த சாலட்டை, 'ஸ்டிக்கி ரைஸ்' உடன் சாப்பிட்டு, கிளம்பினோம்.
அங்கோர்வாட் பிரதான கோவிலை சுற்றி, அகழி உள்ளது. அகழி மீது, ஜப்பான் நாட்டினர் அமைத்திருந்த ரப்பர் பாலத்தில் நடந்து, அங்கோர்வாட் கோவில் வாசலை அடைந்தோம்.
பிரதான நுழைவு வாயிலை ஒட்டி அமைந்திருந்த பெரிய மரப்படியில் ஏறி சென்றால், 10 அடி உயரத்தில், கம்பீரமாக நிற்கிறார், எட்டு கை விஷ்ணு. தற்சமயம், புத்தராக கருதி, இவரை வழிபடுகின்றனர், அங்குள்ளோர். விஷ்ணுவும், புத்தர் போன்ற அலங்காரத்தில் நின்றிருந்தது வேடிக்கையாக இருந்தது.
கோவிலை கட்டிய சிற்பிகள், மிகப்பெரிய கலா ரசிகர்களாக இருந்திருப்பர். திரும்பிய பக்கம் எல்லாம், 'அப்சரஸ்'களின் உருவங்கள் தான்.
மகாபாரத போர் காட்சி, பாற்கடல் கடையும் காட்சி, அரசனின் வெற்றி ஊர்வலம் என்று, பல வகையான கல் சிற்பங்களை, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காண முடிகிறது.
இவ்வளவு பிரமாண்டமான கோவிலை கட்ட, எவ்வளவு பேர், எத்தனை காலம் உழைத்திருக்க வேண்டும்!
அக்கால அரசர்களுக்கு தான் எவ்வளவு தீர்க்க தரிசனம். தாம் இறந்தாலும், தங்களது வரலாறு, பராக்கிரமம் மற்றும் வெற்றிகளும், உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்க வேண்டும் என்பதற்காகவே, கல்லில் சிற்பங்களை செதுக்கி, அழியா பொக்கிஷமாக வைத்துள்ளனர் என்று பேசியபடியே, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ரசித்து பார்த்தோம்.
கோவில், பல தளங்களை கொண்டிருப்பதால், செங்குத்தான படிகளில் ஏறி பார்க்க வேண்டும். ஏற முடியாமல் பின் தங்கி விட்டனர், பானுமதியும், கல்பலதாவும்.
நானும், கலாவும், கிட்டத்தட்ட, 400 படிகள் ஏறி, எல்லாவற்றையும் பார்த்து புகைப்படங்களை எடுத்து திரும்பினோம்.
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய இடம் அங்கோர்வாட். 'மிஸ்' செய்யவே வேண்டாம்.
நடந்து நடந்து களைத்து போனாலும், மனதிற்குள், அங்கோர்வாட் பார்த்த திருப்தி ஏற்பட்டது.
அங்கிருந்த கடைகளில் யானை சிலைகளும், 'அப்சரஸ்' சிலை மற்றும் அங்கோர்வாட் கோவிலின், 'மினியேச்சர் மாடல்'களும் கண்ணை பறித்தன. விலையை கேட்டதும், மயக்கமே வந்துவிட்டது. கம்போடியா பணமான, 'ரீல்' இருந்தாலும், அமெரிக்க டாலர் தான் புழக்கத்தில் இருக்கிறது.
அன்று இரவு, சாப்பிடுவதற்காக அருகிலிருந்த, இந்திய உணவு விடுதிக்கு சென்றோம். கம்போடியா பெண் ஒருவர், நம்மூர் பாணியில் புடவை உடுத்தி, 'நமஸ்தே' என்றபடி எங்களை வரவேற்றார்.
உள்ளே சென்று, நம்மூர் சாப்பாட்டுக்கு, 'ஆர்டர்' செய்து காத்திருந்தபோது, துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மிக குழுவினர், இரவு உணவு சாப்பிட, அந்த ஓட்டலுக்கு வந்தனர்.
அதில், ஒரு தம்பதியர் எங்கள் அருகில் அமர்ந்து, தமிழில் பேச ஆரம்பித்தனர். ஊட்டியை சேர்ந்த அவர்கள், 'தினமலர்' வாசகர்கள் என்று கூறி, எங்களை பற்றி விசாரித்தனர். 'அதே, 'தினமலர்' நாளிதழில் பணிபுரிகிறோம்' என்றதும், 'தினமலர்' இதழைதான் நீண்ட காலமாக படித்து வருவதாக சிலாகித்து கூறினர்.
சாப்பிட்டு முடித்து, வெளியில் வந்ததும், கம்போடியாவில், 'பவர் பிளான்ட்' நிறுவனத்தில் பணிபுரியும், தமிழகத்தை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தித்தோம். ஒருவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்; மற்றொருவர், பண்ருட்டியை சொந்த ஊராக கொண்டவர். நான்கு பெண்கள் மட்டும், சுற்றுலா வந்த தைரியத்தை, கடலுாரை சேர்ந்த இளைஞர் பாராட்டியதுடன், அவர் மனைவியிடமும், இதேபோல் தைரியசாலியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பல இனிய சந்திப்புகள் மற்றும் அங்கோர்வாட் கோவிலை பார்த்த சந்தோஷத்துடன், மறுநாள் காலை, 7:00 மணியளவில், கம்போடியாவிலிருந்து பிரியாவிடை பெற்று, தாய்லாந்து நாட்டுக்கு கிளம்பினோம்.
— தொடரும்.
இந்த பயணத்துக்கான ஆரம்பப் புள்ளி வைத்ததிலிருந்து, கட்டுரை எழுத ஆரம்பித்தது வரை, கை கொடுத்தவர், பானுமதி.
அடுத்து, வேளா வேளைக்கு சாப்பிட வற்புறுத்தியதோடு, புழு, பூச்சி போன்ற ஜந்துகள் ஏதாவது கலந்துள்ளதா என்று விசாரித்தறிந்து, அக்கறையோடு எங்களை சாப்பிட வைத்த, கல்பலதா.
மூன்றாவதாக, 'டூர்' ஏற்பாட்டாளரும், பயணத்தின்போது, இடையிடையே கொறிக்க நொறுக்குத் தீனி, இளநீர் மற்றும் பழங்கள் வாங்கிக் கொடுத்து, களைப்பு ஏற்படாமல், உற்சாகமாக வைத்திருந்த, கலா.
நான்காவதாக நான், 'நீ எந்த பொறுப்பும் ஏற்க வேண்டாம். கண்ணையும், காதையும் தீட்டி வைத்திருந்தால் போதும்...' என்று கூறி, எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த எங்களது அணி, எப்போதுமே இணைப்பிரியா நால்வர் கூட்டணி.
இந்த நான்கு, 'சொர்ணாக்கா'க்களை கட்டி மேய்க்கும், கே.ஆர்., படத்தை வெளியிட அனுமதியில்லை, சாரி...
- ந.செல்வி

