
தன் பேரக் குழந்தைகள், சொத்துக்காக வழக்கு தொடுத்து, ஒருவருக்கொருவர் சண்டையிட்ட விபரம் தெரிந்ததும், இன்னும் நொறுங்கி போனார், மனோரமா. அவரது கடைசி காலம், மிகவும் துன்ப மயமானதாகவே மாறி விட்டது.
காலத்தின் கட்டாயம், அவரை முதுமைக்குள் தள்ளியது; உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இறந்து போனதாக, வதந்திகள் வெளியாயின.
'என்னை கொன்று பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தம் போலிருக்கு. அப்படியாவது அவர்கள் சந்தோஷப்பட்டால், அதுவும் எனக்கு சம்மதமே...' என்றார்.
'இனி எழுந்து வரமாட்டார்' என்று, இவரை கிண்டல் செய்தவர்களே, வியக்கும் விதமாக, மரணத்தை பலமுறை வெற்றி கொண்டார், மனோரமா.
அவர் மரணமடைவதற்கு ஒரு வாரம் முன், பத்திரிகையாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில், உற்சாகமாக கலந்து கொண்டார். அக்., 2, 2015ல், சென்னை, தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கத்தில், தமிழ் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின், முப்பெரும் விழா நடந்தது.
அந்த விழாவில் மனோரமா, தன் உயிர் இந்த மேடையிலேயே பிரிந்தாலும் மகிழ்ச்சியடைவதாக உணர்ச்சிவசப்பட்டு கூறினார். அப்போது, கருணாநிதி, 70 ஆண்டுக்கு முன், 1945ல் எழுதிய, 'குடிசைதான் ஒருபுறத்தில்...' என்று துவங்கும் கவிதையை ஏற்ற இறக்கங்களுடன், குறிப்புகள் எதுவுமில்லாமல் பேசிக் காட்டினார். குறைந்தபட்சம், 5 - 6 பக்கங்கள் வரை நீளும், நற்றமிழ் வசனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஒரு திரைப்படத்தில் மனோரமா, சென்னை பாஷையில் பேசிய, வசனத்தையும் சிறிதும் பிசகாமல் பேசி முடித்தார். இதைக் கேட்டு அரங்கத்திலிருந்த ரசிகர்கள், எழுந்து நின்று, கை தட்டி பாராட்டினர்.
மேடையில் வீற்றிருந்த நடிகர் கமல்ஹாசனை, 'என் மகன்' என்று பாசத்தோடு அழைத்தும், நடிகர் சிவகுமாரை, 'என் தம்பி' என்று கூறியும், கூட்டத்தினரை நெகிழ வைத்தார். இதுவே, மனோரமா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது.
மனதில் கவலை புகுந்து கலவரப்படுத்தினால், தாயின் புகைப்படத்தின் முன் அமர்ந்து, அப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். மானசீகமாக தாயும் பேசுவாராம்; அவரது கவலைகள் அனைத்தும் காற்றாய் பறந்து விடுமாம்.
அப்படிதான், மரணத்திற்கு முதல் நாள் இரவு, தாயின் படத்தை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், நெஞ்சோடு அணைத்துக் கொண்டாராம். அப்போது, அவரது விழிகளிலிருந்து குற்றால அருவியாக கண்ணீர் கொட்டியதாம்.
அக்., 10, 2015, சனிக்கிழமை அன்று, பகல் முழுவதும் நன்றாகவே இருந்துள்ளார். இரவு, அவரது தாயை வணங்கி, படுக்கைக்கு சென்றுள்ளார்; திடீரென்று மூச்சுத் திணறல்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த வலியிலும் அவரது முகத்தில் மரண பயம் சிறிதும் இல்லை. புன்னகை தவழ்ந்த முகத்துடனேயே காணப்பட்டார்.
மருத்துவமனைக்கு சென்ற மனோரமா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
திரையில் நவரசம் காட்டி, 'பெண் சிவாஜி' என்று பலராலும் அழைக்கப்பட்ட, மனோரமா மரணமடைந்த செய்தி, காட்டுத் தீயாக பரவியது. கண்ணீர் மல்க ஆயிரக்கணக்கான ரசிகர்களும், வி.ஐ.பி.,களும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவரது வீட்டிற்கு அருகிலேயே, கண்ணம்மாபேட்டை மயானம் இருக்கிறது. எனினும், 'என் உடலை, மின் மயானத்தில் எரிக்க கூடாது; பழைய சம்பிரதாயப்படி விறகுகளால் தான் எரிக்க வேண்டும்' என்ற மனோரமாவின் விருப்பத்தை நிறைவேற்ற, சென்னை, மயிலாப்பூரில் உள்ள மயானத்தில், அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன.
மனோரமாவின் உயிரும், உடலும் மறைந்து போனாலும், இன்றும், தமிழர்கள் மனதில், அவர் வாழ்ந்து வருகிறார்.
ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரிய மனோரமா, 60 ஆண்டுகளாக, திரைத் துறையில் பணியாற்றிய மிகப்பெரிய ஜாம்பவான். மிக அதிகமான படங்களில் நடித்ததற்காக, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, உயர்ந்தவர்.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என, ஆறு மொழி படங்களில் நடித்த சிறப்பு, இவருக்கு உண்டு. புதிய பாதை என்ற படத்தில், மிகச் சிறப்பாக நடித்ததற்காக, 1989ல், 'சிறந்த துணை நடிகை' என்னும் தேசிய விருதைப் பெற்றார். மத்திய அரசின் உயரிய விருதான, 'பத்மஸ்ரீ' விருதை, 2002ல் பெற்ற சிறப்புக்குரியவர்.
தமிழக அரசின், 'கலைமாமணி' விருது, கலிபோர்னியா பல்கலை கழகத்தின், 'டாக்டர்' பட்டம் போன்ற சிறப்புகளும் இவருக்கு உண்டு.
மேலும், மலேஷிய அரசிடமிருந்து, 'டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி' விருது, கேரள அரசின், 'கலா சாகர்' விருது, 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது, சிறந்த குணசித்திர நடிகைக்கான, 'அண்ணா' விருது, என்.எஸ்.கே., விருது, எம்.ஜி.ஆர்., விருது, ஜெயலலிதா விருது மற்றும் பலமுறை பிலிம்பேர் விருதுகள் என, ஏராளமான விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மனோரமா நடித்த படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம், நடிகன். இதில், 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இவர் கடைசியாக நடித்த படம், பொன்னர் சங்கர். மனோரமா முத்திரை பதித்த படங்களான, தில்லானா மோகனாம்பாள், அனுபவி ராஜா அனுபவி, சம்சாரம் அது மின்சாரம், சின்னக்கவுண்டர், நடிகன், சின்னத்தம்பி மற்றும் கிழக்கு வாசல் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு சொல்லலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, 'அண்ணே' என்று தான் அழைப்பார். மனோரமாவின் தாய் இறந்த, 16வது நாள் சடங்குகளை, உடன்பிறவா சகோதரனாக உடனிருந்து செய்தவர், சிவாஜி. படப்பிடிப்பு உட்பட, அவர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும், குறிப்பிட்ட நேரத்தில் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார், மனோரமா.
மூன்றாவது வரை மட்டுமே படித்தவர் என்றாலும், வார பத்திரிகைகளை படிப்பதில் ஆர்வம் உள்ளவர். பட்டுப் புடவை, நெற்றியில் மணக்கும் விபூதி, பெரிய பொட்டுடன் எப்போதும் மங்களகரமாகவே காட்சியளிப்பார். கடவுள் பக்தி அதிகம். தீவிர முருக பக்தர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில், அசைவம் கிடையாது.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரிடமும் ஒரே விதமாக அன்பு பாராட்டி, நட்புடன் இருந்தவர். வெள்ளித் திரை மட்டுமல்லாமல், சின்ன திரையிலும் வலம் வந்து பாராட்டை பெற்றவர்.
தொலைபேசியில் பேசுகிறபோது, 'வணக்கம்! மனோரமா தான் பேசறேன். பேசலாமா...' என்று அனுமதி வாங்கி பேசும், நாகரிகம் அவரிடம் இருந்தது. இத்தனை சாதனை மிக்க ஒரு அசாதாரண நடிகை, இன்னும் தமிழ் நெஞ்சங்களில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
- முற்றும்
நன்றி: சங்கர் பதிப்பகம்சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்

