
அன்புள்ள அம்மா —
நான், 36 வயது பெண். படிப்பு: பிளஸ் 2, தாய் மாமனை துரத்தி துரத்தி காதலித்து, திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானேன். விஷயம் அறிந்த பெற்றோர், உடனடியாக எங்களது திருமணத்தை நடத்தி வைத்தனர். இப்போது, 12 மற்றும் 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர். என் கணவர் வயது: 40. மளிகை கடை வைத்துள்ளார்.
சிறு வயதில், எனக்கு இதய வால்வில் பிரச்னை இருந்து, மாத்திரை சாப்பிட்டு குணமானது. பல ஆண்டுக்கு பின், இப்போது மீண்டும் இதய நோய்க்கான அறிகுறி தென்படுகிறது. சிகிச்சை பெற்று வருகிறேன்.
இந்த விஷயத்தை மறைத்து, திருமணம் செய்து வைத்ததாக, குறை கூறி, என்னுடன் பேசுவதை தவிர்க்கிறார், கணவர். மது பழக்கத்துக்கு அடிமையாகி, தொழிலை சரியாக கவனிப்பதில்லை.
என்னையும், பெற்றோரையும் கேவலமாக பேசி, அசிங்கப்படுத்தி வருகிறார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.
நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
திருமணத்திற்கு முன், உன்னை துரத்தி துரத்தி கர்ப்பமாக்க, தாய் மாமனுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், உன் இதய வால்வு நோய் பற்றி அறியாதது, ஆச்சரியமாக உள்ளது. தாம்பத்ய சுகம் தர மட்டும் தானா மனைவி. உடல் சுகவீனப்பட்டால், தேவையான மருத்துவத்தை அளித்து, ஆறுதல் தேறுதல் கூறி அவளை குணப்படுத்துவதுதானே, நல்ல கணவரின் கடமை.
திருமணத்திற்கு பின், கணவர் சுகவீனப்பட்டால், நகை, வீடு மற்றும் சேமிப்பு எல்லாவற்றையும் இழந்தாவது காப்பாற்ற பார்ப்பாள், ஒரு சராசரி மனைவி. நோய்வாய்பட்ட மனைவியரை பாராட்டி, சீராட்டி, குளிக்க வைத்து, சிறுநீர், மலம் அகற்றி சேவகம் செய்யும் எத்தனையோ நல்ல கணவர்கள், இருக்கவே செய்கின்றனர். ஆனால், உன் கணவர், சுயநலமானவர்.
'சிறு வயதில் வந்த இதய வால்வு நோய் குணமானதால், மீண்டும் வராது என நம்பியிருந்தோம். ஆனால், என்ன செய்ய... மீண்டும் வந்து விட்டது. உங்களின் உடன் பிறந்த அக்காதானே உங்கள் மாமியார்... அவர், உங்களை ஏமாற்றுவாரா... என்னை, நீங்கள் மணம் செய்திருக்கா விட்டாலும், நான், உங்கள் அக்காள் மகள் தானே...
'திருமண உறவை தாண்டிய ரத்த பந்த சொந்தமாச்சே... என் மீது உங்களுக்கு விசேஷ அன்பு இல்லையா... என் இதய நோயை காரணம் காட்டி, தாம்பத்யத்தில் ஏதாவது குறை வைத்தேனா... நமக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காவது பழி சுமத்தாமல் இருக்கலாமே...
'அக்காளையும், அக்காள் கணவரையும் ஏசுவது, மல்லாக்க படுத்து காறி துப்புவது போல. அதை, தயவு செய்து செய்யாதீர். பொதுவாக, குடி நோயாளிகள், குடிப்பதற்கு ஏதாவது ஒரு நொண்டி சாக்கு தேடுவர். அப்படி நீங்கள் சொல்லும் நொண்டி சாக்கே, இதய வால்வு நோயால் தான் குடிக்கிறேன் என்பது...
'ஆயுள் முழுக்க, நோய் தொற்று இல்லாமல், ஆணோ - பெண்ணோ வாழ்ந்துவிட முடியுமா! நான் உங்களை நேசிக்கிறேன்; நீங்களும் என்னை நேசிப்பீர்கள். உங்கள் நேசம், இதயத்தின் வெகு ஆழத்தே ஒளிந்திருக்கும். அதை வெளிக்கொணர்ந்து காட்டுங்கள்.
'ஏற்கனவே, 13 ஆண்டு தாம்பத்யம் செய்து விட்டோம். இறைவன் அருள் இருந்தால், இன்னும், 30 ஆண்டு கூட நம் தாம்பத்யம் தொடரும். குடிப்பழக்கத்தை படிப்படியாக குறையுங்கள். கடை வியாபாரத்தை சிறப்பாக கவனியுங்கள். மருத்துவ செலவுக்கு நீங்கள் காசு தர வேண்டாம். என் பெற்றோர் உதவுவர்...' என, சாந்தமாக பேசி, புரிய வை.
சமாதானம் பேசியும், உன் கணவர் புரிந்து கொள்ளவில்லை என்றால், சங்கடப்படாதே. கொஞ்ச நாள் விட்டுபிடி. அரசு மருத்துவமனையில், உன் நோய்க்கான மருந்து, இலவசமாய் கிடைக்கும் அல்லது சில தனியார் மருத்துவமனைகளில், ஏழை நோயாளிகளுக்கு, இலவசமாய் மருந்து தரும் திட்டம் வைத்திருப்பர். சிகிச்சை எடுத்துக் கொள். ஒழுகும் கூரை வீட்டில் இருப்பதை போல, சகித்து, கணவனின் ஏச்சு பேச்சுகளை காதில் போட்டுக் கொள்ளாமல், தாக்குப்பிடி.
பையன்களை நன்கு படிக்க வைத்து முன்னேற்று. அவர்கள், உன்னை தலையில் வைத்து தாங்குவர்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

