
பணம், படிப்பு,- பதவி என, அனைத்தும் இருந்தாலும், பொறுமை இல்லாவிட்டால், பலன் இல்லை; மிச்சம் மீதி இருக்கும் நிம்மதியும், அமைதியும் போய் விடும்.
முனிவர் ஒருவரிடம், ஆத்ம ஞானம் பெற, இளைஞர் ஒருவர் போனார். அவர் நன்கு படித்தவர்; பண்பாடும், ஆர்வமும் உள்ளவர் தான். இருந்தாலும், இளைஞர் போய் கேட்டவுடன், முனிவர் உடனே உபதேசிக்கவில்லை; இளைஞரிடம், 'அதோ... எதிரில் உள்ள ஆற்றில் நீராடி வா...' என்றார்.
இளைஞர் நகர்ந்ததும், ஆசிரமத்தை கூட்டி பெருக்கும் பெண் பணியாளரை அழைத்த முனிவர், 'நீராடி வரும்போது, அவன் மீது, துாசு படும்படியாக பெருக்கு...' என்றார்.
அதன்படியே பணியாளரும், இளைஞர் நீராடி வந்தவுடன், அவர் மீது துாசு படும்படியாக பெருக்கினார்.
துாசு பட்டதால், கோபத்தில் சீறிய இளைஞர், பணியாளரை அடிக்க போனார்; ஓடி விட்டார், அவர்.
இளைஞர் மறுபடியும் நீராடி, குருநாதரிடம் உபதேசம் பெற வந்தார்.
'உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அடுத்த ஆண்டு வா, உபதேசம் செய்கிறேன். அதுவரை, இறைவனை எண்ணி, ஜபம் செய்து வா...' என்று திருப்பி அனுப்பினார், குருநாதர்.
மறு ஆண்டும் வந்து, உபதேசம் செய்யும்படி வேண்டினார், இளைஞர்.
'போய் நீராடி வா...' என்றார், குருநாதர்.
இளைஞர் நீராட போனதும், பணியாளரை அழைத்த குருநாதர், 'இந்த முறை, விளக்குமாறு, அவன் காலில் படும்படியாக பெருக்கு...' என்றார்.
பணியாளரும் அவ்வாறே செய்தார். ஆனால், இந்த முறை, பணியாளரை அடிக்க முயற்சிக்கவில்லை, இளைஞர். முடிந்த வரை, வாயில் வந்ததை திட்டித் தீர்த்தார். அதன்பின், நதிக்கு சென்று, நீராடி வந்தார்.
இந்த முறையும் உபதேசிக்கவில்லை, குருநாதர்.
மாறாக, 'இன்னும் பக்குவம் வரவில்லை உனக்கு... ஒரு ஆண்டு கழித்து வா. அதுவரை, ராம நாம ஜபம் செய்து வா...' என்றார்.
அவரை வணங்கி சென்ற இளைஞர், அடுத்த ஆண்டும் வந்தார்; வழக்கமாக, நதியில் நீராட சென்றார்.
இந்த முறை, 'பெருக்கி வைத்திருக்கும் குப்பையை, இளைஞர் தலையில் கொட்டு...' என்று, பணியாளருக்கு உத்தரவிட்டார், குருநாதர்.
அதன்படியே, இளைஞர் தலை மீது, கூடையில் இருந்த குப்பை அனைத்தையும் கொட்டினார், பணியாளர்.
இந்த முறை, பணியாளரை ஒரு வார்த்தை கூட திட்டவில்லை, இளைஞர். பதிலுக்கு, அவரின் கால்களில் விழுந்து வணங்கினார். பணியாளருக்கு ஒன்றும் புரியவில்லை.
'அம்மா... எனக்கு குரு, நீங்கள் தான். உங்களுக்கு என் மீது அளவில்லாத கருணை உள்ளது. உங்களால் தான், என் ஆணவமும், கோபமும் நீங்கின...' என்று, கைகளை கூப்பியபடியே சொன்னார், இளைஞர்.
சற்று துாரத்தில் இருந்து, அதை பார்த்தபடி நின்றிருந்தார், குருநாதர்.
பணியாளரை வணங்கிய இளைஞர், மறுபடியும் நீராடி, குருநாதரை வணங்கினார்.
இளைஞரை நெஞ்சோடு தழுவிய குருநாதர், 'சீடனே... ஆத்மஞானம் பெற, உனக்குத் தகுதி வந்து விட்டது. உன்னை, சீடனாக ஏற்கிறேன். என்னோடு இங்கேயே இரு...' என்றார்.
சீடனான இளைஞர், மறுபடியும் குருநாதரை வணங்கினார்.
வினாடி நேர பொறுமையின்மை, பெரும் விபரீதங்களுக்கு வழிவகுத்து விடுகிறது. வினாடி நேர பொறுமை, நன்மைகள் பலவற்றையும் தேடி எடுத்து வந்து சேர்க்கும். பொறுமையாக இருப்போம்; பிரச்னைகளைத் தவிர்ப்போம்!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
எதெதற்கு எந்த கால் அடி...
படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, பூமி தேவியை வணங்கி, 'தாயே... உலகிற்கு தாயாகும் உன்னை மிதிப்பதை பொறுத்தருள வேண்டும்...' என, பிரார்த்தித்து, இடது காலை முதலில் பூமியில் வைக்க வேண்டும். இன்று, நாம் செய்யப்போகும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாவதற்காக, இடது காலை தான் முதலில் வைத்து எழுந்திருக்க வேண்டும். கோவில், மத குருக்கள், ஆசிரமம் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது, முதலில் வலது காலையே வைத்து செல்ல வேண்டும்.

