
விக்ரமிற்கு போட்டி யார் தெரியுமா?
சீயான் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், பாலா இயக்கியுள்ள, வர்மா படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு நடந்தபோது, பல அழுத்தமான காட்சிகளை, 'சிங்கிள் டேக்'கில், ஓ.கே., செய்தாராம் துருவ். இந்த தகவலை இயக்குனர் பாலா, 'சினிமாவில் எனக்கு போட்டி நான் தான் என்று சொன்னீர்களே. இப்போது, உங்களுக்கு போட்டி, வீட்டிற்குள்ளேயே மகன் ரூபத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது...' என்று, விக்ரமிடம் சொல்ல, ஆச்சர்யத்தில் அசந்து போயுள்ளார்.
- சினிமா பொன்னையா
'ஆக் ஷன்' படத்தில், சிவகார்த்திகேயன்!
படத்துக்கு படம் காதல், காமெடி கலந்த கதைகளில் நடித்தால், அடுத்த நிலைக்கு செல்ல முடியாது என்பதால், இனிமேல், 'ஆக் ஷன்' கலந்த கதைகளில் நடிப்பதென, முடிவெடுத்திருக்கிறார், சிவகார்த்திகேயன். அதோடு, தன் எல்லா படங்களிலுமே முன்வரிசை நாயகியர் தான் நடிக்க வேண்டும் என்பதிலும், உறுதியாக இருக்கும் அவர், தற்போது நடித்து வரும் படங்களில் நயன்தாரா, ர-குல் பிரீத் சிங் போன்ற நடிகையருடன், 'டூயட்' பாடி வருகிறார்.
— சி.பொ.,
சந்தானத்துக்கு ஜோடியாக, இந்தி நடிகை!
சந்தானம், காமெடியனாக இருந்து ஹீரோவானவர் என்பதால், அவருடன், 'டூயட்' பாட, கோலிவுட்டின் முன்னணி நடிகையர் மறுத்தனர். அதன் காரணமாக, தனக்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட்டில் இருந்து ஆஷ்னா சாவேரி, வைபவி சாண்டில்யா, அமைரா உட்பட, சில நடிகையரை இறக்குமதி செய்து வந்தார் சந்தானம். இந்நிலையில், தான் நடித்துள்ள, தில்லுக்குத்துட்டு - 2 படத்திற்கு, தாரா அலிசா பெர்ரி என்ற பாலிவுட் நடிகையை, தமிழுக்கு அழைத்து வந்திருக்கும் சந்தானம், அடுத்து நடிக்கும் படத்திற்கு, இந்தியில், முன்வரிசையில் இருக்கும் நடிகையை, தமிழுக்கு அழைத்து வர முயற்சித்து வருவதாக சொல்கிறார்.
- சி.பொ.,
சன்னிலியோனுக்கு சாதகமாக தீர்ப்பு!
வீரமாதேவி படத்தில், சன்னி லியோன் நாயகியாக நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது. அதாவது, 'வீரமாதேவி என்பவர், சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரனின் மனைவி. சிறந்த வீராங்கனையான அவருக்கு, கர்நாடகாவில் கோவில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வேடத்தில், ஆபாச நடிகையான சன்னிலியோன் நடிப்பதை தடை செய்ய வேண்டும்' என்று, நீதிமன்றத்தில் தடை கோரினர். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதியோ, 'நடிகையர் நடிக்கும் கதாபாத்திரத்துடன், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிடக்கூடாது...' என்று, மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
- சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* தல நடிகருடன் மட்டும், மீண்டும் படுகவர்ச்சியாக நடிக்கிறார், தாரா நடிகை. இதனால், அவரிடம் புதிதாக கதை சொல்பவர்கள், கவர்ச்சி காட்சிகளும் படத்தில் இருப்பதாக சொல்லி, அப்படி நடிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால், நடிகையோ, 'தல படத்துக்கு மட்டும் தான் இந்த சலுகை. மற்ற படங்களில் அப்படி நடிக்க மாட்டேன்...' என்று உறுதியாக மறுத்து வருகிறார்.
* 'ஏண்டி மாலா... எதிர் வீட்டில் இருக்கிற உன் தோழி திருமணத்துக்கு, அவங்க அம்மா வந்து பத்திரிகை வச்சாங்களே... அவ நேர்ல கூப்பிடல; அதனால, போக விரும்பல அப்படி இப்படின்னு நயன்தாரா மாதிரி தட்டிக் கழிக்கிற...' என்று கண்டித்தார், அம்மா.
*மனைவி மற்றும் மைத்துனி இயக்கிய படங்களில் நடித்தார், சுள்ளான் நடிகர், ஆனால், அந்த படங்கள் ஊத்திக் கொண்டன. அதையடுத்து, அவர்களை நம்பி படங்களை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனபோதும், மறுபடியும் மனைவி மற்றும் மைத்துனியை இயக்குனராக பார்க்க வேண்டும் என்பதற்காக, தன்னிடம், 'கால்ஷீட்' கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம், 'முதலில் இவர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுங்கள். அதன்பின், நான், உங்கள் படத்தில் நடிக்கிறேன்...' என்று கிடுக்கிப்பிடி, 'கண்டிஷன்' போடுகிறார், சுள்ளான்.
'நம்ம க்ரூப்ல இருந்து சேகரை கழட்டி விட்டுடணும்டா... கபடி போட்டிக்கு வர்றியான்னு கேட்டா... பெண்டாட்டிய கேட்டுட்டு தான் வருவேன்கறான்... பெரிய தனுஷ்ன்னு நினைப்புடா அவனுக்கு...' என்றான், நண்பன்.
சினி துளிகள்!
* பவர்பாண்டியை தொடர்ந்து, நான் ருத்ரன் என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ், படத்தின் ஹீரோவான, நாகார்ஜுனாவை 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த மனிதராக பக்காவாக மாற்றி, நடிக்க வைத்துள்ளார்.
* படப்பிடிப்பு இல்லை என்றால், காதலருடன் வெளிநாடுகளுக்கு, 'ஜாலி டூர்' செல்வதை வழக்கமாக்கி விட்டார், நயன்தாரா.
அவ்ளோதான்!

