தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மோய் பின் பை (11)

மோய் பின் பை (11)

மோய் பின் பை (11)


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்போடியா, 'சியாம் ரீப்' விமான நிலையத்திலிருந்து, 'தாய் ஸ்மைல்' ஏர்லைன்ஸ் விமானத்தில், ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து, காலை, 9:30 மணிக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர், பாங்காக் வந்தடைந்தோம்.

விமான நிலையத்தில், எங்களுக்கு வழிகாட்டியாய் வரவேண்டியவர் வராததால், கொஞ்சம், பதற்றம் ஆனோம். விமான நிலைய பெண் அதிகாரி, யாருக்கோ போன் செய்து, எங்களுக்கான வேனை ஏற்பாடு செய்து, வேன் வரை அழைத்து வந்து, வழியனுப்பி வைத்தார்.

அவருக்கு நன்றி கூறி, வேனில் ஏறி அமர்ந்தோம். 'வழிகாட்டி ஏன் வரவில்லை...' என்று ஓட்டுனரிடம் கேட்டதற்கு, அவர் தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும், எங்களை நேராக, பட்டாயா நகரத்துக்கு அழைத்து வரும்படியும் கூறிவிட்டார், என்றார்.

காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால், எங்காவது சாப்பிட்டு போகலாம் என்று கூறியதற்கு, பட்டாயா போகும் வழியில், 'ஸ்ரீரச்சா டைகர் ஜூ'வில் சாப்பிடலாம் என்று கூறி, வண்டியை கிளப்பினார்.

காலை, 11:00 மணியளவில், ஜூவை அடைந்தோம். உணவு விடுதிக்கு சென்றபோது, மதிய உணவு, 12:30 மணிக்கு தான் என்று கூறவே, அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக, வேடிக்கை பார்த்தோம். ஓட்டலை ஒட்டியபடி இருந்த, புலி குகையில், பெரிய பெரிய புலிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

உணவு தயாரானதும், மணியடித்து அழைத்தனர். 'பபே' முறையில், தேவையானதை எடுத்து சாப்பிட வேண்டியது தான். பூரி, ராஜ்மா குருமா, பருப்பு, சாதம், தயிர், வெஜிடபுள் சாலட், உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் பழ வகைகள் என, ஏகப்பட்டவை வரிசைகட்டி நின்றன.

கொலைப் பசியில் இருந்ததால், அத்தனையையும் ஒரு பிடி பிடித்தோம்.

பிறகு, ஜூவுக்குள் நடக்க ஆரம்பித்தோம். முதலில், விதவிதமான, 'பாராகீட்ஸ்' என்றழைக்கப்படும் பஞ்சவர்ண கிளிகளை பார்த்து வியந்தோம். அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள, கட்டணமாக, ஒருவருக்கு, தாய்லாந்து பணம், 500 பாட் - இந்திய பணம், 1,000 ரூபாய். கட்டணம் அதிகம் என்பதால், அங்கிருந்து அகன்றோம்.

அடுத்ததாக, புலிக்குட்டியுடன் புகைப்படம் எடுக்க, 200 பாட் என்ற அறிவிப்பு பலகையை பார்த்ததும் நின்று விட்டோம். 200 பாட் - இந்திய பணம், 400 ரூபாய் தான்... எனவே, அதைக் கொடுத்து, நாங்கள் நால்வரும் புலிக்குட்டியை மடியில் வைத்து, புட்டி பால் கொடுப்பது போல், 'போஸ்' கொடுத்தோம்.

ஐந்தே நிமிடத்தில், 'பிரின்ட்' போட்டு, அழகிய அட்டையில் ஒட்டி தந்து விடுகின்றனர். எதையோ சாதித்தது போல், அதை வாங்கிக் கொண்டோம். சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, புலி ஷோ, யானை ஷோ, பன்றி ஷோ மற்றும் முதலை ஷோ போன்றவை நடத்தப்படுகின்றன.

நம்மூர் சர்க்கசில், புலிகளை, முக்காலி மேல் அமர வைப்பது, நெருப்பு வளையத்திற்குள் பாய வைப்பது, கம்பி மேல் நடக்க வைப்பது, யானைகளை, பந்து விளையாட வைப்பது, ஒன்றன் பின் ஒன்றாக வாலை பிடித்தபடி வரச்செய்வது, 'டான்ஸ்' ஆட வைப்பது என்று, அவைகளை, 'ரிங் மாஸ்டர்' பாடாய் படுத்துகின்றனர்.

ஆனால் இங்கு, சாட்டையை சுழற்றி, மிரட்டியே அவைகளை பணிய வைக்கிறார்.

கவ்பாய் ஷோ மற்றும் டால்பின் ஷோ, சற்று வித்தியாசமாக, ரசிக்கும்படி இருந்தது.

இதெல்லாம் முடிந்த பின், அங்கிருந்து நேராக, பட்டாயா நகரை அடைந்தோம். தாய்லாந்து நாட்டின் பிரபல, 'அல்காசர் டான்ஸ் ஷோ'வுக்கு அழைத்துச் சென்றார், டிரைவர்.

டிக்கெட் வாங்கிக் கொடுத்து உள்ளே அனுப்பினார். முதலில், 'வெல்கம் டிரிங்க்ஸ்' கொடுத்து வரவேற்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி பேசும் மக்கள் நிறைய பேர், அங்கு கூடியிருந்தனர்.

சரியாக, மாலை, 6:00 மணியளவில், அழகிய இளம்பெண்கள், 'ஜிகு ஜிகு' உடையில், வளைந்து, நெளிந்து நடனமாடினர். அவர்களுக்கு, 16 முதல் 20 வயதுக்குள் தான் இருக்கும். ஆங்கிலம், தாய், வியட்நாம் மொழி பாடல்களுக்கு மட்டுமல்லாமல், இரு இந்தி பாடல்களுக்கு ஏற்பவும் நடனம் ஆடி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

அப்பெண்களைப் பார்க்கும்போது ஏனோ பரிதாபம் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், கட்டணம் செலுத்தினால், அப்பெண்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர்.

டான்ஸ் அரங்கை விட்டு வெளியே வந்தவுடன், வேனை தேடினால், 'இதில் ஏற வேண்டாம். உங்கள் பெட்டிகள் எல்லாம் வழிகாட்டியான டாம், காரில் ஏற்றப்பட்டுள்ளது...' என்று கூறி, கார் நிற்குமிடத்தை காட்டினார், ஓட்டுனர். கார் நிற்குமிடத்திற்கு சென்றால், 'பார்ச்சூனர்' என்ற சொகுசு காரின் அருகில், நின்றபடி எங்களை வரவேற்றார், வழிகாட்டி, டாம்.

இரவு உணவுக்காக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நடத்தும் உணவு விடுதியில் காரை நிறுத்தினார். வட மாநில உணவு வகைகள் மற்றும் சோறு, தயிர் சாப்பிட்டு, எங்களுக்கு, 'புக்' செய்திருந்த ஓட்டலுக்கு சென்றோம்.

'ஒருநாள் மட்டுமே இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் காலை, 8:00 மணியளவில், வேறு ஒரு கார் வரும். அதன் ஓட்டுனர், பட்டாயா பீச்சுக்கு அழைத்து செல்வார். மற்றவைகளை இன்னொரு வழிகாட்டி வந்து சொல்வார்...' என்று கூறி, விடைபெற்றார், டாம்.

நாள் முழுவதும் சுற்றியதில், களைப்புடன் உறங்கி விட்டோம்.

மறுநாள் காலை, 8:00 மணிக்கு, ஓட்டலிலேயே காலை சிற்றுண்டியை முடித்து, எங்களை அழைத்துச் செல்ல வந்த டிரைவருடன், 'பீச்'சுக்கு சென்றோம்.

அங்கிருந்த ஒரு வழிகாட்டியிடம், எங்களை அறிமுகப்படுத்தி, படகில் ஏற்றி, தீவை சுற்றிக் காட்ட சொல்லி, சென்றார் ஓட்டுனர். அந்த வழிகாட்டி, ஒரு திருநங்கை; அழகாக ஆங்கிலம் பேசினார். மோட்டார் படகில், கடலில் சிறிது தூரம் சென்று, பிறகு, இன்னொரு சிறிய கப்பலில் ஏற சொன்னார். கடல் அலையில் படகு தத்தளிக்கவே, ஒவ்வொருவராக கையை பிடித்து, கப்பலுக்குள் ஏற்றினார், அவரது உதவியாளர்.

அங்கு, 'பேரா செயிலிங்' எனப்படும், பாராசூட்டில் பறந்து செல்ல, பல சுற்றுலா பயணியர் முண்டியடித்து நின்றிருந்தனர். எங்களுக்கு முன் இருந்தவர்கள், பாராசூட்டில் பறப்பதை பார்த்ததும், எங்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. கலா மற்றும் கல்பலதா, 'வரவில்லை' என்று கூறியதால், நானும், பானுமதி மட்டும் வரிசையில் நின்றோம்.

சிறு படகில், பாராசூட்டை, கயிறு மூலம் இணைத்துள்ளனர். படகு வேகமாக செல்லும்போது, பாராசூட்டும் காற்றைக் கிழித்து, 'விர்'ரென்று வானில் பறந்தது.

'த்ரில்'லான அந்த புதிய அனுபவத்தை, மிகவும், 'என்ஜாய்' செய்தோம். பின், அங்கிருந்து மற்றொரு படகில் ஏறி, சற்று தூரத்தில் இருந்த தீவுக்கு சென்றோம்.

சாமியானா கூரை அமைத்து, 'ஈசி சேர்' போட்டு வைத்திருந்தனர். இளநீர், ஜூஸ் மற்றும் தின்பண்டங்கள் என, பலவும் அங்கு விற்கின்றனர்.

இங்கு, நம்மூர் சுற்றுலா பயணியர் நிறைய பேர் காணப்பட்டனர். அதில், ஒரு வட மாநில குண்டு மாமாவும், மாமியும் கடலில் குளித்து, நொறுக்கு தீனிகளை ஒன்று விடாமல் மொசுக்கி, இளம் ஜோடி போல் உற்சாகமாக சுற்றி வந்ததை, வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவிட்டு, சுற்றிலும் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்து, படகுக்கு திரும்பினோம். கரைக்கு வந்ததும், நாங்கள் பாராசூட்டில் பறக்கும் புகைப்படத்தை 'பிரேம்' செய்து கொடுத்தனர். ஒரு படம், 180 ரூபாய்! அங்கிருந்த இந்திய உணவகத்தில், மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

சோறு, பருப்பு மற்றும் பொரியல் சாப்பிட்டு வெளியில் வந்தோம். எங்கள் டிரைவர் காத்திருக்க, ஓட்டலுக்கு திரும்பி, பெட்டி படுக்கைகளை காரில் ஏற்றி, தாய்லாந்து தலைநகர் பாங்காக் பயணித்தோம்.

தொடரும்.

- ந.செல்வி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us