தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஏகம்' பதிப்பகம் வெளியீடான, 'படிக்காத மேதை காமராஜர்' நூலிலிருந்து: காமராஜர் அகிம்சாவாதி. அரசியல் போராட்டத்தில் மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே அப்படி தான். அவரது பள்ளிப் பருவ நாட்களில் நடந்த ஒரு சம்பவம்:

அந்நாளில் ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி என்றால், வீடு, கடைகளை விட, பள்ளிக்கூடங்களில் தான் விசேஷ கொண்டாட்டம்.

அன்று, பள்ளிக்கூடத்திற்கும் விடுமுறை. ஆனால், பூஜையும், அவல் - பொரி வினியோகமும் தடபுடலாக நடக்கும். இதற்கென, மாணவர்களிடம், தலா ஒன்றரை அணா வசூலிக்கப்படும்.

ஒரு ஆயுத பூஜை நாளன்று, நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், பள்ளியில் கூடினர். பூஜை, புனஸ்காரம் முடிந்தது. அடுத்து, அவல் - பொரி வினியோகம். மாணவர்கள் ஒவ்வொருவராக சென்று பண்டங்களை பெற வேண்டும்.

முதல் மாணவன் சென்று, தயாராக எடுத்து வந்திருந்த துண்டை விரித்தான். முதலில் தேங்காய் சில்லு, வெல்லக்கட்டி, வாழைப்பழம், விளாம் பழம், பேரிக்காய் துண்டு மற்றும் அவல் - பொரி விழுந்தன.

அவ்வளவு தான். உட்கார்ந்திருந்த மாணவர்கள், 'நான் முந்தி, நீ முந்தி' என்று எழுந்து ஓடி, பண்டம் பெறுவதில் முண்டியடித்தனர். வாத்தியாரின் அதட்டல் செல்லுபடியாகவில்லை.

சிறுவன் காமராஜர், இந்த தள்ளுமுள்ளுவில் ஈடுபட வலுவின்றி, ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டார். ஒரு வழியாக மாணவர் கூட்டம் குறைந்தது. காமராஜர் தான் கடைசி. அவர், துண்டை விரித்தார். பிரசாதம் விழுந்தது. வீடு வந்து சேர்ந்தார்.

துணி பொட்டலத்தை பிரித்த, தாயார், சிவகாமி அம்மாள் திகைத்தார். 'தேங்காய் சில்லு இல்லை; வெல்லக்கட்டி கிடையாதா... இதெல்லாம் உனக்கு போடவில்லையா...' என்றார்.

'எனக்கு இவ்வளவு தான் போட்டாங்க அம்மா...' என்றார், சிறுவன் காமராஜர்.

'மற்ற பையன்கள் முந்தியிருப்பாங்க, அவங்களுக்கு கிடைச்சிருக்கும். உனக்கு கிடைக்காமல் போயிட்டு...' என்றார், அம்மா.

'என்னம்மா... எல்லாரையும் போல நானும் ஒன்றரை அணா கொடுத்திருக்கேனே... சரியா போடாதது அவங்க தப்பு தானே...' என, சிறுவன் காமராஜர் குரலில் நீதி கேட்கும் தொனி.

'நீயும் முந்தியிருக்கணும்...' என்றார், அம்மா.

'முண்டியடித்து சண்டை போட்டா தான் பொரி கிடைக்குமா... எல்லாரையும் போல காசு கொடுத்த எனக்கு, எல்லாருக்கும் கொடுத்தது போல கொடுத்திருக்க வேண்டாமா... ஏன் குறைச்சு போடணும்... நாளைக்கு நீ வந்து வாத்தியாரை கேளும்மா...' என்றார், காமராஜர்.

தன் தோல்விக்கு, ஆசிரியருடன் அம்மா சண்டை பிடிக்க வேண்டும் என்று குழந்தை உள்ளம் விரும்பியது. அப்படித்தான் நினைக்க தோன்றியதே தவிர, முண்டியடித்து முதலில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

- இது தான் காமராஜர்.

ஆர்.சி.சம்பத் எழுதிய, 'நீங்களும் வாங்கலாம் நோபல் பரிசு' நூலிலிருந்து: வெடி மருந்தை கண்டுபிடித்தார் ஆல்பிரட் நோபல். உலக நாடுகள் பலவும், அவரிடம் சுரங்க தொழிலுக்கான வெடி மருந்தை வாங்கியது. விரைவிலேயே பெரும் செல்வந்தரானார்.

பிரம்மசாரியாகவே காலம் கழித்துவிட்ட நோபல், தன், 43வது வயதில், பெர்த்தா என்ற பெண்ணை சந்தித்தார். அவளை, தன் செயலராக வேலைக்கு அமர்த்தினார். அவள் மீது காதல் கொண்ட ஆல்பிரட், அவளையே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், அவளோ, வேறு ஒரு இளைஞனை காதலித்து, அவனையே திருமணம் செய்து போய் விட்டாள்; மனம் உடைந்தார், ஆல்பிரட்.

உலக அமைதி சம்பந்தமான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதை முன்னின்று நடத்தியவள், பெர்த்தா. ஆல்பிரட்டையும் அந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்து, கடிதம் அனுப்பியிருந்தாள். மாநாட்டில், பெர்த்தாவின் உலக சமாதான பேச்சு, ஆல்பிரட்டை கவர்ந்தது.

பெர்த்தாவின் தூண்தலின் படியே, உலக சமாதான பரிசுகளை நிறுவினார், ஆல்பிரட்.

பெர்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்; அதே நாளில், தன் நண்பர் சாலமன் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார், ஆல்பிரட். அதாவது, டிச., 7, 1896ல், கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு, நாற்காலியில் சாய்ந்தார்; உயிர் பிரிந்தது.

நல்ல வேளையாக, டிச., 10ம் தேதி, அதாவது, ஆல்பிரட் இறந்த மூன்றாம் நாளன்று, முன்பு அவரிடம் சமையல்காரராக இருந்தவர், அவரை காண, வீட்டிற்கு வந்தார். அப்போது தான், ஆல்பிரட் மரண செய்தி, வெளியுலகுக்கு தெரிந்தது. அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியை வைத்தே, ஆல்பிரட், 7ம் தேதியே இறந்து விட்டார் என்பது தெரிந்தது.

நடுத்தெருநாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us