
அலுவலகம் வந்து ஒரு மணி நேரம் ஆகியும், குழலியின் மனம், வேலையில் ஈடுபட மறுத்தது. இவள் சிந்தனையெல்லாம் வீட்டிலேயே நிலைத்திருந்தது.
அங்கே, அவள் தாய் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள். எந்த நிமிஷமும், தங்கை சுதாவிடமிருந்து, இடி செய்தி வரலாம்.
ச்சே, எவ்வளவு ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். இது, எந்த ஜென்மத்து பாவம். இத்தனை காலம் பாலுாட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கியவள். அன்பைக் குறைவின்றி கொட்டியவள். அவளை இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்க, மனசு பதறி, சுய பச்சாதாபம் கூடியது.
அம்மாவை பற்றிய, 'அந்த' ரகசியம் தெரியாத வரை, தன் தாய் போல உலகில் வேறொருவரும் இல்லை என்ற எண்ணத்தை கொண்டிருந்தாள், குழலி. ஆனால், அவையெல்லாம் ஒருநாள் அஸ்தமித்தது.
சந்தோஷமாய் ஓடிக்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கை வண்டி, ஒருநாள் குடை சாய்ந்து போனது. யார் வைத்த கண் திருஷ்டியோ, லட்சுமிக்கு, ஒரு காலும், கையும் செயலிழந்து படுத்த படுக்கையானாள்.
திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டவர்கள் போல, குழலியும், அவள் தங்கை சுதாவும் மிரட்சியில் நின்றனர். ஆனாலும், தாயின் உடல்நிலையை கருதி, சுதாரித்து, தன் மேற்படிப்பு கனவை முளையிலேயே கிள்ளியெறிந்து, கல்லுாரி படிப்பை முடித்தவுடன் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள், குழலி.
ஒருநாள் அலுவலகம் செல்ல, தெருவில் இறங்கி நடந்த குழலிக்கு, பாதி துாரம் சென்ற பிறகே, மொபைல் போனை வீட்டில் வைத்து விட்டது, ஞாபகம் வந்தது.
வீட்டிற்குள் நுழைய, படுக்கையிலிருந்த தாய், யாரிடமோ போனில், 'மன்னிச்சிடுங்க; என்னால நேரில் வர முடியாது. உங்களையும், 'இங்க வாங்க'ன்னு கூப்பிட முடியாத சூழ்நிலை.
'பிள்ளைங்க வளர்ந்து, விபரம் தெரிய ஆரம்பிச்சிட்டுது. உங்களை காட்டி, 'இவரு யாரும்மா'ன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்வேன். எனக்கு உடம்பு முன்ன மாதிரி இல்ல, உங்களை வந்து பார்க்கணும்ன்னு ஆசையாதான் இருக்கு; ஆனா, முடியலை.
'ஒருவேளை உங்களை பார்க்காமலே போயிடுவேனோன்னு பயமாவும் இருக்கு. எது எப்படியோ, பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்; இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.
'என் சாவுக்கு பிறகும், அவங்களுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம். சரி, மாத்திரை சாப்பிடணும்; போனை வச்சுடறேன்...' என்று, போன் இணைப்பை துண்டித்தாள்.
வாசலில் நின்றிருந்த குழலிக்கு, பூமி பிளந்து தன்னை அப்படியே விழுங்கி விடாதா என்றிருந்தது.
தாயை உயர்ந்த இடத்தில் வைத்திருந்த குழலிக்கு, அந்த உரையாடலை கேட்ட பின், அவள் மீதிருந்த மதிப்பு முற்றிலும் குறைந்து, இதயம் சுக்குநுாறாக உடைந்தது.
தாயிடம் மறைந்துள்ள அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க எண்ணினாள்; அன்று இரவு, லட்சுமி துாங்கியவுடன் அவள் மொபைல் போனை எடுத்து ஆராய்ந்தாள், குழலி.
அடிக்கடி பேசிய நபரின் பெயர், கிருஷ்ணன்.
'யார் இந்த கிருஷ்ணன்... இவருக்கும், அம்மாவுக்கும் என்ன தொடர்பு... ஒருவேளை, அப்பாவுக்கு தெரியாமல், சேச்சே அப்படியெல்லாம் இருக்காது...' என, மனதிற்குள் குழம்பி தவித்தாள்.
இந்த பிரச்னை, தன்னுடனே இருந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில், தங்கை சுதாவிடம் சொல்லாமல் தவிர்த்தாள். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
அம்மா மேல் அதீத பாசம் கொண்டவள், அம்மா செல்லம், சுதா. அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால், ரொம்பவும் மனசு உடைஞ்சு போயிடுவாள் என்று, தனக்குள் அதை புதைத்துக் கொண்டாள், குழலி.
குழலிக்கு இரண்டு வயதும், சுதா, மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, சொந்த ஊரில் ஏற்பட்ட சில பிரச்னைகள், அவளை அங்கே வாழ விடாமல் துரத்தின. பிள்ளைகளை அழைத்து, இப்போது இருந்த ஊருக்கு வந்த லட்சுமி, பால்வாடியில் டீச்சராக வேலையில் சேர்ந்தாள்.
தனியாளாய் இரண்டு பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து, சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தாள். ஊரில் உள்ள அனைவரும், லட்சுமியை மனதார பாராட்டும் போதெல்லாம், கர்வம் தலைக்கேறுவதை உணர்வாள், குழலி.
ஆனால் இன்று... எல்லாமே பொடி பொடியாய் நொறுங்கிப் போனது. அதன்பின், அம்மாவை நேருக்கு நேர் பார்த்து பேச முடிவதில்லை. அப்படியே பார்க்கும் சூழ்நிலை வந்தாலும், தலையை கவிழ்த்து, 'மாத்திரை வேண்டும்' என்று அம்மா கேட்டால், வாங்கி வந்து டேபிள் மீது வைப்பாள்.
பாராமுகமாக இருந்த மகளை அருகில் அழைத்து, 'என்னாச்சு குழலி, மனசுல எதையும் வச்சுக்காதே. எனக்கு எதுன்னாலும் நீதான் தங்கச்சியை பார்த்துக்கணும்; தைரியமா இரு.
'நான் உன்னை ஆம்பளை மாதிரி தான் வளர்த்திருக்கேன். எந்த சூழ்நிலையிலும் நீ ஒடிஞ்சு போயிடக் கூடாது புரியுதா...' என்று, ஆறுதல் கூறுவாள். அவ்வப்போது, அறிவுரையும் கூறினாள், லட்சுமி.
'மத்தவங்க மாதிரி தப்பான பாதையில ஒருகாலும் போக மாட்டேன். என் வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு எனக்கு தெரியும். முதல்ல, நாம ஒழுங்கா இருக்கோமான்னு பார்க்கணும்... அதை விட்டுட்டு இந்த, 'அட்வைஸ்' பண்றதெல்லாம் இத்தோட விட்டுடுங்க...' என, மூஞ்சியில அடித்த மாதிரி பேசினாள், குழலி.
நாம அவளுக்கு பாரமா இருக்கிறதால தான் இப்படி பேசுகிறாள். காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்று, அவள் போக்கிலேயே விட்டு விட்டாள், லட்சுமி.
நாட்கள் செல்லச் செல்ல, லட்சுமி மனநிலை மிகவும் துவண்டு போனது. மகள், தன்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்ற கவலையே, அவளுக்கு எமனாய் வந்தது. நேரத்திற்கு சரியாக சாப்பிடாமல், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் தன்னைத் தானே வருத்திக் கொண்டாள், லட்சுமி.
அப்போதும் கூட, தாயை தேற்றவோ, அணைத்து ஆறுதல் கூறவோ விரும்பவில்லை, குழலி.
திடீரென ஒருநாள், லட்சுமிக்கு அதீத மூச்சுத்திணறல் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
'இங்க வச்சு சிகிச்சை அளிப்பது, 'வேஸ்ட்!' உண்மையை சொல்லணும்ன்னா, அவங்க ரொம்ப நாளைக்கு தாங்க மாட்டாங்க. பேசாம, வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கம்மா...' என்று மருத்துவர் சொல்ல, வேறு வழியின்றி வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டிற்கு வந்து, இரண்டு மூன்று நாட்கள் எந்த உணவுமின்றி, தண்ணீர் கூட தொண்டையில் இறங்காமல், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள், லட்சுமி.
'இப்போதிருக்கும் நிலையை பார்த்தால், இன்னிக்கு ஒருநாள் தாங்குவதே சற்று சிரமம் தான் போலிருக்கு. அதனால, நீ ஆபீஸ் போய் லீவு சொல்லிட்டு வந்துடு, குழலி...' என்றாள், பக்கத்து வீட்டு மாமி.
இதையெல்லாம் யோசித்தபடி, சோர்ந்த மனநிலையில் இருந்த குழலியின் கையிலிருந்த மொபைல் போன் சிணுங்கியது.
''அக்கா... எல்லா முடிஞ்சிடுச்சுக்கா; அம்மா, நம்மளை விட்டு போயிட்டாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. உடனே கிளம்பி வா அக்கா,'' என்று அழுதாள், சுதா.
எதிர்பார்த்த தகவல்தான் என்றாலும், அதை நேரடியாக கேட்டபின், குழலியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. விஷயம் கேள்விப்பட்டு, அலுவலகத்திலிருந்த இரண்டு பெண்கள் உடன் வர தயாராயினர்.
வீட்டிற்கு வரும் வழியில், திடீரென குழலியின் மனதில், 'அம்மா யாரிடமோ பேசுவாளே, அந்த நபருக்கு இந்த செய்தியை சொன்னால் என்ன...' என, யோசித்தவள், 'ஹூ ஹூம்... வேண்டாம். அவனையெல்லாம் வீட்டு வாசற்படியில் கூட சேர்க்கக் கூடாது...' என தீர்மானித்தாள்.
வீட்டு வாசலில், எதிர் வீடு, பக்கத்து வீடு என்று அறிமுகமான அத்தனை பேரும், இவளை பார்த்து கதறி அழுதனர். இவளுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. இறுகிப் போய் நின்றாள்.
''என்னடி குழலி, இப்படி இறுகிப் போய் நிக்கிறே... மனசு விட்டு அழுதுடு... நீதானே அவளுக்கு மூத்த பொண்ணு... உன்னை எப்படியெல்லாம் சீராட்டி, பாராட்டி வளர்த்திருப்பாள்...'' என்றாள், பக்கத்து வீட்டு மாமி.
அன்று மாலையே பிணத்தை எடுத்து விடுவது என்று உறவுகளிடம் பேசி முடிவு செய்திருந்தனர். அப்போது தான், கிருஷ்ணனிடமிருந்து போன் வந்தது.
''நாங்க கிளம்பி வந்துட்டிருக்கோம். வர தாமதமானாலும், பாடியை எடுத்துடாதீங்க.''
''யாரும் இங்க வராதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவோம்,'' என்று சொல்லி, பட்டென்று இணைப்பை துண்டித்தாள், குழலி.
அம்மாவின் இறுதி பயணத்துக்கு பின், வீடு வெறுமையானது. அக்கம் பக்கத்தினர் சென்று விட, இறுதியாக அவர்களுக்கு துணையாக அங்கேயே அமர்ந்திருந்தார், பக்கத்து வீட்டு மாமி.
மாமியின் பார்வை, குழலியின் கோப முகத்தை அவ்வப்போது கவனித்தபடி இருந்தது. ஒரு கட்டத்தில் அதை கேட்டே விட்டாள்.
''குழலி, நீ ஏம்மா இப்படி கோபமா இருக்கே... உண்மையில் கோபப்பட வேண்டியவள் நான் தான். நானே அமைதியாய் இருக்கேன். உனக்கென்ன கேடு,'' என்றாள், மாமி.
அதுநாள் வரையில் தன்னிடம் அவ்வளவு கோபமாய் பேசாத மாமி, இன்று அவ்வாறு பேசியதில் குழப்பமான குழலி, ''நீங்க ஏன் மாமி, என் மேல் கோபப்படணும்... அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்,'' என்றாள்.
''அந்த கிருஷ்ணனை வரக்கூடாதுன்னு சொல்லிட்டியாமே.''
''மாமி, தயவுசெய்து அதைப் பத்தி மட்டும் பேசாதீங்க. கணவன் இல்லாமல் இரண்டு பெண் பிள்ளைகளை வச்சுக்கிட்டு, தனியா பொழைச்சுட்டிருக்கிற ஒரு பொம்பளை, அவ்வப்போது ரகசியமா யாருடனோ பேசுறான்னா, அதை எப்படி எடுத்துக்கறது, எப்படி ஏத்துக்கறது?''
அக்காவை வினோதமாய் பார்த்தாள், சுதா.
''அம்மாடி, லட்சுமியை பத்தி நீ தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கே. உங்கம்மாவை பத்தின எல்லா கதையும் எனக்கு தெரியும். உங்கம்மா ஒரு உத்தமி, கற்புக்கரசி. அவளை பத்திப் பேச, இந்த ஊரில் எவளுக்குமே யோக்கியதை கிடையாது,'' என்றாள், மாமி.
''சரி, பேசல. உங்களுக்குதான் அவங்களை பத்தி எல்லாம் தெரியும். அவங்களுக்கும், அந்த கிருஷ்ணனுக்கும் என்ன தொடர்பு, அதை முதல்ல சொல்லுங்க,'' என்றாள், குழலி.
''நேரம் வரும் போது அந்த உண்மையை உங்ககிட்ட சொல்லணும்ன்னு தான், நானும் இத்தனை வருஷமா காத்திட்டிருந்தேன். இன்னிக்கு அந்த நேரம் வந்துடுச்சு, சொல்றேன்... உங்களை பெத்த தாயின்னு நீங்க இத்தனை நாளா நினைச்சுக்கிட்டு இருக்கீங்களே லட்சுமி, அவ உண்மையில் உங்க ரெண்டு பேரையும் பெத்த தாயே இல்லை.
''நீங்க ரெண்டு பேரும் லட்சுமியோட அக்கா பிள்ளைகள். ரெண்டாவதும் பொம்பளையா பொறந்ததுன்னு, உங்கம்மாவை, உங்க அப்பா அடிச்சு கொன்னுட்டு, ஜெயிலுக்கு போயிட்டார்.
''அந்த சூழல்ல, அக்கா குழந்தைகள் அனாதைகளா தெருவில் திரியக் கூடாதுன்னு நெனச்சு, உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவதான் இந்த லட்சுமி...''
குழலியும், சுதாவும், மாமியின் வாயையே பார்த்தவாறு நின்றிருந்தனர்.
''உங்களை வளர்க்கணும்கிற ஒரே காரணத்துக்காக, தான் உயிருக்கு உயிரா காதலிச்ச கிருஷ்ணனை துாக்கி எறிஞ்சுட்டு வந்தவள். உங்க அப்பா ஜெயில்ல இருக்காரு. அந்த கசப்பான உண்மை, உங்க வாழ்க்கையை மாற்றிட கூடாதுன்னு, காதலிச்ச கிருஷ்ணனை விட்டுட்டு, உன்னையும், கை குழந்தையா இருந்த உன் தங்கச்சியையும் கூட்டிட்டு ஊரை விட்டு வந்தவடி...
''அவ சாகும்போது கூட கன்னி பொண்ணு தாண்டி. உங்க ரெண்டு பேருக்காக, தன் வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு போனவடி, என் லட்சுமி,'' மாமி கதறியபடி சொல்ல, இடிந்து போய் சுவரில் சாய்ந்து அமர்ந்தனர், குழலியும், சுதாவும்.
''இதோ பாரு, உண்மையில் உங்களை பெத்த அம்மா - அப்பா இவங்க தான்,'' என்று, ஒரு பழைய புகைப்படத்தை காட்டினாள், மாமி.
அதிர்ச்சியோடு பார்த்தனர், இருவரும்.
''அப்பப்போ கிருஷ்ணன்கிட்ட, 'பிள்ளைகளுக்கு எதையாவது சேர்த்து வைக்கணும்'ன்னு, அவ சேர்த்து வைச்சிருந்த காசுல, ஊருல இரண்டு இடம் வாங்கி போட்டுருக்கா. இன்னிக்கு வித்தாலும், கோடிக்கணக்கில் போகும், அந்த இடம். அது விஷயமாதான் கிருஷ்ணன்கிட்ட அவ பேசுவா.
''ஆனா, கடைசி வரைக்கும் அவ உங்களுடைய தாயாகவே வாழ்ந்து போய் சேர்ந்துட்டா. இது தெரியாம, அவ கூட பேசாம இருந்து கொன்னுட்டீயே...'' என்று மாமி அழுதபோது, கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வந்தது, குழலிக்கு.
''பெத்த தாயா இருந்தாகூட, எங்களுக்காக இப்படி ஒரு தியாகம் செய்திருக்க மாட்டாங்க. பெரிய தப்பு பண்ணிட்டேன்...'' என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள், குழலி.
''அம்மாடி, கோபத்துல நம்மை அறியாமல் கூறும் சில வார்த்தைகள் தான், நாம் அதிகம் விரும்பும் சிலரை நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது. இதை புரிஞ்சு, இனிமேலாவது கோபத்துக்கு அடிமையாகாம வாழுங்க,'' என்றாள், மாமி.
குழலியின் அழுகை, இந்நாள் வரை நிற்கவில்லை என்பது தான், நிதர்சனமான உண்மை.
டெய்சி மாறன்