தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (2)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (2)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (2)


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: காதலர்களான புவனேஷ் - முகிலா இருவரும், தங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். முகிலாவின் வரவுக்காக புவனேஷும், நண்பன் தருணும் கோவிலில் காத்திருக்கும்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் பார்வையில் படுகின்றனர். அவர்களை பற்றி விசாரித்தறியும் இன்ஸ்பெக்டர், முகிலாவிடம் திருமணம் குறித்து கேட்க வேண்டும் என்கிறார். முகிலாவின் மொபைலுக்கு தருண் அழைக்க, அந்த எண் உபயோகத்தில் இல்லை என, தகவல் வருகிறது-

தருண் கண்களில் அதிர்வலைகள் பரவ, புவனேஷை ஏறிட்டு, ''முகிலாவுக்கு போன் பண்ணினா, 'ரெஸ்பான்ஸ்' இல்லை. 'தற்சமயம், போன் உபயோகத்தில் இல்லை'ன்னு, 'ரிக்கார்டட் வாய்ஸ்' வருது.''

''தருண்... முகிலா, இப்ப கால் டாக்சியில் வந்துட்டிருக்கா. சில சமயம், 'ஜர்னி ஹவர்ஸ்'ல 'டவர்' கிடைக்காம போக வாய்ப்பிருக்கு. மறுபடியும் போன் பண்ணிப் பாரு,'' புவனேஷ் சொல்ல... மீண்டும், முகிலாவின் எண்ணை தொடர்பு கொண்டான், தருண்.

சில விநாடி, 'பீப்' சத்தத்திற்குப் பிறகு, எதிர்முனையில், 'நீங்கள் தொடர்பு கொண்ட எண்ணானது தற்போது, 'ஸ்விட்ச் ஆப்' செய்யப் பட்டுள்ளது...' என்று, 'ரிக்கார்டட் வாய்ஸ்' ஒலித்தது.

சற்றே கலவரமாகி, ''புவனேஷ்... இந்த தடவை, 'ஸ்விட்ச் ஆப்'ன்னு வருது,'' என்று கத்தினான், தருண்.

''டென்ஷனாகாதே, இரு... என் மொபைல் போனிலிருந்து முகிலாவுக்கு போன் பண்ணி பார்க்கிறேன்,'' சொன்ன புவனேஷ் லேசாய் வியர்த்து, மினுமினுத்த முகத்தோடு, தன் மொபைல் போனில், முகிலாவின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் கனத்த மவுனம்.

புவனேஷ் அரை நிமிடம் வரை பொறுமை காத்து, இரண்டாவது முறையாய் முகிலாவின் எண்ணை அழுத்தினான். இந்த முறையும், எதிர்முனை பிடிவாதமாய் நிசப்தம் காத்தது.

கம்மிய குரலில், ''என்னாச்சு புவனேஷ்?'' என்றான், தருண்.

''உனக்காவது, 'ரிக்கார்டட் வாய்ஸ்' வந்தது. எனக்கு அது கூட இல்லை... முகிலாவோட போனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே!'' -

அதுவரை ஒன்றும் பேசாமல், புவனேஷையும், தருணையும் கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், தன் உதட்டின் கோடியில் உதித்த சிறு சிரிப்போடு,''என்ன பிரச்னை?'' என்றார்.

''டவர் கிடைக்கலை சார்!''

''என்னது, 'டவர்' கிடைக்கலையா...

இது, ஆர்.எஸ்.புரம் திவான் பகதுார் ரோடு, 'ஹார்ட் ஆப் த சிட்டி...'

200 மீட்டர் துாரத்துக்கு ஒரு மொபைல் போன், 'டவர்' முளைச்சு, 'நெட்வொர்க் கவரேஜை' தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ளே வெச்சுட்டிருக்கு... எப்படி, 'டவர்' கிடைக்காம போகும்,'' இன்ஸ்பெக்டர் கேலியாக கேட்க...

கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவரை உஷ்ணமாய் பார்த்தான், தருண்.

''நாங்க பொய் சொல்லலை சார்... முகிலாவோட போன் நம்பரை சொல்றேன், நீங்க வேணும்ன்னா உங்க போனிலிருந்து, 'ட்ரை' பண்ணிப் பாருங்க. இந்த கேலி பேச்செல்லாம் வேண்டாம். எங்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்''

''அப்படியா?'' என்று அலட்சியமாய் சொன்ன இன்ஸ்பெக்டர், வேனின் பின்பக்கம் திரும்பி, ''சிவராமன்...'' என்றார்.

''சார்...''

''இவங்க சொல்ற நம்பரைக் கேட்டு, 'பி.ஆர்.ஓ., டிவைஸ்' மூலமா உங்க போனிலிருந்து, 'ட்ரை' பண்ணிப் பாருங்க.''

''எஸ் சார்...''

''கான்ஸ்டபிள்கிட்ட முகிலாவோட நம்பரைச் சொல்லுங்க.''

தருண், சத்தமாய் முகிலாவின் நம்பரைச் சொல்லி காத்திருக்க, வேனில் இருந்த சிவராமன், தன் மொபைல் போனில் முயற்சித்து பார்த்து, ஒரு நிமிஷத்திற்குப்பிறகு, ''சார்... அந்தப் பெண் முகிலாவோட மொபைல் போன், டோட்டலி டெட். தேர் ஈஸ் நோ எனி ரிக்கார்டட் வாய்ஸ்... சம்திங்க் வென்ட் ராங்க்!''

வாய்க்குள் ஏதோ முனகியபடியே, வேனிலிருந்து கீழே இறங்கினார், இன்ஸ்பெக்டர்.

பெல்ட்டின் பவுண்டரியைத் தாண்டி, பிதுங்கி தொங்கியது தொப்பை. அவருடைய சட்டைப் பாக்கெட்டில் குத்தப்பட்டிருந்த, 'நேம் பேட்ஜில், முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்' என்கிற ஆங்கில எழுத்துக்களை வாசிக்க வைத்தது.

புவனேஷை நெருங்கிய இன்ஸ்பெக்டர், ''ஷி ஈஸ் ஆன் த வே... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்னு நீங்கதானே சொன்னீங்க.''

''ஆமா சார்...''

''அந்தப்பொண்ணுகிட்ட எப்ப பேசினீங்க?''

''அஞ்சு நிமிஷத்துக்கு முன், முகிலா எனக்கு போன் பண்ணி, 'தண்டு மாரியம்மன் கோவிலுக்கு பக்கத்துல வந்துட்டேன், இன்னும், 10 நிமிஷத்துக்குள்ள அங்கே இருப்பேன்'னு சொன்னா சார்!''

''கால் டாக்சிதானே?''

''ஆமா!''

''எந்த கால் டாக்சி?''

''தெரியலை சார்!''

''நீங்க சொன்ன நேரத்தை வெச்சு பார்க்கும்போது, முகிலா இந்நேரத்துக்கு இங்கே வந்திருக்கணும் இல்லையா?''

''ஆமா சார்...''

''வரலையே... இப்ப என்ன செய்யலாம்?''

''எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார்... ஆனா, பயமாயிருக்கு.''

''முகிலா உங்களுக்கு போன் பண்ணி பேசும்போது நேரம் என்ன?''

புவனேஷ் தன் மொபைல் போனை எடுத்து, 'ரீஸன்ட் கால் ஆப்ஷனை' பார்த்து, ''5:06 சார்,'' என்றான்.

''இப்ப மணி, 5:15. இன்னும், 10 நிமிஷம், 'வெயிட்' பண்ணிப் பார்க்கலாமா?''

''நோ சார்...'' அவசரமாய் இடைமறித்த தருண், ''சாரி சார்... காத்திருப்பதில் அர்த்தமில்லை. நாம் உடனடியாய் செயல்பட வேண்டிய, 'கோல்டன் ஹவர்' இது.''

இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின் முகம், கோபத்தில் இறுகியது. தருணின் முகத்துக்கு நேரே ஆள் காட்டி விரலை உயர்த்தி, ''லுக், இந்த பிரச்னையை எப்படி, 'ஹேண்டில்' பண்ணணும்ன்னு எனக்குத் தெரியும். சும்மா, 'கோல்டன் ஹவர், சில்வர் ஹவர்'ன்னு சொல்லி, எனக்கு, 'க்ளாஸ்' எடுக்க வேண்டாம்.

''அந்தப் பொண்ணு, முகிலா இங்கே வர்றாளான்னு இன்னும் ஒரு அரை மணி நேரம் அவகாசம் குடுத்துப் பார்ப்போம். அப்பவும் வரலைன்னா மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை பற்றி யோசிப்போம்,'' என்று அலட்சியமான குரலில் சொல்லி, சுண்டு விரலால் காதைக் குடைந்தார்.

கைகள் நடுங்க அவரைக் கும்பிட்டான், புவனேஷ்.

''ச... சார்...''

''என்ன?''

''இந்த விஷயத்துல நாம, 'லேட்' பண்ணினா, அது முகிலாவோட உயிருக்கு ஆபத்தாய் முடியலாம். உடனடியாய், 'சைபர் க்ரைம் பிராஞ்சு'க்கு தகவல் கொடுத்து, ஏதாவது பண்ணுங்க சார்... ப்ளீஸ்...''

புவனேஷ் சொன்னதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத முத்துக்குமரன், வேனுக்குள் எட்டிப்பார்த்து, ''சிவராமன்...'' என்று குரல் கொடுத்தார்.

''சார்...''

''ப்ளாஸ்க்ல டீ இருக்கான்னு பாரு.''

''இல்ல சார்... வேணும்ன்னா, பர்மா பேக்கரி கடைக்குப் போய் வாங்கிட்டு வரட்டுமா?''

''கேட்காதே... போய் வாங்கிட்டு வாய்யா,'' முத்துக்குமரன் சொல்லிவிட்டு, மறுபடியும் வேனின் முன்புற இருக்கைக்குப் போக முயன்ற விநாடி, அவருக்கு எதிரே போய் மறித்தாற் போல் நின்றான், தருண்.

''எக்ஸ்க்யூஸ் மீ சார்...''

''என்ன?'' கேள்வியில் கோபம் தெறித்தது.

''உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லக் கூடாதுன்னு ஆனவரைக்கும் முயற்சி பண்ணிட்டிருந்தேன். ஆனா, அதைச் சொல்லும்படியான நிலைமையை உருவாக்கிட்டீங்க.''

முத்துக்குமரன் தன் தாடையைத் தடவியபடி, கண்களைத் தாழ்த்தி, தருணை ஒரு பார்வை பார்த்தார்.

''என்ன விஷயம்?''

''நான் விஷயத்தை சொல்றதுக்கு முந்தி, என் மொபைல் போனில் இருக்கிற, 'புரொபைல் பிக்சரை' ஒரு நிமிடம் பாருங்க,'' என்றான்.

தருண் நீட்டிய மொபைல் போனை ஒரு சின்ன தயக்கத்தோடு வாங்கிப் பார்த்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின் பார்வை ஸ்தம்பித்தது.

குரல் மைனஸ் டிகிரி குளிரோடு வெளிப்பட்டது.

''இவர், அனந்தநாராயணன் ஐ.ஜி.,''

''அவரேதான் சார்... போலீஸ் டிபார்ட்மென்ட்ல, 'தி டெரர்ன்'னு பேர் எடுத்தவர். உங்களுக்கு அவர், ஐ.ஜி., ஆனா, எனக்கு அவர் அங்கிள்.''

முத்துக்குமரனின் பார்வை மறுபடியும் மிரட்சியோடு மொபைல் போனுக்கு போயிற்று.

புரொபைலில், ஐ.ஜி., அனந்தநாராயணன், காக்கி யூனிபார்மில் விறைப்பாய் நின்று, தனக்கு அருகில் நின்றிருந்த தருணின் தோள் மேல் உரிமையோடு கையை போட்டபடி கேமராவை பார்த்து பெரிதாய் சிரித்திருந்தார்.

தருண் நிதானமான குரலில், ''சார்... ஐ.ஜி., அனந்தநாராயனுக்கு என் மேல ரொம்பவும் பிரியம். எனக்கும், அவரை பிடிக்கும். அதனால தான் என் புரொபைலில் அவரோட படத்தை வெச்சிருக்கேன். இதுவரைக்கும் இந்த படத்தை நான் யார்கிட்டேயும் எந்த ஒரு ஆதாயத்துக்காகவும் காட்டினதேயில்லை... தெரியாம, 'ஒன்வேயில்' போன போதும் சரி, 'நோ பார்க்கிங்' ஏரியாவில் காரை நிறுத்தினபோதும் சரி, பண்ணின தப்புக்காக, 500 ரூபாய், 'பைன்' கட்டியவன்.

''அன்னிக்கு என்னை, 'சார்ஜ்' பண்ணின போலீஸ்கிட்ட இந்த படத்தை காட்டியிருந்தா போதும், என் அபராதத் தொகையை, 'கட்' பண்ணிட்டு எனக்கொரு, 'சல்யூட்'டையும் கொடுத்திருப்பாங்க. ஆனா, எனக்கு அதுல இஷ்டமில்லை. தப்பு பண்ணிட்டா, அதுக்கான தண்டனையை ஏத்துக்கறது தான் என் பாலிசி.

''இன்னிக்கு புவனேஷும் சரி, நானும் சரி எந்த ஒரு தப்பும் பண்ணலை. என், நண்பன் புவனேஷ், தான் காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான். ஒரு நண்பன்கிற முறையில் அவனுக்கு நான் உதவி பண்ண வந்தேன். இந்நேரம் கோவிலுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய முகிலா இன்னமும் வரலை. நாங்க பதறிட்டு, நெருப்பு மேல நின்னு விநாடிகளை எண்ணிட்டிருக்கோம். ஆனா, நீங்க கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம பேசறதும்... நடந்துக்கறதும்...''

தருண் பேசப் பேச, அவனை நெருங்கி தோள் மீது கையை வைத்தார், முத்துக்குமரன்.

''சாரி மிஸ்டர் தருண்... இன்னிக்கு விடிய விடிய, 'பீட்...' ஏரியா பூராவும் பேட்ரோலிங் போயிட்டு வந்ததால், ரொம்பவும் அசதி... அதான் அப்படி பேசிட்டேன். உங்க கார் இங்கேயே இருக்கட்டும், நீங்களும் உங்க, நண்பரும் வேன்ல ஏறுங்க; ரேஸ் கோர்ஸ் ரோடில் இருக்கிற, 'சைபர் க்ரைம் செல்'லுக்கு போயிடுவோம்... அவங்க, 10 நிமிஷத்துல, 'மானிட்டரிங்' பண்ணி முகிலாவோட போன் எங்கே இருக்குங்கிறதை, 'க்ளோபல் நெட்வொர்க்' மூலமா கண்டுபிடிச்சு முகிலாவையும், 'ட்ரேஸ் அவுட்' பண்ணிடுவாங்க.''

''தேங்க்ஸ் ஏ லாட் சார்.''

''முகிலாவை கண்டுபிடிச்ச பின்னாடி உங்களோட ஒட்டுமொத்த நன்றியையும் வாங்கிக்கிறேன்... இப்ப வேன்ல ஏறுங்க; புவனேஷ், நீங்களும் வாங்க.''

மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடு புவனேஷ் வேனின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே போக, தன் கையில் வைத்திருந்த, 'சென்ஸர் கீ'யைப் பயன்படுத்தி, காரின், 'சென்டர் லாக் சிஸ்டத்தை' முடக்கி திரும்பினான், தருண்.

திரும்பிய அந்த விநாடியே ஆச்சரியப்பட்டான்.

இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வேனின் முன்பக்கம் போய் நின்று, தலையை மட்டும் லேசாய் உயர்த்தி, கோவிலுக்கு எதிர்புறம் இருந்த அந்த இருட்டான குறுக்குச் சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தருண் அவர் அருகே போய் நின்று மெதுவான குரலில், ''என்ன சார் பார்த்துட்டிருக்கீங்க?''

முத்துக்குமரன் குரலைத் தாழ்த்தி, ''தருண்... ஒரு நிமிஷம் இப்படி என் பக்கத்துல வந்து நிக்க முடியுமா?''

ஒரு வியப்பு குறியோடு போய் நின்றான், தருண்.

''கொஞ்சம் மெல்ல தலையைத் துாக்கி எதிர்புறம் இருக்கிற குறுக்குச் சாலையோட கார்னரைப் பாருங்க,'' என்றார்.

முகம் முழுவதும் பரவிய குழப்பத்தோடு, தருண் அந்த இடத்தை பார்த்தான்,

''ரோடு கார்னர்ல ஒரு கோவில் கும்பாபிஷேகத்தோட விளம்பர பேனர் தெரியுதா?''

''தெரியுது சார்!''

''அதுக்குப் பின்னாடி இருக்கிற இருட்டையே, 10 செகண்ட் உத்துப்பாருங்க.''

தருண் தன் பார்வையை ஒரு லேசர்

கதிராய் மாற்றிப் பார்க்க, ''ஏதாவது பிடிபடுதா?'' கேட்டார், முத்துக்குமரன்.

''எஸ் சார்!''

''என்ன?''

''ஸ்கூட்டியில் ஒரு பெண் உட்கார்ந்துகிட்டு இங்கேயே பார்த்துட்டிருக்கா.''

— தொடரும்

ராஜேஷ்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us