PUBLISHED ON : பிப் 13, 2022

எதிரி!
காதலிப்பவரின் விருப்பத்தை
தெரிந்து கொள்ளாமலேயே
காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர்
இன்றைய இளைஞர்கள்!
காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழி
வயது, அழகு, அந்தஸ்து
எதுவும் தடையில்லை
பரஸ்பர சம்மதம் தேவை என்பதை ஏனோ
மறந்து விடுகின்றனர் நவீன காதலர்கள்!
கொலை, கொள்ளை, பொறுக்கி
ரவுடி, படிக்காதவனை எல்லாம்
காதலிக்கிறாள் பணக்கார வீட்டு பெண்
திரைப்படங்களில்!
எதுவும் தவறு இல்லை
நீ அடிமையாக இருக்காதே
எதிர்த்து பேசு என்று பெண்களுக்கு
சொல்லிக் கொடுக்கிறது
'டிவி' சீரியல்கள்!
கைபேசி, முகநுால், மின்னஞ்சல்
இணையம், 'வாட்ஸ் - ஆப்' போன்ற
அறிவியல் சாதனங்கள் எல்லாம்
தீமைகளையே விளைவிக்கின்றன!
உண்மையான அன்பு, பண்பு
பற்று, பாசம், நேசம் அனைத்தும்
கவர்ச்சி, ஒப்பனை, தோற்றம், வருமானம்
இவைகளிடம் தோற்று விடுகின்றன!
எழுபது வயது முதியவர்கள்
காதலுக்கு எதிரிகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கின்றனர்
இளம் வயது காதலர்கள்...
எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது
நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல
சாதலுக்கு தான்!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
