PUBLISHED ON : ஜூலை 16, 2017

அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள, ஹூஸ்டன் நகரத்தில் இருந்து, தென் கிழக்காக, 55 கி.மீ., தூரத்தில் இருக்கும் சிறிய ஊரின் பெயர், க்லூட்.
இவ்வூரில், ஜூலை மாதத்தில், வெயிலும், ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், கொசுக்கள் அதிகமாக இருக்கும்.
சுற்றுலா துறையினர், வித்தியாசமாக ஏதாவது செய்து, இச்சிறிய ஊரின் பொருளாதாரத்தை மேம்படுத்த நினைத்த போது உதயமான யோசனை தான், 'கொசுத் திருவிழா!'
கடந்த, 1981ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில், மூன்று நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது, நாட்டுப்புறப் பாடல்களின் இன்னிசை கச்சேரிகளும், வித்தியாசமான பல போட்டிகளும் நடைபெறும்.
வயது வரம்புபடி, மூன்று பிரிவுகளாக பிரித்து, தனித்தனி போட்டியாக நடத்துவர். கொசு மாதிரி வடிவமைக்கப்பட்ட பந்து ஒன்று, பறந்து வரும். இந்த, 'பந்து கொசு' யார் மீது பட்டாலும், கொசு கடித்து விட்டதாக கருதி, ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவர்.
வைக்கோலை, குன்று போல குவித்து, அதனுள், விளையாட்டுப் பொருட்கள், பணம் மற்றும் டி - ஷர்ட் போன்ற பொருட்களை ஒளித்து வைப்பர்; குழந்தைகள் உற்சாகமாய், வைக்கோல் குவியலுக்குள் புகுந்து, பொருட்களை தேடி, கண்டுபிடிக்க வேண்டும்.
யார் யார், எந்தெந்த பொருளை கண்டுபிடிக்கின்றனரோ, அது, அவர்களுக்கே சொந்தம்.
கொசுவை அழைக்கும் போட்டியில் கலந்து கொள்வோர், விதவிதமாக ஒலி எழுப்புவர். யாருடைய ஒலிக்கு, கொசுக்கள் பறந்து வந்து மொய்க்கிறதோ, அவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அவருக்கு சிறப்பு பரிசும் அளிக்கப்படும்.
மற்றொன்று, கொசுக்கால் போட்டி! இதில், பங்கு பெறும் ஆண்களும், பெண்களும் முழங்கால் வரை மட்டுமே ஆடை அணிந்து வருவர். தங்களது பெயர் வாசிக்கப்பட்டதும், மேடையில் நடப்பர். அவர்களில் யாருடைய கால்கள் கொசுவின் காலைப் போல, குச்சியாக இருக்கிறதோ, அவர்களுக்கு பரிசும், ஆணுக்கு, 'மிஸ்டர் மஸ்கிட்டோ' என்றும், பெண்ணுக்கு, 'மிஸ் அன்ட் மிஸஸ் மஸ்கிட்டோ லெக்' என்ற பட்டமும் வழங்குவர்.
வேடிக்கையான இந்நிகழ்ச்சியை காண, சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் மூலம் ஊருக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.
ஷைலஜா
