/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை! (18)
/
எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை! (18)
PUBLISHED ON : ஜூன் 14, 2015

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படத்தில், ராதாவுக்கு ஜமீன்தார் வேடம்; ராமண்ணா இயக்குனர். ராதாவுக்கு தர வேண்டிய பாக்கி, 20,000 ரூபாயை தராமல் இழுத்தடித்தனர்.
'அண்ணே... இவங்க பண விஷயத்துல குழப்பம் செய்ற மாதிரி தெரியுது...' என்றார் கஜபதி.
'அப்படியா... சரி பாத்துக்கலாம்...' என்றார் ராதா.
மறுநாள், ராதா செட்டுக்கு வரவில்லை என்று தெரிந்ததும், வீட்டுக்கு ஆள் அனுப்பினர். 'உடம்பு சரியில்லன்னு சொல்லு...' என்று வீட்டுக்குள்ளிருந்தபடியே கஜபதியிடம் சொன்னார் ராதா. அப்படியே சொன்னார் கஜபதி.
'அண்ணன் வரலேன்னா, இன்னிக்கு ஷூட்டிங் கேன்சல்...' என்று தலையைச் சொறிந்தார் வந்தவர்.
'இன்னிக்கு முடியாதுன்னுட்டார்...' என்று வந்தவரை அனுப்பினார் கஜபதி.
சிறிது நேரத்திலேயே கையில், 20,000 ரூபாயுடன் ராதா வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர், கஜபதியிடம் பணத்தை ஒப்படைத்தார். கஜபதியும் உள்ளே சென்று ராதாவிடம் பணம் வந்து விட்டது என்றார். 'அப்படியா... சரி அவரை உட்காரச் சொல்லு; நான் வர்றேன்...' என்று சொல்லியனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார் ராதா. அண்டர்வேர், மேலே ஒரு துண்டு. வலியால் முனங்குவது போல முனங்கியபடி நாற்காலியில் உட்கார்ந்தவர், 'டேய் ராமசாமி... அந்த மருந்தெல்லாம் வாங்கச் சொன்னேனே... வாங்கிட்டியா?' என்று கேட்டார். அப்படியே தன் மேல் துண்டை எடுத்தார். உடலில் அங்கங்கே கட்டுகள், பிளாஸ்திரிகள்.
கஜபதிக்கே ஒன்றும் புரியவில்லை. 'இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தாரு...' என்று குழம்பிப் போனார்.
'டேய்... கொஞ்சம் உடம்பைப் பிடிடா, ஒரே அசதியா இருக்கு...' என்றார் ராதா. தயாரிப்பாளரால் ஒன்றுமே பேச முடியவில்லை.
'நான் வரலேன்னா ஷூட்டிங் கேன்சல்ன்னு சொன்னீங்களாம்... பணம் வேற கொண்டு வந்தீங்களாம்... உடம்பு கொஞ்சம் அசதியா இருக்கு, வேற ஒண்ணுமில்ல. நான் ரெடி. போகலாமா?' என்று கேட்டார் ராதா.
'அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க... நீங்க ரெண்டு, மூணு நாட்கள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க; ஷூட்டிங் கேன்சல் செய்துடலாம். ஒண்ணும் பிரச்னை இல்ல...' என்று சொல்லி, கிளம்பிப் போனார் தயாரிப்பாளர்.
கஜபதி ஒன்றும் புரியாமல், 'என்னண்ணே ஆச்சு... நல்லாத்தானே இருந்தீங்க...' என்றார்.
'உஷ்... கதவை மூடிட்டு வா...' என்றார் ராதா.
'அவர் அனுப்புன ஆள்கிட்ட எனக்கு உடம்பு சரியில்லன்னு சொன்ன... பணத்துகாகத்தான் இப்படிச் சொல்லுறாருன்னு நினைச்சு, அவரும், பணத்த கொண்டாந்து கொடுத்துட்டாரு. உடனே ஷூட்டிங் போனா, உடம்பு சரியில்லன்னு சொன்னவன், பணம் கொடுத்ததும் வந்துட்டான்னு சொல்லுவான் இல்லயா... அதான் இப்படிச் செய்தேன். இப்ப உண்மையா உடம்பு சரியில்லைன்னு நம்பிப் போயிட்டாரு...' என்று சிரித்தார் ராதா.
'என் ரேட், 30,000 ரூபாய்; யார் வேணும்ன்னாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்...' என்று வெளிப்படையாக அறிவித்தார் ராதா. குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை என, மூன்றும் கலந்து செய்யும் நடிகர் என்பதால், ராதாவை தேடி வந்து ஒப்பந்தம் செய்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும், ராதா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
எத்தனை படங்கள் ஒப்பந்தமானாலும், கால்ஷீட் சொதப்பாமல், சரியான நேரத்துக்கு சென்று, அமைதியாக நடித்துக் கொடுத்தார் ராதா. இதனால், அதுவரை அவர்மேல் இருந்த, 'இமேஜ்' மாறி, 'ராதாவை தாராளமாக படத்தில் போடலாம்; பிரச்னை செய்ய மாட்டார். தொழில் சுத்தம் உள்ளது...' என்று உணர ஆரம்பித்தனர்.
என்றாவது ஷூட்டிங்குக்கு வர தாமதமாகும் என்றாலோ அல்லது வரமுடியாது என்றாலோ, முந்தைய தினமே தகவல் தெரிவித்து விடுவார் ராதா.
எத்தனை, 'டேக்' எடுத்தாலும், எதுவும் சொல்லாமல் ஒத்துழைத்தார். மற்ற நடிகர்கள் செட்டுக்கு லேட்டாக வந்தாலும், தான் சொன்ன நேரத்துக்கு வந்து அமைதியாக காத்திருந்தார். ஷாட் இடைவெளிகளில் கூட, ஸ்டுடியோவை விட்டு எங்கும் செல்லாமல், தனக்கான அடுத்த ஷாட் வரும் வரை, மேக் - அப் ரூமிலேயே பொறுமையாக காத்திருப்பார்.
உண்மையிலேயே ராதாவின் இத்தகைய செயல்பாடுகள், எல்லாருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தன.
கடந்த, 1961ல் ராதா நடித்து, 10 படங்கள் வெளிவந்தன. அதில், குறிப்பிடத்தக்க படங்கள் குமுதம், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், சபாஷ் மாப்பிள்ளை மற்றும் தாய் சொல்லைத் தட்டாதே!
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த படம், தாய் சொல்லைத் தட்டாதே! தேவருக்கும், ராதாவுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. 'தேவர் பிலிம்ஸ்சுக்கு எப்ப தேதி கேட்டாலும் கொடுத்துருப்பா...' என்று, கஜபதியிடம் சொல்லி வைத்தார் ராதா. ஏனென்றால், பண விஷயத்தில் நேர்மையானவர் தேவர். நடிகர்கள் கேட்டால், அட்வான்சாகவே முழுச் சம்பளத்தையும் கொடுக்கக்கூடியவர். அதுவும் பணமாக!
தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மேல், அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் தேவர். எம்.ஜி.ஆர்., - சரோஜா தேவி மற்றும் எம்.ஆர்.ராதாவை வைத்து, வரிசையாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார் தேவர். பட பூஜை அன்றே, ரிலீஸ் தேதியை சொல்லி விடுவார். அதேபோன்று, சொன்ன தேதியில் படத்தை முடித்து ரிலீசும் செய்து விடுவார்.
குமுதம் பட ஷூட்டிங்கில் இருந்தார் ராதா. அது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. வழக்கம் போல ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் படப்பிடிப்பை நடத்தியபடி இருந்தார் தயாரிப்பாளர், டி.ஆர்.சுந்தரம்.
அப்போது, 'நடிகை பி.எஸ்.ஞானம், சாலை விபத்தில் இறந்து விட்டார்...' என்று செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தார் ராதா. இதே மாடர்ன் தியேட்டர்சில் தான் ஞானத்தை முதன் முதலில் சந்தித்ததும், இரவோடு, இரவாக அவரை கடத்தி சென்றதும்!
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது; கலங்கிய நிலையில் இருந்த ராதாவிடம், 'அண்ணே போய்ட்டு வரலாம்ண்ணே...' என்றார் கஜபதி. யோசித்தார் ராதா; காரணம், சுந்தரம் மேல் ராதாவுக்கிருந்த மதிப்பு. சிறிது நேரம் யோசித்தவர், சுந்தரத்திடம் சென்று மெல்ல விஷயத்தைச் சொல்லி, 'எனக்கு, 'மூட்' சரியில்ல; ஆனாலும் நடிக்கிறேன். ஆனால், நீங்க எதிர்பார்க்கும் நடிப்பை என்னால கொடுக்க முடியாது...' என்றார்.
'நீங்க கிளம்புங்க; உங்களால எப்ப முடியுமோ, அப்ப திரும்பி வாங்க...' என்றார், டி.ஆர்.சுந்தரம்.
ராதா இல்லாத தமிழ்ப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, 1962ம் ஆண்டு அவருக்கு அமைந்தது. எல்லாப் படங்களின் டைட்டில் கார்டிலும், இருந்தார். அந்த ஆண்டின், எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், அவர் நடித்த ஏதாவது, ஒரு படம் ரிலீஸ் ஆனது.
சென்னை, சேலம் மற்றும் கோவை என்று ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் ஓடிக் கொண்டிருந்தார் ராதா.
காலையில், 6:00 மணிக்கு எழுவார்; 7:00 மணிக்கு கஜபதி வந்ததும், சில சமயம், வீட்டிலிருந்தே மேக் - அப்புடன் கிளம்புவார் அல்லது செட்டில் போய் மேக்கப் போட்டுக் கொள்வார். காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை ஒரு கால்ஷீட், மதியம் 2:00 முதல், 6:00 வரை, அடுத்த கால்ஷீட், மாலை, 6:30 முதல், 10:00 வரை மூன்றாவது கால்ஷீட் என்று பறந்து கொண்டிருந்தார் ராதா.
சில நேரங்களில், காலையில் விமானத்தில் ஏறி கோவை செல்வார். அங்கு நடித்து விட்டு, மதிய விமானத்தில் சென்னை திரும்புவார். இங்கு மாலை கால்ஷீட். விமானத்தில் சீசன் டிக்கெட் வாங்காத குறையாகப் பறந்து கொண்டிருந்தார். விமான டிக்கெட் கிடைக்காத நேரங்களில், ரயிலில் பயணம் செய்தார்.
ஒரு முறை, கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்ப, விமானம் மற்றும் ரயில் டிக்கெட் இரண்டுமே கிடைக்கவில்லை. மறுநாள், சென்னையில் படப்பிடிப்பு இருந்ததால், வாடகைக்கு, வேன் எடுத்தார். 'ஊர் போய்ச் சேர்ற வரைக்கும், இந்த வண்டி எந்தப் பிரச்னையும் செய்யலன்னா இந்த வண்டிய நானே வாங்கிக்கிறேன்...' என்று சொல்லி, வண்டியில் ஏறி அமர்ந்தார்.
வேன் பயணம் இனிமையாக அமைந்தது. 'கஜபதி... இந்த வேனை நாமளே வாங்கிரலாம்; அடுத்து நடிக்கிற படத்தோட சம்பளத்துல கழிச்சுக்கங்கன்னு சொல்லி, தேவர்கிட்ட பணம் வாங்கி கொடுத்திரு...' என்று சொன்னார். அதேபோன்று தேவர் பணம் கொடுக்க, ராதா வாங்கிய அந்த வேனின் எண் - 8909.
வீட்டில் வாகனம் இல்லாத போது, ஸ்டுடியோவுக்கு, அவசரமாகப் போக வேண்டுமென்றால், தயங்காமல் ரிக் ஷாவில் ஏறிப்போகும் பழக்கத்தை வைத்திருந்தார் ராதா.
— தொடரும்.
மே 31, 2015 வாரமலர் இதழில் வெளியான, 'எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை' கட்டுரை தொடரில், நல்ல இடத்து சம்பந்தம் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், அப்படத்தை இயக்கியவர், கே.சோமு.
— பொறுப்பாசிரியர்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- முகில்

