
கமல் வைத்த சஸ்பென்ஸ்!
கமலுடன் பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராைஜ தற்சமயம், தூங்காவனம் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் கமல். அத்துடன், மற்றொரு கன்னட நடிகரான கிஷோரையும் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே வில்லன் நடிகர்கள் என்பதால், படத்தில் யார் பிரதான வில்லன் என்பது சஸ்பென்சாகியிருக்கிறது. ஆனால், இதுபற்றி கமலை கேட்டால், 'இது, 'த்ரில்லர்' படம் என்பதால், நிறைய சஸ்பென்ஸ் உள்ளது; அவ்வரிசையில் இதுவும் ஒரு சஸ்பென்சாக இருந்து விட்டுப் போகட்டுமே...' என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.
— சினிமா பொன்னையா
புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!
நடிகைகளில், ராய்லட்சுமி கொஞ்சம் தைரியமானவர். எங்காவது பெண்களுக்கான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்துவார். அவ்வகையில், சமீபத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்ற போது, அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஒரு புலிக்குட்டியை, தன் மடியில் அமர்த்தி புட்டிப்பால் கொடுத்துள்ளார். இதையடுத்து, 'புலிக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது...' என்று தெரிவித்து, டுவிட்டரில் அப்புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கி!
— எலீசா
டாப்சியின் திருமண தொழிற்சாலை!
நடிகை டாப்சிக்கு நீண்ட காலமாகவே ஏதேனும் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்ததால், தற்போது, 'வெட்டிங் பேக்டரி' என்ற திருமண தொழிற்சாலையை துவங்கியுள்ளார். இதில், அவர் மட்டுமின்றி, அவரது தோழிகள் சிலரும் பார்ட்னர்களாக உள்ளனர். திருமணம் முதல், மணமக்கள் தேனிலவுக்கு செல்லும் வரையிலான அனைத்து அலங்காரப் பொருட்களும் இந்த வெட்டிங் பேக்டரி மூலம் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. இதை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட, மன மகிழ்ச்சிக்காக செய்து வருவதாக கூறுகிறார் டாப்சி. வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும்!
— எலிசா
சிம்பு - தனுஷ் மீண்டும் மோதல்!
சிம்புவை வைத்து, சில ஆண்டுகளுக்கு முன் வெற்றிமாறன் இயக்கயிருந்த படம், வடசென்னை. ஆனால், அப்படம் துவங்காமலேயே, 'ட்ராப்' செய்யப்பட்டது. அப்படத்தை, தற்போது மீண்டும் தூசு தட்டுகிறார் வெற்றிமாறன். இதை அறிந்த சிம்பு, அப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், அவரது மார்க்கெட் மற்றும் குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வராமல், மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பவர் என்பது உள்ளிட்ட சில விஷயங்களை கருத்தில் கொண்டு, அவரை நிராகரித்து விட்டார் வெற்றிமாறன். மாறாக, சிம்பு நடிக்க வேண்டிய, வடசென்னை படத்துக்கு, இப்போது தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளார். இத்தகவலை தனுஷ் தன் டுவிட்டரில் அறிவித்ததில் இருந்து, மறுபடியும், தனுஷை போட்டியாளராக பார்க்க துவங்கியுள்ளார் சிம்பு.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
நடன சூறாவளி நடிகருக்கு, ஐ பட நாயகி மீது அளவற்ற பிரியம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரை, தன் பாலிவுட் படத்தில் நடிக்க வைத்து, அழகு பார்த்த நடிகர், அப்படப்பிடிப்பு முடிந்த அன்று, அவருக்கு மட்டும் ஒரு ரகசிய பார்ட்டி கொடுத்து உபசரித்தார். அதையடுத்து, இருவருமே அடிக்கடி மீட்டிங் போடுகின்றனர். ஆக, இந்த மீட்டிங் தொடர்ந்தால், காதல், கல்யாணம் வரை போய் நிற்கும் என்கின்றனர்.
தன் ஆரம்ப கால படங்களில், ஐஸ் நடிகைக்கு சிபாரிசு செய்து வந்த பீட்சா நடிகர், இப்போது அம்மணியை கண்டுகொள்வதில்லை. இருப்பினும், நடிகை விடுவதாக இல்லை. நடிகரை படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று சந்தித்து வாய்ப்பு கேட்பதுடன், கேரவனுக்குள்ளேயே நடிகரை, தன் அன்புச் சங்கிலியால் கட்டிப் போடுகிறார். இதனால், சில காலம் விட்டுப் போயிருந்த மேற்படி நடிகர் - நடிகையின் லூட்டிகள் மீண்டும் அரங்கேறி வருகின்றன.
சினிமா துளிகள்!
* கெத்து படத்தில் பாவாடை - தாவணி கெட்டப்பில் நடித்த போதும், பாடல் காட்சிகளில் டூ-பீஸ் உடையில் கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன்.
* காக்கா முட்டை படத்தை தொடர்ந்து, விதார்த்துடன் நடித்து வரும், குற்றமும் தண்டனையும் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
* நீ நான் நாம் என்ற படத்தில், 18 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார், ஓ காதல் கண்மணி பட நாயகி நித்யா மேனன்.
அவ்ளோதான்

