sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

காலம் மாறிடுச்சு!

/

காலம் மாறிடுச்சு!

காலம் மாறிடுச்சு!

காலம் மாறிடுச்சு!


PUBLISHED ON : ஜூன் 14, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 14, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நேத்தைக்கே வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்; வாங்கிட்டு வரல. இன்னிக்காவது மறக்காம வாங்கிட்டு வாங்க...'' என, உத்தரவு போட்டாள் மனைவி.

''என்னான்னு தெரியல; நேத்தைக்கு அண்ணாச்சி கடை மூடியிருந்தது; அதான் வாங்க முடியல. இன்னிக்கு மறக்காம வாங்கிட்டு வரேன்...'' என்றேன்.

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, அண்ணாச்சி கடைக்குள் நுழைந்தேன். கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்கும் மேல் எங்க தெருவில் கடை வைத்துள்ளார் அண்ணாச்சி. முதலில் ஓலைக் குடிசையில் ஆரம்பித்த கடை, இன்று அதே இடத்துல பெரிதாக வளர்ந்துள்ளது. ஆனாலும், அன்று போலவே, வாடிக்கையாளர்களிடம் மரியாதை, பணிவு, சிரித்த முகம்! அதனால் தான் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வந்து விட்டாலும், அண்ணாச்சி கடையை மறக்காமல் உள்ளனர் அப்பகுதி மக்கள்.

''வாங்க தம்பி,'' புன்சிரிப்புடன் வரவேற்றார் அண்ணாச்சி.

''என்ன அண்ணாச்சி... நேத்தைக்கு திடீர்ன்னு கடைய மூடிட்டீங்க?'' என்று கேட்டேன்.

''சில்லரை வியாபாரத்துல, அன்னிய முதலீடு வருதாமுல்ல... அதான் எங்களோட எதிர்ப்ப தெரிவிக்க, ஒரு நாள் கடையடைப்பு செஞ்சோம்,'' என்றார்.

''ஏன் அண்ணாச்சி... கடைய மூடினா, அரசு பயந்துடுமா...'' என்றேன் சிரித்துக் கொண்டே!

''அப்படியில்ல தம்பி. வியாபாரம் செய்ய வந்த பயலுவ, நம்ம நாட்டையே அடிமையாக்கி ஆண்டானுவ; மறுபடியும், அவனுங்கள வெத்தலை பாக்கு வச்சு வரவேற்கணுமான்னு தான் எங்களுக்கு கோபம்!''

''காலத்துக்கேத்தா மாதிரி மாறிக்கணும் அண்ணாச்சி. வெளிநாட்டுக்காரன் இங்கே சில்லரை வியாபாரம் ஆரம்பிக்கும்போது, அன்னிய முதலீடு கிடைக்கும்; புதிய தொழில் நுட்பம் இங்கே வரும்; விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மக்களுக்கும் அந்த லாபம் போய் சேரும்ல,''என்றேன்.

''நல்லா சொன்னீய... நம்ம நாட்டுல பணம் இல்லாம போகல; அதை உபயோகமா பயன்படுத்தத் தெரியாம, கறுப்புப் பணமா வெச்சிருக்கானுவ. தொழில்நுட்பம்... அதென்ன ராக்கெட் விடற தொழில்நுட்பமா... அதக்கூட வெள்ளைக்காரன் தர மாட்டேன்னதும், நாமளே செஞ்சிக்கிடலயா... அது மட்டுமில்ல, அவனுகளுக்கு கம்ப்யூட்டரிலே ஏதோ புரோக்கிராம்ன்னு சொல்லுதாவளே... அத எழுதித் தரதே நம்மாளுக தானாமுல்ல. விவசாயிக்கு நல்ல விலைன்னு சொன்னீகளே... எப்பவுமே மொத்தமா வாங்குறவன் கம்மியா தான் தருவான்; அதுதான் வியாபாரம்.

''எங்கள மாதிரி ஆளுங்க தான், அதிக விலை தருவாங்க. நீங்களே சொல்லுங்க... அடுத்த தெருவில இருக்கற சூப்பர் மார்க்கெட்டில, நம்ம கடைய விட கொறஞ்ச விலையில பொருட்களை வாங்க முடியுமா? அத்தா பெரிய கட்டடம், யூனிபார்ம் போட்ட பயலுவ, பொண்ணுவ; முழுக்கா, 'ஏசி!' அதோட ஏகப்பட்ட விளம்பரம், இந்தக் காசெல்லம் யாரோட தலையில விழும்...''

அண்ணாச்சி சொல்றதுல உண்மை இருந்ததால், பேசாமல் தலையாட்டினேன்.

''அதுல பாருங்க தம்பி... இப்போ என் கடையில வேலை செய்யற பயலுவ, 10 ஆண்டுக கூட இருந்தானுவன்னா நானே, அவனுக்கு ஒரு கடை வெச்சித் தருவேன். சூப்பர் மார்க்கெட்லே, வேலைக்குப் போற பயலுவகளுக்கு, யாரு இருக்கா...'' என்றார்.

அண்ணாச்சி சொல்வது வாஸ்தவம் தான். கடையில வேலை செய்யற பசங்க, அவரோட வீட்டுல தான் வாசம். அண்ணாச்சிக்கும், பசங்களுக்கும் ஒரே சாப்பாடு தான். இதெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்குமா... கடைசி வரைக்கும், ஒரு வேலையாளாவே இருந்து முடிய வேண்டியது தானே அவர்களோட வாழ்க்கை.

யோசித்துப் பார்க்கும் போது, அண்ணாச்சி சொல்வது எல்லாமே சரி என்று தான் பட்டது. ஆனாலும், சூப்பர் மார்க்கெட் சங்கிலிக்கான மென்பொருள் உருவாக்கத்தில், என் கம்பெனி ஈடுபட்டுள்ளது. அந்த புராஜெக்டுக்கு, நான் டீம் லீடர் என்பதால், ஒன்றும் பேசாமல் திரும்பினேன்.

ஆறு மாதம் புராஜெக்ட் வேலை என, கம்பெனி என்னை அமெரிக்காவிற்கு அனுப்பியது. பையன் படிப்பு கெட்டுவிடக் கூடாதென்று, நான் மட்டும் அமெரிக்காவுக்கு சென்றேன்.

ஒரு வழியா புராஜெக்ட் முடிஞ்சு, ஊருக்குத் திரும்பி வந்த மறுநாள், காலையிலேயே பையைக் குடுத்து, கடைக்கு அனுப்பி வைத்தாள் மனைவி.

கையும், பையுமாக அண்ணாச்சி கடைக்கு கிளம்பினேன். கடை மூடியிருந்தது. பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் விசாரிச்சேன்.

'அண்ணாச்சி கடைய மூடி நாலஞ்சு மாசம் ஆச்சே...'என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'பெரிய முதலாளிகள், தங்களது பண பலத்தால், சிறிய முதலாளிகளை அழிக்கின்றனரே... இதற்கெல்லாம் விமோசனமே கிடையாதா...' என நினைத்து மனம் கனத்தது.

சில மாதங்கள் சென்றிருந்த நிலையில், என் கம்பெனியில் புராஜெக்ட் ஒன்றும் கைவசமில்லை என்று, மூன்று மாத சம்பளத்தை கையில் கொடுத்து, என்னை வெளியே அனுப்பி விட்டனர்.

புராஜெக்ட் இல்லை என்பதெல்லாம் சும்மா! நான் இந்த கம்பெனியில் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. என் இடத்துல, ஒரு புது ஆளைக் கொண்டு வந்தா, என் சம்பளத்திலே பாதி கொடுத்தா போதும். கம்பெனிக்கு லாபம்; அதனால், என்னை வெளியேற்றி விட்டனர்.

இத்தனை வயசுக்கு மேலே, எப்படி புதுப் பசங்களோட போட்டி போட்டு வேலை தேடறது... அப்படியே வேற ஒரு வேலை கிடைச்சாலும், இந்த சம்பளம் கிடைக்குமான்னும் தெரியாது.

அண்ணாச்சியின் ஞாபகம் வந்தது. நானாவது வேற ஏதாவது வேலையில் சேர்ந்துடலாம். ஆனால், அவர் என்ன செய்வார்... அண்ணாச்சியைப் பார்க்கணும் போல இருந்தது. அவர் வீட்டை விசாரித்து சென்றேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே, வீட்டில தான் இருந்தார் அண்ணாச்சி.

என்னைப் பார்த்ததும், ''அடடே... வாங்க தம்பி,''என்று வரவேற்று, உள்ளேயிருந்து, நாற்காலியைக் கொண்டு வந்து போட்டவர், மேல் துண்டால் துடைத்து, ''உட்காருங்க தம்பி,'' என்றார்.

''மோர் சாப்பிடறீங்களா?'' என்று கேட்டவர், என் பதிலை எதிர்பார்க்காமலேயே,''தாயி...ரெண்டு கிளாஸ் மோரு கொண்டு வா,''என்றார்.

இரண்டு பெரிய டம்ளர்களில் இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம் போட்ட மோரை எடுத்து வந்தார் அண்ணாச்சியின் மனைவி.

''தம்பி... அமெரிக்காவுலேர்ந்து எப்போ வந்தீங்க?''என்று கேட்டார்.

''நான் வந்து நாலு மாசம் ஆச்சு அண்ணாச்சி. வந்த உடனே கடையப் பாத்தேன். நீங்க கடைய மூடிட்டீங்கன்னு சொன்னாங்க. அப்பவே உங்கள வந்து பாக்கணும்ன்னு நினைச்சேன், முடியல. அதான், இப்ப உங்கள பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்,'' என்றேன்.

''ஆமாங்க தம்பி... கடையில வியாபாரம் கொறஞ்சிட்டே வந்தது. எல்லாம் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம கடையில விலை கம்மியாச்சே... அதனால வாடிக்கையாளர்க நம்மள விட்டுப் போக மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா, அதெல்லாம் தப்புக் கணக்கா போச்சு. கடையில, 'ஏசி' இல்ல, சின்ன கடைன்னு பல காரணத்தை சொல்லி வாடிக்கையாளர் வரத்து குறைஞ்சு போச்சு,'' என்றார்.

கேட்கவே கஷ்டமாக இருந்தது. என் கஷ்டத்தை, அவரிடம் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. சொன்னதும், அதிர்ந்து விட்டார் அண்ணாச்சி.

''என்ன தம்பி சொல்றீய... உங்களுக்குக் கூடவா இப்படி... இத்தனை வருஷம் வேலை செஞ்சு என்ன தம்பி பிரயோசனம்,''என்றார்.

''அதெல்லாம் பெரிய விஷயமில்லே அண்ணாச்சி. எப்படியாவது இன்னொரு கம்பெனியில வேலை கிடைச்சிரும். ஆனா, சம்பளம் தான் கம்மியாயிருக்கும். ஆனா, நீங்க...''

பெரிதாகச் சிரித்தார். ''நாங்க என்ன தம்பி உங்கள மாதிரி படிச்சுருக்கோமா... எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், இந்த வியாபாரம் தானே... அதை விட்டு நாங்க எங்கே போறது... இப்பவும், அதே வியாபாரம் தான்,''என்றார்.

''கடைய தான் மூடிட்டீங்களே அண்ணாச்சி, அப்புறம் எப்படி வியாபாரம்...''என்றேன் புரியாமல்!

''காலத்துக்கேத்த மாதிரி மாறணும்ன்னு நீங்க தானே தம்பி சொன்னீங்க,''என்றார். முழித்தேன்.

''அதுல பாருங்க தம்பி, ஒரு நாள் நம்ம கடையில கஸ்டமர் ஒரு சோப்பு கேட்டார். அந்த கம்பெனியிலே, புதுசா ஒரு சோப்பு வந்திருந்தது, 'இது வேணுமான்னு பாருங்க'ன்னு சொன்னேன். அவரு வீட்டம்மாகிட்டே கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னவர், அவரோட மொபைல்ல சோப்பைப் படம் பிடிச்சார். ஒரு நிமிஷத்துக்குள்ள, அவர் மனைவி, ஓ.கே., சொல்லிட்டாங்கன்னார்.

''எனக்கு, ஒரே ஆச்சரியமாப் போச்சில்ல... 'எப்படி தம்பி பாக்காமலே சம்மதிச்சாங்க'ன்னு கேட்டேன். அப்போ தான், அவர் ஏதோ, 'வாட்ஸ் - அப்'ன்னு ஒண்ணு காமிச்சார். அதிலே படத்தை அனுப்பினாராம்; அடுத்த வினாடி அவங்க வீட்டம்மா பாத்துட்டு, சரின்னு சொல்லிட்டாங்களாம். இது எல்லார் கிட்டேயும் இருக்குமான்னு கேட்டேன். அவர் சிரிச்சிக்கிட்டே நம்ம கடைப் பயன் ஒருத்தன் கிட்டே இருந்து, மொபைலை வாங்கிக் காமிச்சார்.

''பொறவுதான் நம்ம கடையில இடம் கம்மியா இருக்குன்னுதானே கஸ்டமர் வரத் தயங்குறாங்க. அதனால, இந்த, 'வாட்ஸ் - அப்'பையே, நமக்கு சாதகமா உபயோகப்படுத்தினா என்னான்னு யோசிச்சேன். என் மொபைலில், 'வாட்ஸ் - அப்'பையும் போட்டேன். நம்ம கடைக்கு வர்ற கஸ்டமருக்கெல்லாம், என் மொபைல் நம்பரைக் கொடுத்து, 'நீங்க கடைக்கு வர வேண்டிய அவசியமே இல்ல; வேணுங்கற சாமானை உங்க குரல்லயே பதிவு செய்து, எனக்கு அனுப்பிடுங்க. நாங்க, 'பேக்' செய்து, உங்க வீட்டுக்கே டோர் டெலிவரி செய்திடுறோம்'ன்னு சொன்னேன். இது அவங்களுக்கு ரொம்ப சவுகர்யமா போச்சு,'' என்றார்.

''சரி அண்ணாச்சி... அதுக்காக, எதுக்கு கடைய மூடினீங்க?'' என்று கேட்டேன்.

''இது நல்லா, 'பிக்கப்' ஆனவுடனே, கடைக்கு வர்ற கஸ்டமர் கூட்டம் குறைச்சிடுச்சி. அதனாலே, கடை வாடகை தண்டம்ன்னு தோணிச்சு. அதான் கடைய மூடிட்டேன். இப்பல்லாம் கஸ்டமர்கள், 'வாட்ஸ் - அப்'பிலே, ஆர்டரைக் குடுக்குறாங்க. அந்த ஆர்டரை எடுத்து, மொத்தமா பட்டியல் தயாரிக்க நாலு பொண்ணுங்க, கம்ப்யூட்டரோட நம்ம வீட்டிலேயே வேலை செய்றாங்க.

''பட்டியல் தயாரானதும், எங்களோட வினியோகஸ்தருக்கு, நானும், 'வாட்ஸ் - அப்'பிலே ஆர்டர் கொடுத்துடுவேன். மத்தபடி, இந்த சோப்பு, பவுடர் இந்த மாதிரி அயிட்டங்கள் எல்லாம், அந்தந்த டிஸ்ட்ரிப்யூட்டருக்கு போன் செய்து சொன்னா, சில மணி நேரத்துக்குள்ள கொண்டு வந்து குடுத்துடுவாங்க,'' என்றார். கேட்கவே ஆச்சரியமாக இருந்தது.

''அதுக்கப்பறம் நம்ம வீட்டுல வச்சே அதையெல்லாம் பிரிச்சு, ஒவ்வொரு கஸ்டமரோட ஆர்டருக்கும், தேவையான சாமான்களைப் பெட்டியில போட்டு கட்டி, வீட்டிலே கொண்டு போய் குடுத்திடுவாங்க நம்ம பயலுவ.

''அதுல பாருங்க தம்பி, முன்னாடி எல்லாம் சரக்குகளை கடனுக்குத் தான் வாங்குவேன். சில சரக்குகளை முன் கூட்டியே ரொக்க காசு குடுத்து வாங்கணும். அதனால, நம்ம காசும் முடங்கும். வாங்கற சரக்கு ஒரே நாள்ல போகாதில்ல. ஆனா, இப்ப வாங்கற சரக்கெல்லாம் அன்னிக்கே வித்துடும்; அதோட தேவையில்லாத சரக்க வாங்கி, பணத்த முடக்க வேண்டியதும் இல்ல. சரக்குக்குப் பணமும், அடுத்த நாளே பட்டுவாடா ஆயிடும். அதனால, வினியோகஸ்தர்கள் இன்னும் விலையைக் குறைச்சி குடுக்கிறாங்க. ஏற்கனவே, நம்மகிட்ட, எம்.ஆர்.பி.,யை விட விலை குறைவு. டோர் டெலிவரியும் இலவசமா குடுக்க முடியுறதால, இப்ப நம்ம கிட்டே கூட்டம் அலை மோதுது.

''பத்து பைசா முதல் போடலே, கடை வாடகை இல்லே, பொருட்களும் ரொம்ப சல்லிசா கிடைக்குது. லாபமும் முன்னைவிட அதிகமா கிடைக்குது,'' என்றார்.

வெறும் அஞ்சாம் வகுப்பு படித்த அண்ணாச்சி, தன்னை எப்படி மாற்றிக் கொண்டார் என்று நினைத்து வியப்பாக இருந்தது.

இப்போ அண்ணாச்சி கடை, இணையதளத்திலே இருக்கு. ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்துகிட்டிருந்த அண்ணாச்சி, இன்று ஒரு நாளைக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார், பத்து பைசா முதல் போடாமலே!

சொல்ல மறந்துட்டேனே... அண்ணாச்சியோட இணையதளம், 'இ-மெயில்' ஆர்டர் இதெல்லாம் பாத்துக்கறது நான் தான். வீட்டோட வேலை; நல்ல சம்பளம். நீங்களும் உங்க வீட்டுக்குத் தேவையான சாமான்களைக் குறைந்த விலையில, நம்ம அண்ணாச்சியோட, 'வாட்ஸ் -அப்'பிலே வாங்கிக்குங்க!

ஸ்ரீஅருண்குமார்






      Dinamalar
      Follow us