PUBLISHED ON : செப் 14, 2014

தென் கொரியாவின் சியோல் நகரிலிருந்து, 200 கி.மீ., தூரத்தில் போரியாங் என்ற நகரம் உள்ளது. இங்கு நடக்கும் சேறு திருவிழா மிகவும் பிரபலம்.
போரியாங் பகுதியில் உள்ள களிமண் சாந்தில் ஏராளமான மூலிகைகள் கலந்துள்ளன. இதனால், இந்த சேறை வைத்து, பல அழகு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்தப் பொருட்களை உலகம் முழுவதும் பரப்புவதற்கான யுக்தி தான் இந்த சேறு திருவிழா.
மூலிகைகள் நிறைந்துள்ள பகுதியிலிருந்து லாரிகள் மூலம் ஏராளமான சேறுகளை அள்ளி வந்து, ஒரு மைதானத்தில் கொட்டி, விழா எடுக்கின்றனர். இதில், தென் கொரியர்களுடன், ஐரோப்பியர்கள், அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் கொரியாவில் பணியாற்றும் ஆங்கிலேயர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவை கண்டுகளிக்க, 20 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர்; அடர்ந்த சேற்றில் வாகனங்களை ஓட்டும் போட்டி, சேற்றிலேயே சறுக்கு விளையாட்டு என, பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்பதுடன், சேற்றில் இறங்கி, ஆட்டமும் போடுகின்றனர்.
தினமும் மாலையில் பாட்டுக் கச்சேரியும், கடைசி நாளன்று வான வேடிக்கையும் உண்டு. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த சேற்றில் புரண்டு அனுபவிப்பதுடன், மூலிகை மண்ணால் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர்.
வியாபார தந்திரம் எப்படியெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்!
ராஜிராதா
