தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குருஷேத்ரத்தில் முருகன்!

குருஷேத்ரத்தில் முருகன்!

குருஷேத்ரத்தில் முருகன்!


PUBLISHED ON : மே 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குருஷேத்ரம் என்றாலே, மகாபாரதமும், பாரதப் போரும் தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்குள்ள மக்கள், முருகன் வழிபாடும் செய்து வருகின்றனர் என்பது, வித்தியாசமான தகவல். அது மட்டுமல்லாமல், ஹரியானா மாநிலம், குருஷேத்ரம் அருகிலுள்ள பெஹோவா நகரில், முருகனுக்கு கோவிலும் உள்ளது.

இந்த கோவில், 2500 ஆண்டுகள் பழமையானது. மூலவர் கார்த்திகேயன் ஆறு முகங்களுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். கோவில், வடமாநில பாணியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் வரலாறு இது தான்:

சிவனுக்கும், தட்சனின் மகள் சதி என்ற தாட்சாயணிக்கும் திருமணம் நடந்தது. ஆரம்பம் முதலே சிவனின் நடை, உடை, பாவனை தட்சனுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, யாகம் ஒன்றை நடத்திய தட்சன், மருமகனை அழைக்கவில்லை.

இது சதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தந்தையைக் கண்டித்து, யாக குண்டத்திலேயே குதித்து உயிர் விட்டாள். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, யாக குண்டத்தை சிதறடித்தார். பிறகு, தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட தாரகன் என்ற அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான்.

'சிவனின் மகனைத் தவிர, வேறு யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது...' என்ற வரத்தையும், பிரம்மாவிடம் பெற்றான்.

சிரமப்பட்ட தேவர்கள், சிவனுக்கு மற்றொரு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்தனர். இதற்காக மன்மதனின் துணையோடு, அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். கோபமடைந்த சிவன், தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார்.

அதன் பின்னும் கோபம் தணியாததால், சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பறந்து வந்த தீவிரமான ஆறு பொறிகளை, சரவண பொய்கையில் மிதக்க விட்டான், அக்னிதேவன். அந்த பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இதனால், குழந்தைக்கு கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் குழந்தையே தாரகனை வதம் செய்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய கார்த்திகேயன், பெஹோவா கோவிலில் அருள்பாலிக்கிறார். இங்கே, முருகன் பிரம்மச்சாரியாக இருப்பதால், பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரையுள்ள நான்கு மாதங்களில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடுமையான விரத விதிகளை அனுஷ்டிப்பர். உண்மையான ஒரு பக்தன், இங்கே கோரிக்கை வைத்து, அது நிறைவேறவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர், உள்ளூர்வாசிகள்.

டில்லியிலிருந்து, 200 கி.மீ., கரிலிருந்து (பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதி) 70 கி.மீ., குருஷேத்ரத்திலிருந்து, 20 கி.மீ., துாரத்தில், பெஹோவா உள்ளது. காலை, 7:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us