PUBLISHED ON : மே 28, 2023

நட்பென்றால் இதுதான்!
தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் பெண்ணும், அவளது வயதான அம்மாவும், எங்கள் தெருவில், வாடகைக்கு குடி வந்தனர்.
அப்பெண், சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், வீட்டு வேலை செய்து வந்த அம்மாவின் பராமரிப்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்தாள்.
செவிலியர் படிப்பு முடித்து, பணிக்கு சென்ற இரண்டாம் ஆண்டில், திடீர் காய்ச்சலால், அகால மரணமடைந்தாள்.
அப்பெண்ணுடன் பணிபுரிந்த சக செவிலியர்கள் அனைவரும், சோகத்தில் மூழ்கிய அவளின் அம்மாவை அதிலிருந்து மீட்டு தைரியமளித்தனர்.
குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து, வங்கியில் வைப்புத்தொகையாக போட்டு, அதில் கிடைக்கும் வட்டியை, வீட்டு வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள கூறினர். மேலும், சிறு தொகையை கொடுத்து, ஒரு இட்லி கடையை ஆரம்பித்து, தினசரி வருமானத்திற்கும், வழி காட்டி உதவினர்.
அத்துடன், மாதா மாதம் வந்து, அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கின்றனர். இச்செயல், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது.
நட்பென்றால் இது தான் என்று கூறுமளவிற்கு, முன்னுதாரணமாக திகழும் செவிலியர்களை, அனைவருமே பாராட்டுகின்றனர்!
-பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.
ஒழுக்கத்திற்கு முதலிடம் - வித்தியாசமான ஆசிரியை!
தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள், என் மகள். அவளது வகுப்பாசிரியை, தனி, 'வாட்ஸ் ஆப்' குழு ஒன்றை ஏற்படுத்தி, அதில், ஒவ்வொரு மாணவர்களது பெற்றோரின், மொபைல் போன் எண்ணை சேர்த்துள்ளார்.
அக்குழுவில், வீட்டுப் பாடம் தொடர்பான தகவல்களை பதிவிடுவதுடன், நகம் வெட்டுதல், முடி வெட்டுதல் மற்றும் ஷூ பாலீஷ் போட தவறிய மாணவர்களின் விபரங்களை பதிவிடுவார்.
மறுநாள் இதை செய்யாத மாணவர்களின் விபரங்களை சுட்டிக்காட்டி, கடிந்து கொள்வார். அதேபோல், மாணவர்களுக்கு சத்தான நொறுக்குத்தீனி தான் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்.
பாடம் தாண்டி, மாணவர்களின் ஒழுக்கம் முக்கியம் என்பதை அந்த ஆசிரியர் வலியுறுத்தி வர, இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. 'குரூப்'பில் மானம் போய் விடக்கூடாது என, ஆசிரியர் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திக் கொள்கின்றனர், பெற்றோர்.
மற்ற ஆசிரியைகளும் இந்த நடைமுறையை பின்பற்றலாமே!
மா. செந்தமிழ்செல்வி, சென்னை.
மணமகனின் நல்ல செயல்!
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், உறவினர் மகனின் திருமணம், சமீபத்தில் நடைபெற்றது.
திருமணத்தின்போது, மொய் மற்றும் அன்பளிப்புகளை தவிர்த்தனர். அதற்குப் பதிலாக, மாப்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று, தனிப்பட்ட முறையிலும், சிலர் சேர்ந்தும், ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர்.
தன் பங்குக்கு, மேலும் சில உபகரணங்களை வாங்கி, அவன் பயின்ற அரசு பள்ளிக்கு சென்று, அவற்றை வழங்கி, மகிழ்ந்தான்.
அப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், மணமக்களை மனதார வாழ்த்தினர்.
தான் பயின்ற அரசுப் பள்ளியின், ஒரே ஒரு வகுப்பறையையாவது, தற்காலத்திற்கு ஏற்றவாறு, ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு இருந்தவன். தன் திருமண நாளில், அதை நிறைவேற்றிய உறவினர் மகனின் நற்செயலை எண்ணி, அனைவருமே பெருமிதம் அடைந்தோம்.
அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு, முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், இதுபோல் உதவிக்கரம் நீட்டினால், எதிர்கால தலைமுறையின் கல்வித் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை!
— டி.யாஷினி, திருப்பூர்.
