PUBLISHED ON : அக் 20, 2019

அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம், மறக்க முடியாதது.
கையில், மது பாட்டிலை வைத்து, இரவில் தள்ளாடி தள்ளாடி நடந்து வருவேன். அந்த காட்சியை, இயக்குனர், பாலசந்தர் ரொம்ப வித்தியாசமான முறையில் படம் பிடித்திருந்தார்.
'தண்ணி' அடித்து விட்டு, நடந்து வருகிறபோது, என்னுடைய நிழல், தெருவின் ஒரு பக்க சுவரில் தெரியும். அது, என்னை விட பெரிய உருவமாக இருக்கும்படி, 'லைட்டிங்' செய்திருப்பார்.
நிழலுடன், 'நீ ஏன், என் கூடவே வர... நீ என்ன என் பொண்டாட்டியா... இல்லை மனசாட்சியா...' என்று ஆரம்பித்து, வசனம் பேசியபடி நடப்பேன்.
'என்கிட்டே குடிக்கிறதை தவிர, வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. 'ரேசு'க்கு கூட போக மாட்டேன். ஏன் தெரியுமா? எட்டு குதிரை ஓடறதை, 40 ஆயிரம் பேர் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறாங்களே... 40 ஆயிரம் பேர் ஓடினாலும், ஒரு குதிரையாவது வேடிக்கை பார்க்குதா...' என்று, ஒரு வசனம் வரும். ரசிக்க தக்க, 'லாஜிக்!'
அந்த காட்சியின் கடைசியில், 'கையில் உள்ள மது பாட்டிலை, 'சியர்ஸ்' என்று, சுவரில் நிழலின் கையில் இருக்கும் பாட்டிலுடன் மோதி உடைக்கட்டுமா...' என்று, பாலசந்தரிடம் ஆலோசனை போல சொன்னேன்.
'எழுதிக் கொடுத்த வசனங்களே போதும். புதுசா ஒண்ணும் சேர்க்க வேண்டாம்...' என்றார்.
'இல்லை, பாலு... முடிக்கிற போது, 'சியர்ஸ்' என்று ஒரு, 'பஞ்ச்' வைத்தால் நன்றாக இருக்குமே...' என்றேன், மறுபடியும்.
'இப்ப என்ன பண்ணணும்ன்னு சொல்றே... 'சியர்ஸ்' சொல்கிறார் போல காட்சியை முடிக்கணும். அவ்வளவுதானே... ஓ.கே., அப்படியே எடுத்திடலாம்...' என்றார்.
'நான் சொல்கிறார் போல, பாராட்டு வராவிட்டால், 'மேக் - அப்' போடுவதை நிறுத்தி விடுகிறேன். ஆனால், அதற்கு எதிர்மாறாக, ரசிகர்களிடம் பாராட்டு வந்தால், நீ சினிமாவை விட்டு ஒதுங்கி விடக் கூடாது. காரணம், யு ஆர் கிரேட்...' என்றேன்.
காட்சி, ஓ.கே., ஆகி, படத்திலும் இடம் பெற்றது. படம் வெளியானதும், தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சி பார்த்தோம்.
'அந்த காட்சிக்கு ரசிகர்கள், எப்படி, 'ரியாக்ட்' பண்ணுவரோ...' என, ஆவலுடன் காத்திருந்தேன்.
ரசிகர்கள் மத்தியில், 'ரியாக் ஷன்' ஏதுமில்லை; பெரும் ஏமாற்றம். என்னை அர்த்தத்துடன், ஒரு பார்வை பார்த்தார், பாலசந்தர்.
சிறிது நேரத்தில், இடைவேளை. நானும், பாலுவும், 'கேன்டீன்' பக்கம் போனோம்.
அங்கே கண்ட காட்சி, எங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படம் பார்க்க வந்த ரசிகர்கள், 'கேன்டீனில்' டீ, காபி வாங்கி குடித்து விட்டு, காலி கப்களை, 'சியர்ஸ்' சொல்லி, மோதி உடைத்துக் கொண்டிருந்தனர்.
'அட... அந்த காட்சிக்கு இப்படி ஒரு எபெக்டா...' என்று, அர்த்த புன்னகையுடன், பாலுவை பார்த்தேன்.
'ராவுஜி... நீ ஜெயிச்சிட்டே...' என்றார், பாலு.
'இல்லை... படத்தின் இயக்குனர் நீ... எனவே, ஜெயித்தது நீதான்...' என்றேன்.
என் திரைப்பட வாழ்க்கையில், நான் பழகிய, சந்தித்த மனிதர்கள் ஏராளம். அவர்களில் இன்றளவும் நண்பர்களாக இருக்கிறவர்களும் உண்டு; ரயில் சினேகம் போல இடையிலே வந்து, வழியிலே விடைபெற்றவர்களும் உண்டு.
ஆனால், நான் சந்தித்த சில மனிதர்களை, என்றைக்குமே மறக்க முடியாது. அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர், எழுத்தாளர், ஜெயகாந்தன். அவரின் எழுத்துகளை அதிக அளவில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும், நிறைய கூட்டங்களில், அவரது பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.
ஜெயகாந்தன் மீது, அபார மரியாதையும், மதிப்பும் உண்டு. என்றாலும், அவரை நான், நேரடியாக பார்த்தது இல்லை. பாலசந்தர் எழுதி, நான் நடித்த, எதிர் நீச்சல் நாடகம் நடந்து கொண்டிருந்த சமயம், அவரை பார்த்து பேச ஆசைப்பட்டேன்.
சென்னை, எழும்பூர் பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கு, ஒருநாள் காலை போனேன். மாடியிலிருந்து இறங்கி வந்தார். இருவரும் காபி சாப்பிட்டோம். மேடை நாடகங்களில் சிறப்பாக நடித்து, புகழ் பெற்றிருப்பதற்காக பாராட்டினார்.
'எதிர் நீச்சல் நாடகத்தை பார்க்க வரவேண்டும்...' என்று அழைத்தேன்.
அந்த நாடகம், பலரது பாராட்டை பெற்றிருந்தது. அது, ஜெயகாந்தன் எழுதிய, யாருக்காக அழுதான் கதையை காப்பியடித்து எழுதப்பட்டிருப்பதாக, யாரோ அவரிடம் சொல்லி இருக்கின்றனர். இது, எனக்கு தெரியாது. நான் மதிக்கும், ஜெயகாந்தனே, என் நாடகத்தை பாராட்டி, இரண்டு வார்த்தை சொன்னால், அது எவ்வளவு பெரிய விஷயம் என்று நினைத்து, அவரை அழைத்தேன்.
ஜெயகாந்தனும் அழைப்பை ஏற்று, எதிர் நீச்சல் நாடகத்தை பார்க்க வந்தார். நாடகத்தை பார்த்து விட்டு, 'என், யாருக்காக அழுதான் கதைக்கும், எதிர் நீச்சல் நாடகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை...' என்று, பாலசந்தரிடமும், என்னிடமும் சொன்னார். அதன்பின், நாடகம் பற்றிய தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பின்னர், யாருக்காக அழுதான் படமாக எடுக்கப்பட்டது. அதில், நானும் நடித்தேன். அப்போது, நான், 'பிசி' ஆக இருந்த காலகட்டம். என் சவுகரியத்துக்காக, படத்தின் படப்பிடிப்பை, பெரும்பாலும் இரவு நேரத்தில் வைத்துக் கொண்டனர். அப்போது, நானும், ஜே.கே.,வும் மிக நெருக்கமானோம்.
ஒருமுறை, ஜே.கே.,வுடன், நானும், இன்னொருவரும் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். வழியில், காஞ்சிபுரம் மாவட்டம், தொழுப்பேடு ரயில்வே, 'லெவல் கிராசிங்'கில் நின்றது, கார். ரயில்வே கேட் திறக்க, நேரமாகும் என்று தெரிந்தது.
'இப்போ என்ன பண்ணலாம்...' என்று கேட்டு விட்டு, தானே பதில் சொன்னார், ஜே.கே.,
'பிச்சை எடுக்கலாமா?'
— தொடரும்.
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி