
கே
மழை பெய்த ஒரு மாலை வேளை, 'பீச்'சில் வழக்கமாக சந்திக்கும் இடத்தில், நானும், வங்கி அதிகாரியான நண்பரும், மழையை ரசித்தபடி, காரினுள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது, வங்கி அதிகாரி, 'எதிர்பாராமல் இதெல்லாம் நடந்தால், எப்படியிருக்கும்...' என்று கேட்டு, சிலவற்றை பட்டியலிட்டார். அது:
* சிறு மழை பெய்த பின் எழும், மண் வாசனை...
* சாதாரணமாக நினைத்து செய்த ஒரு செயலை, பலர் பாராட்டும் போது...
* அடுத்த நாள், 'லீவு' என, திடீர் அறிவிப்பு வரும் போது...
* நீண்ட நாட்களுக்கு பின், ஆழ்ந்து துாங்கி, புத்துணர்ச்சியாக எழும் நிமிடம்...
* பொருமிக் கொண்டிருந்த வயிறு, காலியாகும் போது, 'அப்பாடி' என, மனம் குரல் கொடுக்கும் போது...
* 'இறைவன் இருக்கார்...' என உணர்த்தும், திடீர் நிகழ்வுகள்...
* அலுவலகம் விட்டு வீட்டிற்குள் திரும்பியதும், 'அப்பா... அம்மா...' என, ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தை...
* 'டிவி'யை, 'ஆன்' செய்ததும், நமக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போது...
* பல அறுவை ஜோக்குகளுக்கு இடையே ஒரு ஜோக்கை படித்ததும், நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிக்கும் போது...
* தீவிரமாய் ஒன்றை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில், அது சார்ந்த புது யோசனை, 'பளிச்'சென மூளையில் சுயம்புவாய் வரும் போது...
* இந்த பிரச்னையை எப்படி
சமாளிக்க போறேனோ என யோசித்தபடியே, அலுவலகத்தினுள் நுழைந்தால், அந்த பிரச்னை நொடியில் தீர்வு பெறும் போது...
* நீண்ட ஆண்டுகள் கழித்து, தெருவில் ஒரு பழைய நண்பரை பார்க்கையில், 'பளிச்'சென அவர் பெயர் ஞாபகம் வரும் போது...
* திட்டமிடாத ஒரு திடீர் சந்திப்பில், உணவு, பேச்சு, பழைய கதைகள் என, நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளும் போது...
இதெல்லாம் நடக்கும் போது, மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்து, 'ஊ லல்லா...' என்று பாடுமே... அந்த சுகானுபவத்துக்கு ஈடு இணையே இருக்காது தானே மணி, என்று முடித்தார், வங்கி அதிகாரி.
'உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா...' எழுதுங்களேன் எனக்கு!
ப
சேலம் செல்ல, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இரவு, 10:40க்கு கிளம்பும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்தேன். 'திண்ணை' நாராயணன் சாரிடமிருந்து வாங்கி வந்த, 'சீன நாடோடி கதைகள்' என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு கதை:
சீனாவில், 'அசைவற்று நிற்கும் கோழி போல' என, ஒரு பழமொழி உண்டு. கவனம் சிதறாது, பதறாது நிற்கும் மனிதர்களுக்கு உவமையாக, இப்பழமொழியை பயன்படுத்துகின்றனர். இதன் பின்னணி மிகவும் சுவையானது.
முற்காலத்தில், சீனாவில், சேவல் சண்டை புகழ் பெற்றிருந்தது. ஒரு சமயம் புகழ்பெற்ற சேவல் சண்டை நிபுணரான, ஜிஜிங்சியிடம், ஒரு சேவலைக் கொடுத்து, சண்டைக்கு பழக்க சொன்னார், குயி தேசத்து மன்னர்.
சேவலுக்கு பயிற்சி தர ஆரம்பித்தார், ஜிஜிங்சி.
பத்து நாட்களுக்கு பின், 'சண்டைக்கு, சேவல் தயாரா...' என கேட்டார், மன்னர்.
'இல்லை மன்னரே... இப்போது தான் சேவலுக்கு ஆவேசம் வருகிறது. இப்போ சண்டையிட்டால் தோற்கும். எனவே, பயிற்சி தொடரட்டும்...' என்றார்.
இருபது நாட்கள் சென்றதும், மீண்டும் மன்னர் அதே கேள்வியை கேட்டார்.
'முன்பை விட முன்னேறி இருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது, பொறுமையிழந்து விடுகிறது. எனவே, இன்னும் பயிற்சி தேவை...' என்று கூறினார், ஜிஜிங்சி.
முப்பது நாட்கள் கடந்தன. மீண்டும் கேட்டார், மன்னர்.
'பயிற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது, மன்னரே. ஆனாலும், கண்களை இங்கும், அங்கும் அலைய விடுகிறது. முழு சக்தியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, இன்னும் சில நாட்கள் தேவை...' என்றார்.
நாற்பது நாட்கள் கடந்ததும், பொறுமை இழந்த, மன்னர், 'ஜிஜிங்சி, என்ன ஆயிற்று... சேவல் இன்னும் தயாராகவில்லையா...' என்று கேட்டார்.
நிபுணர் சிரித்துக் கொண்டே, 'மன்னரே... இப்போது, சேவல் சண்டைக்கு தயார்...' என்று அறிவித்தார்.
மன்னரின் உத்தரவுப்படி, சேவல் சண்டை துவங்கியது. மன்னரின் சேவல் பங்குபெறுவதை காண, ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அங்கே வந்திருந்த அத்தனை சேவல்களும், ஆக்ரோஷமாக அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்தன. ஆனால், மன்னரது சேவல், அமைதியாக, கம்பீரமாக, சிலிர்த்து, நிமிர்ந்து நின்றது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
ஆனால், சண்டையின் போது, மற்ற சேவல்களால் மன்னரின் சேவலை எதிர்த்து நிற்க முடியவில்லை. எடுத்த எடுப்பிலேயே அவைகள் பயந்து ஓடின. அஞ்சாமல் எதிர்த்து நின்றது, மன்னரின் சேவல்.
இந்த சேவலை கொண்டே உருவானது, மேற்சொன்ன பழமொழி.
அச்சமின்றி செயல்புரிவதற்கும், பிரச்னைகளை எதிர்த்து நிற்பதற்கும், அடிப்படையில் நல்ல பயிற்சியும் தேவைப்படுகிறது. பொறுமையோடு, பயிற்சி இருந்தால், எச்சூழலையும் வெல்ல முடியும்.
கதையின் இறுதியில், இவ்வாறு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
மன்னரின் சேவலை பற்றியும், அதற்கு பயிற்சி கொடுத்தவரையும் சற்று நேரம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
துாக்கம் கண்ணை சுழற்றவே, புத்தகத்தை மூடி வைத்து, படுத்துக் கொண்டேன்.