PUBLISHED ON : செப் 29, 2019

திருவிளையாடல் படத்தில், நீங்கள் ரசித்து பார்த்த, தருமி கதாபாத்திரத்தில், நான் நடிப்பதற்கு உத்வேகமாக இருந்தவர், சென்னை, மயிலாப்பூரில் நான் சந்தித்த கிருஷ்ணசாமி அய்யர் என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளக்கரையில் நின்று, மைய மண்டபத்தை நோக்கி அவர் பேசியது, எனக்கு மறக்கவே மறக்காது.
'யூ நோ, மிஸ்டர் கிருஷ்ணசாமி அய்யர்...' என்று, அவர் அழைத்தது, வேறு யாரையும் இல்லை. தன்னைத் தான்.
'பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த குளம் எப்படி இருந்தது... அறுபத்து மூவர் உற்சவம் என்றால், ஊரே, 'ஜே ஜே' என்று இருக்கும். தெப்ப குளத்தில் தண்ணீர் நிரம்ப வழியும்... தண்ணீரில் தெப்பம் மிதந்து போவதை பார்க்க, கண்கொள்ளா காட்சியாக இருக்குமே...
'இன்றைக்கு, குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. பசங்க, குளத்திலே கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அந்த பசுமையான நாட்கள், இனி வருமா... ஊகூம் வராது... இனி, வரவே வராது...' இங்கிலீசும், தமிழுமாக, தமக்கு தாமே பேசிக் கொண்டிருந்த வித்தியாசமான மனிதரை, பார்த்து வியந்து போனேன்.
அவரை நினைவுக்கு கொண்டு வந்து, கேமரா மேன், சுப்பாராவிடம், 'எது வரைக்கும், 'லைட்டிங்' பண்ணி இருக்கீங்க...' என்றேன்.
'இந்த மண்டபம் முழுசும் பண்ணியாச்சு...' என்றார்.
'இங்கே, ஒரு, 'டிராலி' போட்டால், மண்டபத்தில் நுழைந்து, பேசிக் கொண்டே நடந்து, மறு கோடி போய், அங்கே உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து பேசுவது வரை எடுக்க முடியும் இல்லையா...' என்றேன்.
'ஓ... தாராளமாக எடுக்க முடியும்...' என்றார்.
இயக்குனரிடம், 'சார்... ஒத்திகை வேண்டாம். நேரே, 'டேக்' எடுத்திடுங்க...' என்றேன்.
அந்த சமயம் பார்த்து, 'செட்டில்' இருந்த இருவர், தங்களுக்குள், 'சிவாஜி, இப்போ வந்திடுவார், இல்லை... இல்லை... வர தாமதமாகும்...' என்று பேசிக் கொண்டிருந்தது, காதில் விழுந்தது. அதையே துவக்கமாக எடுத்துக் கொண்டேன்.
இயக்குனர், 'ஆக் ஷன்' சொல்ல, கேமரா ஓட துவங்கியது.
'வர மாட்டான்... வர மாட்டான்... நிச்சயம் வர மாட்டான்... எனக்கு நல்லா தெரியும்... வர மாட்டான்...' என, வசனம் பேசியபடி, உள்ளே நுழைந்தேன்.
மண்டபத்தின் மறு கோடி வரை, புலம்பியபடியே நடந்து போய், அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்து, புலம்பலை தொடர்ந்தேன். மொத்தத்தையும், ஒரே, 'ஷாட்'டில் எடுத்து முடித்தார்.
'ரொம்ப பிரமாதம்... ரொம்ப பிரமாதம்...' என்று பாராட்டினார், ஏ.பி.என்.,
அடுத்த சில நிமிடங்களில், பரமசிவனாக, 'மேக் - அப்' போட்டு, கம்பீரமாக, 'செட்டு'க்குள் நுழைந்தார், சிவாஜி.
எனக்கும், சிவாஜிக்குமான காட்சியை விளக்கினார், ஏ.பி.என்.,
'என்ன புலவரே... புலம்புகிறீர்...' என்றார், சிவாஜி.
'ம்... இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை... பேசும்போது, ரொம்ப இலக்கணமா பேசு... ஆனா, செய்யுள் எழுதும்போது, கோட்டை விட்டுரு...' என்றேன்.
சிவாஜி, ஏ.பி.என்., பக்கம் திரும்பி, 'என்ன, ஏ.பி.என்., நாகேஷ் பேசறது புதுசா இருக்கே...' என்று கேட்க, 'நீங்கள், பரமசிவன் சார்... அவர், அன்றாடங்காய்ச்சி புலவர்; அவர், 'லெவல்' அவ்ளோ தான், ஏதோ புலம்பட்டும் விட்டுடுங்க...' என்றார்.
சிவாஜி முன்னால் நடக்க, நான், அவர் பின்னால் நடந்தபடியே வசனம் பேசுவதாக காட்சி. எனவே, நான் பின்னால் வசனம் பேசுகிறபோது, வளைந்து, நெளிந்து, 'ஆக் ஷன்' பண்ணுவதை, அவரால் பார்க்க முடியாது. ஒரு வழியாக, சொன்ன காலக்கெடுவுக்குள், என் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்தனர்.
சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு, 'டப்பிங்' பேச வேண்டிய கட்டம் வந்தது.
ஏ.பி.என்.,னின் தியேட்டரில், 'டப்பிங்'குக்கு, வந்து விட்டார், சிவாஜி. நான் சிறப்பாக நடித்திருப்பதாக அனைவரும் பாராட்டினர்.
ஆனாலும், மிகுந்த, 'சஸ்பென்ஸ்' உடன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரே விஷயம், காட்சிகளை பார்த்து, சிவாஜி என்ன சொல்லப் போகிறாரோ என்பது தான்.
'டப்பிங்' தியேட்டரில், கடைசி வரிசையில் பதற்றத்துடன் காத்திருந்தேன்.
திரையில், காட்சி ஓடியது. பார்த்துக் கொண்டிருந்த, சிவாஜி, காட்சி முடிந்தவுடன், ஏ.பி.என்.,னை கூப்பிட்டு, 'இன்னொரு தடவை, இந்த காட்சியை போடச் சொல்லுங்க...' என்றார்.
சிவாஜி, எதற்காக மறுபடியும் இந்த காட்சியை பார்க்க வேண்டும் என்கிறார் என்று, எனக்கும் புரியவில்லை.
'இந்த காட்சி, எனக்கு பிடிக்கவில்லை; துாக்கி விடுங்கள்...' என்று சிவாஜி சொல்லப் போகிறார் என, தோன்றியது.
'அடடே... நம் உழைப்பு முழுவதும் வீண் தானா...' என்ற துக்கம், தொண்டையை அடைத்தது.
காட்சி முடிந்ததும், சிவாஜியை நெருங்கினார், ஏ.பி.என்.,
சிவாஜியின் உதடுகள் உச்சரிக்கப் போவதை எதிர்பார்த்து, காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன். நெஞ்சம் படபடத்தது.
'இந்த மாதிரி ஒரு நடிப்பை, நான் பார்த்தது இல்லை. நாகேஷின் நடிப்பு, ரொம்ப பிரமாதம். தயவுசெய்து, இந்த காட்சியில் ஒரு அடி கூட, 'கட்' பண்ணிடாதீங்க... இந்த காட்சியை பார்க்கிற அனைவரும் பாராட்டுவாங்க...
'அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம், அவன் பொறுப்பில்லாத பயல்... 'டப்பிங்' ஒழுங்கா பேச மாட்டான்... அவனை, கரெக்டா, 'டப்பிங்' பேச வையுங்க... ஒழுங்கா பேசலைன்னா, வெளியில விடாதீங்க...' என்று, இயக்குனரிடம் சொன்னார், சிவாஜி.
இதையெல்லாம் நானும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். சிவாஜியே பாராட்டியது, ரொம்ப சந்தோஷம். அவர், மாபெரும் நடிகர் மட்டுமில்லை; அற்புதமான ரசிகர் என்றும், அன்று புரிந்து கொண்டேன்.
— தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி
