PUBLISHED ON : செப் 29, 2019

கணவர், சிவராமன் புகைப்படத்தில் இருந்து சரிந்த பூச்சரத்தை, சரி செய்த, பார்வதி, மகன் சுந்தர் அருகே வந்து, ''ஏதோ பேசணும்ன்னு சொன்னியேப்பா,'' என்று, அவன் முகத்தை பார்த்தாள்.
''அப்பாவோட காரியமெல்லாம் முடிஞ்சாச்சு... ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. ரெண்டு நாள்ல, ஊருக்கு கிளம்பறேன். சுத்தி வளைச்சு பேச விரும்பலம்மா... சொத்துன்னு, அப்பா விட்டுட்டு போனது, இந்த வீடு தான். அவர் காலத்துக்கு, இங்க வாழ்ந்து முடிச்சாச்சு... இனி, இந்த வீட்டை வித்து, பணத்தை, நானும், சங்கரும் பங்கு போட்டுக்கலாம்ன்னு இருக்கோம்,'' என்றான், சுந்தர்.
அதிர்ந்தாள், பார்வதி.
''எனக்கு தெரிஞ்ச, 'பில்டிங் கான்ட்ராக்டர்'கிட்ட ஏற்கனவே பேசியாச்சும்மா,'' என்றான், சங்கர்.
''அப்போ, என்னை கேட்காம, முடிவே பண்ணியாச்சா,'' என்று, கோபத்துடன் சீறினாள், பார்வதி.
''நான், டில்லியில; சங்கர், மதுரையில. திசைக்கு ஒரு ஊர்ல இருக்க, உன்னாலயும் வீட்டை தனியா பராமரிக்க முடியாது,'' என்றான், சுந்தர்.
''சரிப்பா... வீடு நல்ல விலை போகும், உங்களுக்கும், கணிசமா பணம் வரும்... ஆனா, எந்த பலனும் இல்லாம, உங்களுக்கு இப்போ பாரமா இருக்குற, என்னை என்ன பண்ண போறீங்க,'' என்றாள், விரக்தியுடன்.
''மருமகள்களுக்கும், உனக்கும் தான் ஒத்து போகலையேம்மா... நாங்க என்ன செய்ய,'' என்றான் சலிப்புடன், சங்கர்.
''உன்னை தவிக்க விட்டு, நாங்க சந்தோஷமா இருப்போம்ன்னு நினைக்கிறீயா... தேடி அலைஞ்சு, விசாரிச்சு, உனக்காக, இந்த ஊர்லயே நல்ல முதியோர் இல்லமா பார்த்துட்டோம்; எல்லா வசதியும் இருக்கு...
''உடம்பு சரியில்லாத அப்பாவோட கஷ்டப்பட்டது போதும்; இனி, நிம்மதியா இருக்கலாம்... வீட்டை வித்து, 'அக்ரிமென்ட்' போட்டு வர்ற பணத்துல, முதியோர் இல்லத்தோட மொத்த செலவையும் கட்டிடறேன்... உனக்கு எந்த தொல்லையும் இருக்காது,'' என்றான், சுந்தர்.
''ஒரு வார்த்தையாவது, என் சம்மதத்தை கேட்டிருக்கலாமே, சுந்தர். 'இந்த வீட்டை, என் பேருக்கு மாத்தி தர்றேன்'னு, உங்கப்பா சொன்னபோ, நான் கேட்கலையே... போனது போகட்டும், எனக்குன்னு, உங்ககிட்ட இதுவரை எதுவும் கேட்டதில்லை...
''இது, உங்க அப்பா, பார்த்து பார்த்து கட்டின வீடு... அவரோட கடைசி வரைக்கும் இருந்த எனக்கு தான் தெரியும், இந்த வீட்டை எவ்வளவு நேசிச்சாருன்னு... இப்போதைக்கு இடிச்சு, கூறு போட வேண்டாம். எனக்கு தெரிஞ்சு, உங்க ரெண்டு பேருக்கும், வீட்டை வித்து, உடனே பண்ண வேண்டிய அவசர செலவுன்னு எதுவுமில்லை...
''இருக்கற கொஞ்ச காலத்தையும், இங்கேயே வாழ ஆசைப்படறேன்பா... என் காலத்துக்கு அப்புறம், என்ன வேணும்னாலும் செய்யுங்க... காலையிலேர்ந்து பிள்ளைங்களை பார்க்கல... அடிக்கிற வெயில்ல, பாவம் வாடிப் போயிருக்கும்... நான் தோட்டத்துக்கு போறேன்,'' என்றாள், பார்வதி.
''அம்மா... நில்லு. உன் பிள்ளைங்கள விட, இந்த மரம், செடிங்க தான் முக்கியமா போச்சா... குடும்பம்ன்னா, கஷ்டம்ன்னா என்னன்னு தெரியுமா... அப்பாவோட வாத்தியார் சம்பாத்தியத்துல, சிரமப்படாம காலத்தை ஓட்டிட்டே...
''தினம் ஏறிகிட்டே போற விலைவாசியில, செலவை சமாளிக்க வழி சொல்லு பார்க்கலாம்... வர்ற பணத்தை வெச்சு, எங்க எதிர்காலத்துக்கு, ஏதோ கொஞ்சம் வசதி பண்ணிக்கலாம்ன்னு ஆசைப்பட்டது தப்பா,'' என்று கடுகடுத்தான், சுந்தர்.
''உங்க அப்பா இறந்த துக்கம், இன்னும் ஆறலைபா.... எனக்கு, இப்போ அமைதி தேவை... அது, இந்த வீட்டுல தான் இருக்கு,'' என்று, முடிவாக சொல்லி, தோட்டத்திற்கு சென்றாள்.
மறுநாள் -
வீட்டை இடித்து, 'பிளாட்' போடும் வேலையை உடனடியாக ஆரம்பிக்க முடிவு செய்து, கான்ட்ராக்டர், கண்ணாயிரத்திடம் பேசினர், சுந்தரும், சங்கரும்.
''இது, 'அக்ரிமென்ட்!' படிச்சு பார்த்துக்குங்க... இப்ப, முன்பணம் கொடுத்துடறேன்... இந்த மெயின் ஏரியாவில், 'பிளாட்ஸ்' போட்டா, கட்டி முடிக்கிறதுக்குள்ள, எல்லாம் வித்துப் போயிடும்... சீக்கிரம் மிச்ச பணத்தை கொடுத்துடறேன்,'' என்றார், கண்ணாயிரம்.
'அக்ரிமென்ட்'டில் எழுதியிருந்த தொகையை பார்த்து, புல்லரித்த இருவரும், உடனே கையெழுத்திட்டனர். கணிசமான பணம், 'அட்வான்ஸ்' ஆக வந்தவுடன், சந்தோஷமாக ஊருக்கு கிளம்பினான், சுந்தர்.
அடுத்த நாள், பார்வதியை கிளப்பும் முடிவோடு வீட்டுக்கு வந்தான், சங்கர்.
''அம்மா... முதியோர் இல்லத்துக்கு, பணம் கட்டியாச்சு... இன்னிக்கே, நீ அங்க போய் தங்கலாம்,'' என்றவனின் குரலில் அவசரம் தெரிந்தது.
''அப்போ... வீட்டை வித்துட்டீங்களாப்பா,'' என்று, குரல் நடுங்க கேட்டாள், பார்வதி.
''ஆமாம்மா... நாம, இதை பத்தி நிறையவே பேசியாச்சு... பூமி பூஜை போட, நாள் பார்த்தாச்சும்மா... உடனே, வீட்டை இடிக்கிற வேலையை ஆரம்பிச்சிடுவாங்க... நாம காலி பண்ணி கொடுக்கணும்... இல்லேன்னா பிரச்னையாயிரும்,'' என்று, குரலில் கடுமையேற்றினான்.
கணவர், சிவராமனின் புகைப்படம் முன் நின்று, 'நாங்கள் ஆசையாய் கட்டி, மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடு... ஊருக்கெல்லாம், 'வாத்தியார் வீடு' என்ற பெருமித அடையாளத்தோடு, ஏழைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, ஞானம் வளர்த்த வீடு...
'நம் சந்தோஷ, துக்கங்களின் சாட்சி... இது, கற்கள், மண்ணால் எழுப்பிய கட்டடம் இல்லை; எங்கள் உணர்வில் கலந்த உறவு என்பதை எப்படி புரிய வைப்பேன், மகனே...' என்று, மனதுக்குள் புலம்பி தவித்தாள், பார்வதி.
''இப்படி வாயடைச்சு நின்னா என்ன அர்த்தம். இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பணும்... தயாரா இரும்மா,'' என்று, பார்வதியின் சிந்தனையை கலைத்தான், சங்கர்.
அழுது புரண்டாலும், மகன்களின் முடிவை இனி மாற்ற முடியாது என்பது புரிந்தது. தள்ளாடி வீட்டை சுற்றி வந்தவள், களைப்போடு கூடத்தில் சுருண்டு விழுந்தாள். தன் கையறு நிலையை நினைத்து, அழுகை பொங்கியது, பார்வதிக்கு.
கான்ட்ராக்டர், கண்ணாயிரத்திடம், ஒருவாரம் அவகாசம் கேட்டான், சங்கர்.
''இதென்னங்க நியாயம்... வீட்டை விற்க, முன்பணம் வாங்கிகிட்டு, இப்ப காலி பண்ண இழுத்தடிச்சா எப்படி... கட்டடத்தை இடிக்க, மரங்களை வெட்டன்னு எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு... பொறுமையை சோதிக்காதீங்க,'' என்று எரிச்சலுடன் கூறினார், கண்ணாயிரம்.
பிறகு, ''ஒரு வாரம் தான் கொடுப்பேன். அதற்குள் காலி செய்து விட வேண்டும்,'' என்றார்.
ஒரு வாரத்திற்கு பின், பார்வதியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வந்த சங்கருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
சுருண்டு படுத்திருந்த, பார்வதியின் அருகே, படபடத்தது, அந்த காகிதம். படித்ததும் அதிர்ந்து, சுந்தரை மொபைல் போனில் தொடர்பு கொண்டான்.
''மெயின் ரோடை விரிவுபடுத்த, வீட்டு முன்னிருந்த காலி நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த, அரசிடமிருந்து நோட்டீஸ் வந்திருக்கு... இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கலையே... நம்ம, 'பிளான்' எல்லாம் பாழா போயிடும் போலிருக்கே... 'அக்ரிமென்ட்' போட்டு, முன்பணம் வாங்கியாச்சு... விஷயம் கேள்விப்பட்டு, கண்ணாயிரம் விலகிட்டான்னா, இனி, இந்த வீட்டை எவன் வாங்குவான்,'' என, விரக்தியுடன் புலம்பினான், சங்கர்.
''இப்போதைக்கு, கோர்ட்ல வழக்கு போட்டு, 'ஸ்டே' வாங்க பார்ப்போம்... கண்ணாயிரத்திடம் உடனே பேசறேன்,'' என்றான், சுந்தர்.
அடுத்த அரை மணி நேரத்தில், சங்கரின் முன் நின்றார், கண்ணாயிரம்.
''சிட்டி மையத்தில், மெயின் ரோடில் இருக்கு... 'பிளாட்ஸ்' போட்டு வித்தா, லாபம் வருமேன்ற கணக்குல இறங்கினேன்... இது, சரிப்பட்டு வராதுங்க... ரோட்டை அகலப்படுத்தினா, என், 'பிளான்'படி வேலை நடக்காது... 'பிளாட்ஸ்' போட்டாலும் நஷ்டமாகும்...
''மேலும், கோர்ட், கேஸ்ன்னு போனா, தீரா வழக்கு தான். ஆரம்பமே பிரச்னை... இந்த இடம் எனக்கு வேண்டாம், 'அக்ரிமென்ட்'டை ரத்து பண்ணிடறேன்... முன்பணத்தை திரும்ப கொடுத்துடுங்க,'' என்றார், கண்ணாயிரம்.
அதிர்ச்சியில் சிலையான, சங்கர், ''சார்... நீங்க கொடுத்த பணம் செலவாகி போச்சு... இப்படி ஒரு இக்கட்டை நாங்க எதிர்பார்க்கலை... கொஞ்சம், 'டயம்' கொடுங்க,'' என்று மன்றாடினான்.
''இதெல்லாம் உங்க பிரச்னை... ரெண்டு நாள்ல பணம் வரணும்... எக்குதப்பான ஆளு, நான்... என்னோட மல்லுக்கு நிக்காதீங்க,'' என்று, கடுமை காட்டினார், கண்ணாயிரம்.
மொபைலில் சுந்தரிடம் தொடர்பு கொண்டு, ''இந்த ஏரியாவில், இவன் பெரிய புள்ளி... அராஜகத்துக்கு பெயர் பெற்றவன்... எந்த எல்லைக்கும் போவான். எதிர்த்தோம்ன்னா, வாழ்க்கை நாசம் தான்... ரெண்டு நாள்ல அவ்வளவு பணத்தை எப்படி புரட்ட முடியும்... கிடைச்ச பணத்தை, 'பிசினஸ்'ல முடக்கிட்டேன்... ஒரு பைசா பேறாது,'' என்றான், சங்கர்.
''எனக்கு கிடைச்ச பங்குல, அவசரப்பட்டு வீட்டு லோனை அடைச்சிட்டேன். அவன் மிரட்டலை நினைச்சா, கொலை நடுக்கமா இருக்கு,'' என, பயத்தில் புலம்பினான், சுந்தர்.
தள்ளாடியபடி எழுந்த, பார்வதி, ஈனமான குரலில், சங்கரை அழைத்து, ''பணத்துக்கு நான் வழி சொல்றேன்... கேப்பியா,'' என்றாள்.
புரியாமல், அம்மாவை பார்த்தான்.
''மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் இருக்கான். உங்க அப்பாவோட, 'ஸ்டூடன்ட்' அருண். சிக்கலை தீர்க்க அவன் உதவுவான்,'' என்றாள், பார்வதி.
நம்பிக்கையில்லாமல், அருணை சந்தித்தான், சங்கர்.
''இன்னிக்கு, படிச்சு நல்ல நிலைமையில இருக்கேன்னா... அதுக்கு காரணம், சிவராமன் சார், எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் தான்... சொல்லுங்க, உங்களுக்கு, நான் என்ன செய்யணும்,'' என்று, ஆர்வத்துடன் கேட்டான், அருண்.
பிரச்னையை சுருக்கமாக சொன்னான், சங்கர்.
''இவ்வளவு தானே... இப்பவே, உங்களுக்கு பணம் தர்றேன்... உண்மையை சொல்லணும்ன்னா, 'டியூஷன் சென்டர்' வைக்க, உங்க வீட்டை தான், சிவராமன் சார்கிட்ட, 'லீசு'க்கு கேட்டிருந்தேன்... வாத்தியார் வீடு, நம்ம ஏரியாவில பிரபலமாச்சே...
''மெயின் ரோடில் இப்படி ஒரு இடம், எனக்கும் தேவையாய் இருக்குது... சாரும், அம்மாவும் எப்பவும் போல, அங்கேயே தங்கிக்கலாம்ன்னு சொல்லியிருந்தேன். ஆனா, சிவராமன் சார் தான், வீடு அவர் பேர்ல இல்லைன்னு தயங்கினார். நானும் வேற இடம் பார்த்து முடிக்க போகும் நேரத்தில், நீங்க வந்திருக்கீங்க...
''உங்களுக்கு சம்மதம்ன்னா, எனக்கு, 'லீசு'க்கு கொடுங்க... இல்லேன்னாலும் பரவாயில்ல, சிவராமன் சாருக்கு, நான் செஞ்ச உதவியா இருக்கட்டும்... உங்களுக்கு முடியும் போது, திருப்பி கொடுங்க... வட்டியெல்லாம் வேண்டாம்,'' என்று, புன்னகைத்தான், அருண்.
சுந்தரிடம் தகவல் சொன்னான், சங்கர்.
''வாத்தியார் வீடு, என்னிக்கும் வாத்தியார் வீடாவே இருக்கட்டும், அருண்... நீங்க, தாராளமா, 'டியூஷன் சென்டர்' ஆரம்பிச்சுக்குங்க... உங்களுக்கு வேண்டிய வசதியை செஞ்சு தர்றோம்... 'லீசு'க்கு, முன்பணமா, உங்க வீட்டுலேர்ந்து, ஒரு ரோஜா செடி கொடுங்க,'' என்று சிரித்தான், சங்கர்.
செடியை சுமந்தபடி, அப்பா வீட்டை நோக்கி நிம்மதியுடன் நடந்தான்.
பா. வெங்கடேஷ்
