தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (17)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (17)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (17)


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்., படத்தின் படப்பிடிப்பு என்றால், அனைத்தும் கச்சிதமாக நடைபெறும். சக நடிகர்களின் நலனில் அக்கறை காட்டுவார். ஒரு காட்சி படமாக்கியதும், அடுத்த காட்சி எடுப்பதற்குள் ஓய்வு கொடுப்பார்.

'அடுத்து, 15 நிமிஷத்துக்கு பின், காட்சியை எடுத்துக்கலாம். 'மேக் - அப்' அறைக்கு போய், 'டச் - அப்' பண்ணிக்கிட்டு, ஏதாவது போன் பண்ணனும்னா, அதையும் முடிச்சுட்டு வந்துடு... படப்பிடிப்பு ஆரம்பிச்சதும், வேற எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது...' என்பார்.

இதை மேலோட்டமாக பார்க்கிறபோது, எம்.ஜி.ஆருக்கு படப்பிடிப்பில் வேறு எந்த தடங்கலும், தாமதமும் இருக்கக் கூடாது என்பது தான் வெளிப்படும். ஆனால், அதற்கு ஓர் உள்ளர்த்தம் உண்டு. 'மேக் - அப்' அறைக்கு போய், 'டச் - அப்' மற்றும் போன் என்பதெல்லாம், சும்மா ஒரு சம்பிரதாயம்.

சிகரெட் புகைத்தால் பிடிக்காது, எம்.ஜி.ஆருக்கு. சில சமயம் கோபப்படுவார். நிறைய சிகரெட் பிடிப்பவன், நான். எனவே, என்னால் அனாவசியமாக எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக இந்த, 'டெக்னிக்'கை கையாளுவது அவரது, 'ஸ்டைல்!'

'ஜெமினி' அதிபர், வாசன், ஒரு மாமனிதர். அகில இந்திய அளவில், சினிமா துறையில் கொடி கட்டி பறந்த, 'ஜெமினி' எடுத்த சில படங்களில், நடித்திருப்பதை நினைக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது.

ஒருநாள், என் வீட்டு தொலைபேசி அழைத்தது. மறு முனையில் பேசியவர், 'நான், ஜெமினி, எஸ்.எஸ்.வாசன் பேசறேன்; ஆர்டிஸ்ட் நாகேஷ் இருக்காரா...' என்றார்.

'எவ்வளவு பெரிய மனுஷர்... அவரே பேசுகிறாரே...' என்று, எனக்குள் ஒருவித படபடப்பு.

'நான், உங்களை சந்திக்கணுமே...' என்றார்.

'நானே வந்து, உங்களை பார்க்கிறேன் சார்... எப்போ வரட்டும்...' என்றேன்.

நேரம் சொன்னார். குறித்த நேரத்தில், 'ஜெமினி' நிறுவனத்துக்கு போனேன். அவரது அறைக்குள் நுழைந்தபோது, எழுந்து வரவேற்று, 'நான், மோட்டார் சுந்தரம் பிள்ளைன்னு, ஒரு படம் எடுக்கிறேன். அதில் நடிக்க முடியுமா...' என்றார்.

'ஓ... தாராளமாக...' என்றேன்.

'உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தரணும்...' என்றார்.

'நாம் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை சொல்லி, இவர் பேரம் பேசி, குறைத்து விட்டால்...' என்ற எண்ணம் எழுந்தது.

அப்போது வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விட, அதிகமான தொகையை சொன்னேன்.

பேரம் பேசவே இல்லை. நான் கேட்ட சம்பளத்தை அப்படியே தர சம்மதித்தார்.

'அட... இவ்வளவு நல்ல மனிதரை, தப்பா நினைத்து விட்டோமே...' என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. உடனே, நான் வாங்கும் சம்பளத்தை சொல்லி, 'அதை மட்டும் கொடுத்தால் போதும்...' என்றேன்.

'பரவாயில்லை... நீங்கள் கேட்டீர், நானும் கொடுத்து விட்டேன். அதற்கு பின் குறைப்பது சரியில்லை. அதுவுமில்லாம, நான் யாருக்கு தரப் போகிறேன், நாகேஷுக்கு தானே... செகரட்டரியை பாருங்கள், முன்பணம் கொடுப்பார்...' என்றார்.

ஆச்சரியத்தில் வாயடைத்து போனேன்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், துப்பறியும் சாம்பு மாதிரி, ஒரு கதாபாத்திரம். ஒரு காட்சியில் நகைகள் காணாமல் போய் விடும். காணாமல் போன நகைகள், பூசணிக்காய்க்குள் இருப்பதை, இறுதியில் கண்டுபிடிப்பேன்.

இந்த காட்சியை எடுத்த பின், ஒரு நாள், வாசனிடம், 'ஏன் சார், எனக்கு ஒரு சந்தேகம்... பூசணிக்குள்ளே இருக்கிற நகைகளை கண்டுபிடிப்பது எல்லாம் சரி தான். ஆனால், பூசணிக்காய் உள்ளே நகைகள் எப்படி போனது என்பது மட்டும் புரியவில்லையே...' என்றேன்.

சிரித்தபடியே, 'காமெடிக்கு, 'லாஜிக்' பார்க்கக் கூடாது...' என்றார், வாசன்.

'ஜெமினி' நிறுவனம் பற்றி சொல்லும்போது, மறக்க முடியாத இன்னொரு நபர், கொத்தமங்கலம் சுப்பு. அற்புதமான எழுத்தாளர் மட்டுமில்லை; அருமையான நடிகரும் கூட. இதற்கெல்லாம் மேலே, அவர் நல்ல ரசிகர்.

பொதுவாக, ஒரு படைப்பாளி சிருஷ்டிக்கிற பாத்திரத்தை, நடிகர் ஏற்று நடிக்கிறபோது, எழுத்தின் வடிவத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து விட்ட திருப்தி, அவருக்கு ஏற்படாது. ஆனால், அப்படி ஒரு திருப்தி, கொத்தமங்கலம் சுப்புவுக்கு கிடைத்தது.

அந்த திருப்தியை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. அது, தில்லானா மோகனாம்பாள் படத்தில் எனக்கு கிடைத்த, 'சவடால் வைத்தி' கதாபாத்திரம்.

இன்றைக்கும் கூட, தில்லானா மோகனாம்பாள் படத்தின், 'சவடால் வைத்தி' கதாபாத்திரத்தை, மக்கள், வயது வித்தியாசமில்லாமல் ரசிப்பர். அதற்கு அடிப்படையான காரணம், கொத்தமங்கலம் சுப்புவின் அற்புதமான பாத்திர படைப்பு தான். அந்த சிருஷ்டிகர்த்தாவே, என்னை பாராட்டியது, பெரிய விருது கிடைத்தது போலிருந்தது.

ஒருநாள், இயக்குனர், ஏ.பி.நாகராஜன், திடீரென்று கூப்பிட்டு, 'உங்களுக்கு, என் படத்தில், ஒன்றரை நாள் வேலை இருக்கு, வர்றீங்களா...' என்று கேட்டார்.

ஏ.பி.என்., மீது, எப்போதுமே அபார மதிப்பும், மரியாதையும் உண்டு. எனவே, மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தேன். அந்த படம் தான், திருவிளையாடல்.

காலையில், 'வாசு ஸ்டுடியோ'வில், படப்பிடிப்புக்கு போய் விட்டேன். தருமி வேடத்துக்கு ஏற்ப, நான் தயாரானேன். சிவாஜிக்கு இன்னும், 'மேக் - அப்' போட்டு முடியவில்லை என்றனர். அப்போது, நான், 'பிசி'யாக இருந்த காலகட்டம்.

ஒரே கம்பெனிக்கு, எட்டு மணி நேரம், 'கால்ஷீட்' தர மாட்டேன். இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று பிரித்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்கு கொடுப்பேன்.

ஏ.பி.என்., சொன்னாரே என்று, 'மேக் - அப்' போட்டு, காத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'நான் காட்சியை படிக்கிறேன், கேளுங்க...' என்று, தாம் எழுதி வைத்திருந்த வாசனத்திலிருந்து இரண்டு பக்கம் படித்து காட்டினார், ஏ.பி.என்.,

நான் கவனமாக கேட்டுக் கொண்டேன்.

'உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். நான் எழுதி இருக்கிறதை குறைக்க வேணாம்... இதுக்கு மேல உன் இஷ்டப்படி, காட்சியை எப்படி வேணுமோ அப்படி, 'இம்ப்ரூவ்' பண்ணிக்கோ. அதுக்கு உனக்கு, அனுமதி உண்டு...' என்றார்.

'காட்சியை எப்படி, 'இம்ப்ரூவ்' பண்ணலாம்...' என்ற சிந்தனையிலிருந்த நான், 'சிவாஜி வர, நேரமாகுமா...' என்று உதவி இயக்குனரிடம் கேட்டேன்.

'ஆமாம்...' என்றார்.

இயக்குனர், ஏ.பி.நாகராஜனிடம், 'சிவாஜி வர, நேரம் ஆகும் போல இருக்கே. எனக்கு, இங்க முடிச்சுட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போகணும்... சிவாஜி வருகிற வரை, நேரத்தை வீணாக்காம, என்னை வெச்சு, 'சோலோ'வா கொஞ்சம் எடுக்கலாமே...' என்றேன்.

அதற்குள், நான் என்ன செய்ய போகிறேன் என்பதை தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.

தொடரும்

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us