தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகரிகமாக நடந்து கொள்ளலாமே...

தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். வரவேற்பு முடிந்தவுடன், 'போட்டோ ஷூட்'டுக்காக, மணமக்களை மேடைக்கு வரச்சொன்னார், புகைப்படக்காரர். மணமக்களை, கட்டிப் பிடித்தபடியும், உதட்தோடு உதடு வைத்து முத்தம் தர சொல்லியும், 'போஸ்' தரச் சொன்னார்.

மணப்பெண் சரியாக, 'போஸ்' தரவில்லை என்று, 'என்னம்மா, நீ... எத்தனை படத்துல பார்த்திருக்கிற... முத்தம் தரும்போது, முகத்துல அழகா, 'ரியாக் ஷன்' கொண்டு வர வேணாமா...' என்றார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த, உறவுகளும், குழந்தைகளும், கிண்டலடித்து, சிரித்தபடி, வேடிக்கை பார்த்தனர்.

அச்சமயம் அங்கு வந்த, மணப்பெண்ணின் சித்தப்பா, 'ஏம்பா... நீ புகைப்படம் எடுக்கறியா, இல்லை, சினிமா எடுக்கறியா... காலமெல்லாம், குடும்பம், குழந்தைகள் என, தலைமுறை தலைமுறையா பார்த்து ரசிக்க வேண்டிய நினைவுகளை, இப்படியா கேவலமா, 'ஷூட்' பண்ணுவே...

'இந்த புகைப்படங்களை பார்க்கும் அடுத்த தலைமுறையினர், இவர்களை பற்றி என்ன நினைப்பர்... ஒழுங்கா எடுக்கறதா இருந்தா எடு... இல்லேன்னா, நீ கிளம்பு; வேற ஆளை பார்த்துக்கறேன்...' என்று, சத்தம் போட்டார்.

'அவர் தான் சொல்றார்ன்னா, 'அந்த' மாதிரி புகைப்படம் எல்லாம் வேண்டாம்ன்னு, நீங்க சொல்லக் கூடாதா...' என்று, மணமக்களையும் கடிந்து கொண்டார்.

இந்நிகழ்வு, பெண் வீட்டாரின் மேல், மாப்பிள்ளை வீட்டினருக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியது.

என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும், பெண்களை கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் நம் மண்ணின் ஆண் மகன்கள், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவரே என்பதை புரிய வைத்தார், அப்பெரியவர்.

காலங்காலமாக, மலரும் நினைவுகளாக நிலைத்து நிற்கும் புகைப்பட ஆல்பங்கள், அனைவரும் பார்த்து மகிழும்படி இருக்க வேண்டாமா... யோசியுங்கள்!

— எஸ். கல்பனா, சென்னை.

உறவுகளை இணைத்த அழைப்பிதழ்!

உறவினர் ஒருவர், புதிதாக கட்டிய வீட்டுக்கு, 'புதுமனை புகுவிழா' அழைப்பிதழை அச்சிட, அச்சகம் சென்றபோது, உடன், நானும் சென்றேன்.

உறவினரின் கூடப் பிறந்த அண்ணன், தம்பிகள் நான்கு பேர்; ஒரு தங்கை. சிறு மனஸ்தாபத்தால், மூன்று ஆண்டுகளாக, தங்கை குடும்பத்தினருடன் யாரும் பேசுவதில்லை.

அழைப்பிதழில், 'தங்கள் நல்வரவை நாடும்' பகுதியில், தங்கை குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு, மற்ற அனைவரது பெயரையும் எழுதி தந்தார்.

உறவினருக்கு பழக்கமான அச்சக உரிமையாளர், 'தங்கச்சி பெயரை, ஏன் விட்டு விட்டீர்கள்...' எனக் கேட்டார்.

விஷயத்தை கூறினார், உறவினர்.

'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லீங்க... ஆண்டவன் கொடுப்பது ஒரே ஒரு பிறவி... மீண்டும் உங்க அம்மா வயிற்றில் நீங்களெல்லாம் ஒண்ணா பொறக்கவா முடியும்... தங்கச்சி மற்றும் மாப்பிள்ளை பேரை சேர்த்து, நீங்களே பத்திரிகையை நேரில் எடுத்து போய் கொடுங்க...' என, அச்சக உரிமையாளர் அறிவுறுத்தினார்.

அப்படியே செய்தார், உறவினர்.

தங்கை மகிழ்ந்து, தன் உறவினர்களிடம், 'என்ன இருந்தாலும், அண்ணன், என்னை விட்டுத் தருவாரா...' என சொல்லி, விழாவில், முக்கிய நபராய் வலம் வந்தார்.

அச்சகத்தை, தொழிலாக மட்டும் பார்க்காமல், பகைமையில் இருந்த, இரண்டு குடும்பங்களையும், தன் சாதுர்ய பேச்சால் இணைத்த, அதன் உரிமையாளரை பாராட்டினேன்.

— சி. ரகுபதி, திருவண்ணாமலை.

நல்வழி காட்டும், ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்!

நவராத்திரி சமயத்தில், வீடு வீடாக போய், கொலு வைத்திருப்பதை, சிறுவர் - சிறுமியர் கண்டுகளித்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சாப்பிடும் காலம், மறைந்து விட்டது. இப்போது, 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' மற்றும் 'டிவி' போன்றவற்றில் மூழ்கி, பொழுதை கழிக்கின்றனர்.

இதற்கு மாறாக, கடந்த ஆண்டு, நாங்கள் வசித்த குடியிருப்பில், இரண்டு சிறுவர்கள், எங்கள் வீட்டு கொலுவிற்கு வந்தனர். ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து, விளக்கம் கேட்டனர்.

அவர்களின் கேள்விகள் அனைத்தும், நம் கலாசாரம், பண்பாடு, இதிகாச புராணம் போன்றவைகளை சார்ந்ததாக இருந்தது.

'கொலுவிற்கு போக வேண்டும் என்று, உங்களுக்கு யார் சொன்னது...' என, அந்த சிறுவர்களிடம் வினவினேன்.

'எங்க கிளாஸ் டீச்சர் தான்... அவுங்க வீட்டு கொலுவுக்கு, வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அழைத்து போய், நவராத்திரி விழா கொண்டாடுவதை பற்றி விளக்கினாங்க... அதோடு, 'குடியிருக்கும் பகுதியில் உள்ள, பக்கத்து வீடுகளுக்கு கொலுவுக்கு போனால், இதுபோன்று, இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்... மனதிற்கும் சந்தோஷமாக இருக்கும்' என்று, 'ஐடியா' கொடுத்துள்ளார், டீச்சர்...' என்று பதிலளித்தான், அச்சிறுவன்.

கலாசாரத்தை வெளிப்படுத்தும் விழாக்களை பற்றி, தன்னிடம் படிக்கும் குழந்தைகள் அறிவதற்காக, நல்வழி காட்டும் இம்மாதிரி, நல்லாசிரியர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

இந்த நவராத்திரியின் போது, அக்கம் பக்கத்து வீடுகளின் குழந்தைகளை, கொலு பார்க்க அழைக்க செல்வீர்கள் தானே!

- எஸ். ராமன், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us