PUBLISHED ON : டிச 11, 2016

நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது...
குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர்.
ஒருநாள், இவர், கண்ணனை துதித்து, கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், அவ்வருத்தத்திலேயே, உறங்கி விட்டார்.
தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், அழகிய விமானத்தில் ஏறி, வைகுண்டம் செல்கிறார், பூந்தானம். வானவர் இருவர், அவரை வரவேற்று, வைகுண்டம் முழுதும் சுற்றிக் காண்பித்து, பகவான் சன்னிதியில் அவரை நிறுத்துகின்றனர்.
பகவானை தரிசித்து, பரமானந்தமடைந்தவர், பூலோகம் திரும்பும் போது, அவ்வானவர்கள், அவரை வணங்கி, 'குருதேவா... உங்கள் கருணையால் தான், நாங்கள், கடவுள் அடியார்கள் எனும், இவ்வுயர் நிலையை அடைந்தோம்; நாங்கள், என்றென்றும் பக்தியுடன், ஹரி நாம ஜபம் செய்து, ஆனந்த வாழ்வு நடத்த, அருள் புரிய வேண்டும்...' என, வேண்டினர்.
அவர்களின் செய்கையால் நடுங்கிப் போனவர், 'திவ்யமான இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள்; நீங்கள் என்னை வணங்குவது தவறு. அத்துடன், ஒன்றுக்கும் உதவாத நான் எப்போது உங்களுக்கு குருநாதராக இருந்தேன்... ஒன்றும் புரியவில்லையே...' என்றார்.
'குருநாதா... உங்களால் தான் எங்களுக்கு இப்படிப்பட்ட உயர்நிலை கிடைத்தது. உங்கள் வீட்டு வடக்கு முற்றத்தில் இருந்த, இரண்டு பலா மரங்கள் தாம் நாங்கள்; அப்பலா மரங்கள் இரண்டும், ஆறு மாதங்களுக்கு முன், கீழே விழுந்து விட்டன என்பதும் உங்களுக்கு தெரியுமே...
'மரமாக இருந்த நாங்கள், நீங்கள் வாசித்த பாகவதத்தையும், நாம ஜபத்தையும் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இதோ, மிகவும் உன்னதமான நிலையை அடைந்துள்ளோம்...' என்று கூறி, மறுபடியும் பூந்தானத்தை வணங்கினர்.
அதே வினாடியில், கனவு கலைய கண் விழித்தார், பூந்தானம். ஆறு மாதங்களுக்கு முன், தன் வீட்டிலிருந்த இரு மரங்கள் விழுந்தது, அவருக்கு நினைவு வந்தது.
தெய்வ நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனை உணர்ந்த பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, இறை நாமத்தை பாடி பரப்பினார்.
நம்மால், நாம சங்கீர்த்தனம் செய்ய முடியா விட்டாலும், நாம சங்கீர்த்தனத்தை கேட்போம். நம் தீவினைகளும் நீங்கும்!
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
அளவிலாப் பாவகத்தால் அமுக்கு
உண்டு இங்கு அறிவின்றி
விளைவு ஒன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்து
என்னை ஆண்டானைக்
களவிலா வானவரும்
தொழு தில்லை கண்டேனே!
விளக்கம்: அளவில்லாத, பல வகையான எண்ணங்களால் அமுக்கப்பட்டு, இவ்வுலகில் அறிவேதும் இல்லாமல், பின் விளைவுகள் எதைப் பற்றியும் அறியாமல், வெறுமையாளனாக கிடந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, அளவில்லா ஆனந்தத்தை அளித்து, என்னை ஆண்டருளிய சிவபெருமானை, களவில்லாத தேவரும் வணங்கும் தில்லையம்பலத்திலே யானும் கண்டேனே!
