தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டிக்கு —

நான், எம்.ஏ., இரண்டாமாண்டு மாணவி. எனக்கு, ஒரு அக்கா மற்றும் தம்பி உள்ளனர்; அம்மா, தொலை தொடர்பு துறையிலும், அப்பா, ரயில்வே துறையிலும் பணியாற்றுகின்றனர்; வசதிக்கு பஞ்சமில்லை. அக்காவுக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; மாமா, சொந்தமாக, 'டிராவல்ஸ்' நடத்துகிறார்.

என் அப்பாவின் குணத்தையும், அம்மாவின் அழகையும் முழுமையாக கொண்டவன் தம்பி; சட்டக் கல்லூரியில் படிக்கிறான்.

என் மீது, உயிரையே வைத்திருக்கிறான். நானும், அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். ஆனால், என் தம்பியின் பாசம், என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது.

ஏனெனில், கல்லூரி முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன், என் கன்னத்தில் முத்தமிடுவது, இடுப்பில் கிள்ளுவது மற்றும் மடியில் படுத்துக் கொள்வது, வம்பு சண்டைகள் செய்வது, அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

இவை எல்லாவற்றையும், சகஜமாக எடுத்துக் கொண்டாலும், நான் அணிந்திருக்கும் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து, முகம் துடைப்பது, என் அறைக்கு வருவதோடு, என் பக்கத்தில் படுப்பது மற்றும் காலை என் மீது போட்டுக் கொள்வது போன்றவை, என்னை எரிச்சலூட்டியது.

இவை அனைத்திற்கும் காரணம், என் அக்கா தான். ஏனெனில், ஆரம்பத்தில் இந்த சேட்டைகளை அவன், அவளிடம் செய்த போது, கண்டிக்காமல் விட்டது அவள் தான்.

ஒருமுறை, என் மாமா, இதை தட்டி கேட்ட போது, 'என் தம்பி விஷயத்தில் தலையிட, உங்களுக்கு உரிமையில்ல...' என்று அக்கா கூற, இதனால், இருவருக்கும் பெரிய சண்டையே நடந்தது.

சமீபத்தில் தான், அப்பிரச்னை சமாதானமாக முடிந்தது. இப்படி, பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிற என் தம்பியை, பலமுறை திட்டியதுடன், அடித்தும் இருக்கிறேன். ஆனால், அவனோ, 'என் அக்கா அடித்தாலும், திட்டினாலும் எனக்கு வலிக்காது...' என்று கூறி விடுவான்.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, என் அம்மாவிடம், என் தம்பியின் அத்துமீறல்களை கூறினேன். இதனால், கோபம் அடைந்த அம்மா, 'அவள், உனக்கு அக்கா என்று நினைத்தாயா இல்லை வேறு ஏதாவது நினைத்தாயா...' என்று கடும் வார்த்தைகளில் திட்டி விட்டார். விளைவு, இப்போது, எதையோ இழந்தது போல் காணப்படுகிறான். என்னை பார்த்தாலே அழுகிறான்.

அவனுடைய சில்மிஷங்கள் அனைத்தும், காணாமல் போய் விட்டன. இதை நினைத்து, என் மனம் சந்தோஷப்பட்டாலும் அவன் மனதை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று கவலையாகவும் இருக்கிறது.

நீங்கள் தான் என் தம்பிக்கும் சேர்த்து நல்ல பதில் அளிக்க வேண்டும். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் மருமகள்.


அன்பு மருமகளுக்கு —

அனிச்சையான இன கவர்ச்சியால் தான், உன் தம்பி, உன்னிடம் ஏடாகூடமாய் நடந்து கொள்கிறான். அதே காரணத்தால் தான், உன் அக்காவும், தம்பி செய்யும் சில்மிஷங்களுக்கு ஒத்துப் போகிறாள்.

உலக சமுதாயம், மனித உறவுகளுக்கு, பல லட்சுமண கோடுகளை போட்டுள்ளது. அம்மாவிடம், மகனும், தந்தையிடம், மகளும், சகோதரிகளிடம், சகோதரர்களும் எப்படி உறவு பாராட்ட வேண்டும் என்பதற்கு, பல வரைமுறைகளை வைத்துள்ளன. கிராமப்புறங்களில், சகோதரன், தன் சகோதரியை கேலி பேசுவது, கண்டிக்கப்படும் விஷயமாகும். நிறைய வீடுகளில், வயதுக்கு வந்த சகோதர - சகோதரிகள், ஒரே படுக்கையில் படுக்க, அனுமதி இல்லை.

ஆண் - பெண் உடலில், ஹார்மோன்கள் கலகம் செய்யும் போது, இருபாலருமே, உறவு முறை, ஏழை - பணக்காரன், ஜாதி, மத, வயது வித்தியாசம், கால நேரம் பார்ப்பதில்லை. உன் தம்பியை, உன் அக்காள் கணவரும், தாயும் கண்டித்தது தவறில்லை.

தக்க நேரத்தில், நீ செய்த அதிர்ச்சி வைத்தியம், பாராட்டத்தக்கது. பல அக்காக்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறாய். உன் தம்பிக்கு, 18 வயது அல்லது 19 வயது இருக்கக் கூடும். உன் அதிரடி, அவனுக்கு உடனடி திடுக்கிடலாய் இருக்கும்; ஆனால், சில ஆண்டுகளில், உன் தரப்பு நியாயத்தை புரிந்து, தன் வாலிப குறும்புகளின் எல்லை மீறலை உணர்ந்து கொள்வான். அப்போது, உன்னிடம் மட்டுமல்ல, உன் அக்காவிடமும் மன்னிப்பு கேட்பான்.

குறும்பு செய்யும் மகனை அடித்த பின், ஒரு தாய் வருத்தப்படுவாளே, அப்படி இருக்கிறது உன் மன வருத்தம்.

வாய்ப்பு கிடைக்கும் போது, உன் தம்பியை அழைத்து, 'இன்னென்ன காரணங்களுக்காக தான், உன்னை கண்டிக்க நேர்ந்தது. நீ, என் உயிருக்கு உயிரான தம்பி; இச்சம்பவத்தால், நம் அக்கா - தம்பி உறவில், விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வோம். நடந்ததை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு. குற்ற உணர்ச்சி கொள்ளாதே. படித்து, வேலைக்கு போய் திருமணம் செய்து கொள்ளும் வரை, அற்ப சொற்ப விஷயங்களில் தடுமாறாதே...' என அறிவுரை கூறு.

குரூப் ஒன் தேர்வு எழுதி, நல்ல வேலைக்கு போ. உனக்கு, சிறப்பான திருமண வாழ்வு அமைய, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us