PUBLISHED ON : ஜன 08, 2017

திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும்.
தோற்றத்தை வைத்து சர்க்கரைப் பொங்கலின் அக்கா தான், அக்கார அடிசில் என்றாலும், இது, சுவையில் மாறுபட்டது.
ஒரு பங்கு பச்சரிசிக்கு, இரண்டு பங்கு பாசிப்பருப்பு சேர்த்து வேக விட வேண்டும். பாதி வெந்த நிலையில், அதில் குங்குமப்பூ சேர்த்து, கொதிக்க வைத்த பாலை ஊற்ற வேண்டும். முக்கால் பதத்திற்கு வெந்ததும், அதில், ஆறு பங்கு சர்க்கரை, கோதுமை மாவு, உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், ஜாதிக்காய் சேர்த்து, வேக வைத்து எடுக்க வேண்டும். பின், மிதமான சூட்டில், நெய் சேர்த்து கிளறினால், அக்கார அடிசில் தயார்.
அக்கார அடிசில் தயாரிக்கும், திருச்சியை சேர்ந்த சாந்தா பக்தவத்சலம், 'காலை, 4:00 மணிக்கு அக்கார அடிசில் தயாரிக்க துவங்கி விடுவோம். மூன்று மணி நேரம் கவனமாக சமைத்தால் மட்டுமே, சுவை பட தயாரிக்க முடியும்; கொஞ்சம் விட்டாலும், சுவை மாறிவிடும்...' என்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பிடித்த நைவேத்யமான இது, தற்போது, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பிரபலமாகி விட்டது.
வெளியூரில் இருந்து வரும் உறவினர்களுக்கு, சிறப்பு பதார்த்தமாக கொடுத்து உபசரிக்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருச்சியில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் அக்கார அடிசில் கடைகளில் கிடைக்கும்.
திருச்சி சென்றால், அக்கார அடிசிலை தவற விடாதீர்!
- மு.ஆதவன்
