PUBLISHED ON : ஏப் 15, 2012

நாங்கள் மூன்று உதவி ஆசிரியர்களும், கடற்படைத் தளபதி, நிலப்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி போல நின்று, ஆசிரியரை லஞ்ச்சுக்கு வழியனுப்புவது வழக்கம்.
அதை ஒரு மரியாதையாக நாங்கள் கருதியதோடு, ஆசிரியர் புறப்பட்டாயிற்று என்பதை, இரு கண்களால் பார்த்து உறுதி செய்து கொள்வதும் உள்நோக்கம்.
பிற்பகல், 'டான்' என்று, நாலு மணிக்கு திரும்பி விடுவார் ஆசிரியர் .
அந்த இடைப்பட்ட நேரத்தில், (பிற்பகல் ஒன்றிலிருந்து, நாலு வரை) எங்கள் எடிட்டோரியல் அறையில், நாங்கள் சாப்பிடுவது, தடுப்புக்கு அப்பால், ரீல் பேப்பரை போட்டு, ஒரு குட்டித் தூக்கம் போடுவது, 'டிவி'யில் கிரிக்கெட் பார்ப்பது, கத்துவது, கூவுவது, சிரிப்பது, அரசியல் விவாதம், இதெல்லாம் சுவையாக நடக்கும்.
சில சமயம், ஓவராக நாங்கள் சிரிக்கும் சப்தம், வெளியீட்டாளரின் அறைப் பக்கம் சென்று, அவர் காதில் விழும் நேரங்கள் உண்டு. ('இந்த ஜோக்கெல்லாம் பத்திரிகையில் வரணும்...' என்பார் வெளியீட்டாளர்)
வெளியீட்டாளர், மதியம் வீடு செல்ல மாட்டார். அவரது அறையிலேயே லஞ்ச் முடித்துவிட்டு, தன் பணிகளைத் தொடர்வார்.
சமயங்களில் அவரும், ஈ.சி சேரில் கால் மணி, அரை மணி நேரம் ஓய்வெடுப்பது உண்டு. ஆனால், பெரும்பாலும், யாராவது அவரை சந்திக்க வந்து கொண்டே இருப்பர். ஆதலால், அவருக்கு மதிய ஓய்வு அபூர்வம்.
எங்கள் இலாகாவின் சிரிப்பொலி ஓவராக, அவர் காதில் விழும் சமயம் அவரே எழுந்து, எங்கள் அறையின் ஸ்விங்டோர் அருகே வந்து, கதவுக்கு அப்பால் இருந்தவாறு, 'என்ன சமாசாரம்... விசேஷம் ஒன்றுமில்லையே?' என்பார்.
'என்ன கலாட்டா... என்ன தமாஷ்?' என்றெல்லாம் கேட்க மாட்டார். 'விசேஷம் ஒன்றுமில்லையே...' என்று கேட்டாலே, நாங்கள் புரிந்து கொண்டு விடுவோம்.
'சப்தம் ரொம்ப போட்டு விட்டோம் போலிருக்கிறது...' என்று அடக்கி வாசிப்போம்.
தடால் தடால் என்று, வெளியீட்டாளரின் தலை, ஸ்விங்டோரில் தோன்றி, எங்களை திகைப்படைய செய்வதிலிருந்து தப்பிக்க, ஒரு வழி செய்தோம். (பத்திரிகைக்காக, எத்தனையோ ஐடியா செய்கிறவர்களுக்கு, இதற்கு ஒரு ஐடியா செய்வது கஷ்டமா!)
மூன்று பேரில் யாராவது ஒருத்தர், (முறைவாசல் மாதிரி) முறை காவல் போட்டு, உட்கார்ந்திருக்க வேண்டியது; போன் வந்தாலோ, வெளியீட்டாளர் தலை தெரிந்தாலோ பதில் சொல்ல.
'லஞ்ச்சின்போது பார்த்தேன், ஒருத்தர் கூட இல்லையே... யாரோ ஒரு எழுத்தாளர், என் ரூமுக்கு வந்து விட்டார். நான் மாட்டிக்கிறாப்பலே ஆயிடுச்சு. லஞ்ச் டைமில், யாராவது ஒருத்தர் டிபார்ட்மென்ட்டில் இருங்க... ப்ளீஸ்!' என்பது, வெளியீட்டாளர் விடுத்த வேண்டுகோள். (கட்டளை.) அந்த ஒருத்தர் விழிப்புடன் இருப்பார்; மற்ற இருவர், இலாகாவில் ஸ்கிரீனுக்கு அந்தப்புறமாக, ஈ.சி., சேரிலோ, தரையில் ரீல் பேப்பரை போட்டோ, ஒரு சொகுசு தூக்கம், கால் மணி அல்லது அரை மணி நேரம் ஓய்வெடுப்பர்.
மூன்று பேருமே - மூன்று பேர் என்ன, உலக மக்கள் தொகையில், 99 சதவீதம், மத்தியானம் அசந்து தூங்கினால், குறட்டை விடாமலிருப் பதில்லை. (புள்ளி விவரத்துடன் நிரூபிக்க அவகாசம் இல்லை.)
மூவருமே அவரவர் புத்தி, சக்திக்கேற்ப, பெரிசும், சிறிசுமாக குறட்டை விடுவதுண்டு. ராக் குறட்டையை விட, மதிய குறட்டைகள், ஸ்வரங்களிலும், சஞ்சாரங்களிலும், ஆலாபனைகளிலும் வேறுபடுவது உண்டு.
கச்சேரிகளில், கடைசி அரை மணி, கால் மணிகளில் பாடகர்கள், சில்லரை உருப்படிகள் பாடுவதுதான் மரபு.
அதே சம்பிரதாயம் தான், மதியக் குறட்டைகளுக்கும். விஸ்தரிப்புகளுக்கு வாய்ப்பு கிடையாது. யாராவது ஒருத்தர் எல்லை மீறினால், காவல் காக்கிறவர், 'சார்... கொஞ்சம் நிதானம்... நிதானம்...' என்று குரல் கொடுக்க, குறட்டைவாலா, சப்தத்தை குறைத்துக் கொள்வார்.
ஆழ்ந்த உறக்கத்திற்கும், ஜாக்கிரதைக்கும் இடைப்பட்ட ஸ்வப்பனாவஸ்தையில் தான், நம் மத்தியான குறட்டையாளர்கள் இருப்பதால், மற்றவர் சொல்லும் வசனமும் கேட்கும், தூங்கவும் தூங்குவர். (கவுண்டமணி பாஷையில் சொல்வதானால், 'இதெல்லாம் சகஜமப்பா...')
ஒரு தினம், ஆசிரியர் அபூர்வமாக மூன்று மணிக்கே வந்து விட்டார்.
எதிர்பாராத விதமாக, 'ஸ்விங்டோர்' சப்தித்தது; வெளியீட்டாளரோ என்று பார்த்தால், எடிட்டர்!
'வரலாமா?' என்றார்.
நான் பரபரப்புடன் எழுந்தேன்.
ஆசிரியர், என் மேஜைக்கு எதிரில், நாற்காலியில் அமர்ந்தாயிற்று.
'நண்பர்களை காணோம்?' என்றார்.
நான், 'ஹி... ஹி... டிபனுக்குப் போயிருக்கிறாப்பலே...' என்றேன்.
அப்போதுதான், 'குர்ரக்... குர்ரக்...' என்று, ஒரு சப்தமும், 'குர்ரோ குர்ரக்... குர்ரோ குர்ரக்..' என்று, அதற்கு மறுமொழியாக, இன்னொரு குரலும்! குறட்டையாலே இருவரும் பேசிக் கொண்டது, தடுப்புக்கு அந்தண்டையிருந்து ஒலிபரப்பாகி விட்டது.
நான் பரபரப்புடன் எழுந்தேன், அவர்களை எழுப்ப!
ஆசிரியர் கையமர்த்தினார். 'டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நான் கொஞ்சம் சீக்கிரம் வந்து விட்டேன். நீங்க வாங்க பேசுவோம்...' என்று, என்னை மட்டும், தன் அறைக்கு அழைத்துப் போனார்.
உறவினர் காலமான விஷயமாக, அவர் போய்க் கொண்டிருப்பதாகவும், 'இஷ்யு'வுக்கான டம்மி தயாராகியிருந்தால், பார்த்துவிட்டுப் போய் விடலாம் என்று வந்ததாகவும் கூறினார்.
'இஷ்யூவை எழுப்பட்டுமா?' என்றேன்.
'வேண்டாம்... பிரஷ்ஷாக எழுந்தாரானால், நாலு புது விஷயம் தோன்றும்...' என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.
ஆசிரியர் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை.
என் அனுபவத்திலும், அந்த உண்மையை அறிந்திருந்தேன். ஆனால், பெரும்பாலோர் நம்புவதில்லை. 'தூங்குவதற்கு ஒரு சாக்காக்கும்...' என்று கிண்டலடிக்கின்றனர்.
என் கட்சி: புத்துணர்ச்சியும், புது ஐடியாக்களும் பிறக்குமானால், தூங்குவதில் தப்பே இல்லை.
— தொடரும்.
பாக்கியம் ராமசாமி
