PUBLISHED ON : ஏப் 15, 2012

உணவு வீணாவதை தவிர்ப்பீர்!
சமீபத்தில் அரசுத்துறையும், தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ஒரு முகாமில், நிபுணர் பிரிவில், நானும் கலந்து கொள்ள நேர்ந்தது. காலை முதல் நடந்த முகாம், மதியம் முடிவடைந்ததும், அரசுத்துறை அலுவலர்கள், நிபுணர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய முப்பது பேருக்கு, பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது. அதை வாங்கி, மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
ஒரு சிலர், முட்டையை சாப்பிடாமல் வைத்து விட்டனர். மேலும் சிலர், ஒரு பகுதி பிரியாணியை உண்டுவிட்டு போதும் என, மீதியை தூக்கிப் போட்டனர். வயதான சிலர், மட்டன் சாப்பிடுவதில்லை எனக் கூறி, மட்டனை ஒதுக்கி வைத்து விட்டனர். மொத்தத்தில், அதிக உணவு வீணாகியிருந்தது; அதைக் கண்டு வேதனை அடைந்தேன்.
பிரியாணியை பொட்டலமாகக் கொடுத்ததைத் தவிர்த்து, அனைத்து பொட்டலங்களையும் பிரித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து பரிமாறியிருந்தால், மூன்றில் ஒரு பங்கு உணவை மிச்சப்படுத்தியிருக்கலாம். மீந்திருக்கும் உணவை, பசித்தோர் யாருக்காவது பயன்படுத்தி இருக்கலாம்.
என் கருத்தை, முகாம் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் ஆமோதித்தனர். அடுத்த முறை, 'டிஸ்போசபிள்' தட்டுக்களை வாங்கி, தேவைக்கேற்ப பரிமாறி, உணவு வீணாவதைத் தவிர்க்க முயற்சிப்பதாகக் கூறினர். பத்திற்கு மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் போது, இந்த முறையைக் கடைபிடித்து, உணவு வீணாவதைத் தவிர்க்கலாமே!
— டாக்டர் மொய்தீன், மதுரை.
ஆணாதிக்க தமாசு எழுத்தாளர்களே...
இல்லத்தரசி நான்; பத்திரிகை அதிகம் படிக்கும் பழக்கம் உண்டு. மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை என்பது போலவும், மருமகளை மாமியார் கொடுமைப்படுத்துவது போலவும், மாமியாரை, மருமகள், 'கொலைவெறி'யோடு வெறுப்பது போலவும், தமாசு எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கின்றனர்.
என் மாமியாரை, நான் தாயாகவே பாவிக்கிறேன். அவரும் என் மீது, மகளாக பாசத்தை பொழிகிறார். எங்களைப் போல பலர் உண்டு என்பது, ஏன் இந்த தமாசு எழுத்தாளர்களுக்கு உரைக்கவில்லை? மாமியார் - மருமகள் முரண்பாடு தமாசுகளை எழுதித்தள்ளும் தமாசு எழுத்தாளர்கள், ஏன், மாமனார் - மருமகன் முரண்பாடு பற்றி தமாசு எழுதுவதில்லை?
காரணம், இவர்கள் எல்லாருமே ஆண்கள். இவர்களது ஆணாதிக்க உணர்வின் உச்சக்கட்டமே, மாமியார் - மருமகள் தமாசுகள். மாமியாரை நேசிக்கும் பாசமுள்ள ஒரு மருமகள் என்ற வகையில், நான் இவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
ஆணாதிக்க தமாசு எழுத்தாளர்களே... இனியாவது திருந்துங்கள்.
— உ.தமிழரசி அன்பழகன், திருநெல்வேலி.
சொத்தைக் காட்டி மயக்காதீர்!
என் பால்ய நண்பிக்கு, அளப்பரிய சொத்து உண்டு. ஆனால், அதற்குரிய அடையாளம் ஏதும் இல்லாமல் இருப்பாள். தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள்; அழுக்கு சுரிதாருடன் வலம் வருவாள். தலையையும் ஒழுங்காகச் சீவி பின்னவோ, கிளிப்போ போட மாட்டாள். அவள் அதிர்ஷ்டம், அவள் தெருவிலேயே உள்ள ஒருவருடன், திருமணம் நடந்தது. நாளாவட்டத்தில், ஒரு மகன் பிறந்தான். அதன்பின், அவளுடைய சந்தோஷம் தொலைந்தது.
அவள் கணவனோ, ஆஸ்திக்கு ஒருத்தி; ஆசைக்கு ஒருத்தி என, வாழத் துவங்கினான். கணவனிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொண்ட அவள், மனமுடைந்தாள். நண்பர்கள் மூலம், கணவரிடம் விசாரித்ததில், 'ஆமாம் பா... கொஞ்சமாவது, 'நீட்'டா உடை உடுத்தறாளா பாரு... அவளை, வெளியில் அழைத்துச் செல்லவே வெட்கமாக இருக்கிறது. நாசூக்கே தெரியவில்லை...' என்கிறான். சொத்தைக் காட்டி, மகளுக்குத் திருமணம் முடித்த பெற்றோர், இப்போது கண் கலங்கி நிற்கின்றனர்.
சொத்து மட்டும் போதாது, வாழ்க்கைக்கு!
— தாரா, திருப்பூர்.
முதலில் திருந்துங்கள் ஆண்களே!
ஏப்., 8, 2012 வாரமலர் இதழில், ஆழ்வார்க்குறிச்சி வாசகி ஜான்சி எழுதிய இ.உ.இ., கடிதம் படித்தேன். சாட்டையடி கடிதம் எழுதிய அவருக்கு ஒரு, 'சபாஷ்!' நகரத்தில் அவர் கூறுவது போல, அழிச்சாட்டியம் ஒரு புறம் என்றால், கிராமத்து இம்சை வேறுவிதம். இங்கே பெரும்பாலும் குளம், ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில், பெண்கள் துணி துவைத்துச் செல்வது வாடிக்கை. உள்பாவாடையை, மாரின் மேற்பகுதி வரை தூக்கிக் கட்டி, முழு உடலையும் மறைத்தபடி பெண்கள் குளிப்பர். அருகிலேயே வெறும் ஜட்டியுடனோ, மிக மெல்லிய குற்றால சீசன் துண்டுடனோ குளிப்பது ஆண்களின் வழக்கம்.
தண்ணீரில் நனைந்து இந்தத் துணிகள், அவர்தம் உடலோடு ஒட்டிக் கொண்டு, எவ்வளவு ஆபாசமாக இருக்கும் தெரியுமா? கர்மம் கர்மம்! எழுதுபவர்களில், பெண்களை விட ஆண்களே அதிகம் என்பதால், பெண்கள் சுதந்திரமாக உடை அணிவதை, 'கவர்ச்சி, ஆபாசம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கூச்சலிடுகின்றனர். ஆடை விஷயத்தில், ஆண்கள் செய்யும் அழிச்சாட்டியம், வெளியில் தெரியாமல் அமுங்கிப் போய் விடுகிறது. ஆடை விவகாரத்தில், ஆண்களே... நீங்கள் முதலில் திருந்துங்கள். பிறகு, பெண்களைப் பற்றி குறை கூற வரலாம்.
— கே.மரகதம், விக்கிரமசிங்கபுரம்.
