PUBLISHED ON : மார் 11, 2012

யாராவது விசிட்டர்கள், விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தால் தானே, வீட்டுக்கு ஒரு கலை, லட்சுமிகரம், அழகு?
ஆனால், நகர வாழ்க்கையில், நட்பு, சுற்றம், பாராட்டு கொஞ்சல், குலாவல் வியாதி, வெக்கை எல்லாத்தையும், வீடுகளுக்கு வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
ஒரு பங்ஷன் என்றால், குழந்தைக்கு முடி இறக்கி, காது குத்துகிறதாயிருந்தால் கூட, எந்த ஓட்டலிலேயாவது இரண்டு, 'ரூம்' புக் செய்து, வருகிற விருந்தினருக்கு, ஓட்டல் வராந்தாவிலேயே (கவுரமாக லவுஞ்சிலேயே) டிபன் சாப்பாடு போட்டு, அனுப்பி விடுவதான நிலைமையே பெரும்பாலும் உள்ளது.
வயசான ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன். ஒரு அடுக்ககத்தின் ஏழாவது மாடியிலிருந்தார். இரண்டு அறை புறாக்கூடுதான் போஷன்.
அந்தப் பிள்ளையாண்டானுக்கு நோயாளியான, வயசான அப்பா மீது, வெகு பாசம், பிரியம். அப்பா இன்னும் உயிரை விடவில்லை. (ரொம்பத்தான் ஆச்சார உபசாரம் செய்து கொண்டிருந்தால், உயிர்கள் சுகம் கண்டு, உடம்பிலேயே தங்கி விடுவதும் உண்டு என்று, ஏதோ ஓர் அற<நூலில் படித்த ஞாபகம்) தொண்ணூற்றைந்தை தொட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். அவரைப் பார்க்க வருகிறவர்கள் நிறையப் பேர். அவர் எல்லாருக்கும், எல்லா வகையிலும் உதவி செய்து கொண்டிருந்த நல்ல மனிதராதலால், நட்பு வட்டம், உறவுச் சதுரம் ஆகியவை பலமாக இருந்தது.
மகன் உத்தியோகத்திலிருந்து, அப்பாவுக்காக, விருப்ப ஓய்வு பெற்றிருந்ததால், அப்பாவை விசாரிக்க வருகிறவர்களை உபசரிக்கவும், காப்பி டிபன் கொடுக்கவும், விசிட்டர்கள் வாங்கி வருகிற பலதரப்பட்ட பொருட்களை, ரகவாரியாகப் பிரித்து, அங்கங்கே பத்திரப்படுத்தி வைப்பதும், தருணம் அறிந்து, அவருக்கு அவற்றைத் தருவதுமாக, பொழுதை சுவாரசியமாகப் போக்கிக் கொண்டிருந்தார்.
குடும்ப டாக்டர், வேளை தவறாமல் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு தரம், அவர் நோயாளியைப் பார்க்க வந்தபோது, பெரியவர் படுத்திருந்த அறை, 'ஹவுஸ் புல்'லாக இருந்தது. டாக்டரை, மற்றவர்கள் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.
டாக்டர் நகைச்சுவையுடன், 'தயவுசெய்து இந்தக் கும்பலில், யார் நோயாளியோ, அவர் கட்டிலிலிருந்து இரண்டடி முன்னே வந்து நிற்கவும். நான் ஊசிபோட்டு விட்டுப் போக வேண்டும்...' என்றார்.
ஆனால், பெரியவரால் உடனே எழ முடியாதபடி கட்டிலில், பத்து பன்னிரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
குறும்புக்கார டாக்டர், 'சிரமப்பட வேண்டாம். நான் சமாளித்துக் கொள்கிறேன்...' என்று, லேசாக ஊசியால், நாலைந்து விசிட்டர்களைக் குத்தி, 'சாரி... அப்பாவாக்கும் என்று போட்டு விட்டேன்...' என்றார்.
அப்பாவுக்கு திடுமென்று உடம்பு சீரியசாகி விட்டது. டாக்டர் வருத்தத்துடன், 'எல்லாருக்கும் சொல்லி அனுப்பிவிடு. ஆனால், யோசனை பண்ணி செலக்டிவாகத் தகவல் அனுப்பு. உ<ன் வீடு ஏற்கனவே ஹவுஸ்புல். உன் உறவினர் பட்டாளம் வந்து இறங்கினால், நீ இடத்துக்கு எங்கே போவாய்? அக்கம் பக்கத்து போர்ஷன்களில் பிட்டு, பிட்டாக எல்லாரையும் தங்க வைப்பாயா?' என்றார். (சில விஷயங்களை நாசூக்காகப் பார்க்காமல், பிராக்டிகலாகப் பேசத்தானே வேண்டியிருக்கு. நெருப்புன்னா வாய் வெந்துடப் போறதா?) 'அப்பா இறந்துட்டார்னா எப்படி இறக்கணும் (அதாவது கீழே இறக்கணும்), லிப்ட் வேலை செய்யணுமே, கரன்ட் போகாமலிருக்கணுமே...' என்றெல்லாம் கவலை.
கடைசி கட்டத்திலிருந்த அப்பாவுக்குமே அந்தக் கவலை. 'ஏண்டா... இறக்க எதுனா ஏற்பாடு பண்ணியிருக்கியா... சிரமப்படப் போறே...' என்றார். அந்த யோசனையிலேயே, மேலும் நாலைந்து நாள் நீடித்தார்.
டாக்டருக்கு ஆச்சரியம். 24 மணி தாண்டுவதே கஷ்டம் என்ற அவர் கணிப்பெல்லாம் செல்லுபடியாகவில்லை. காரணம், அப்பா யோசித்துக் கொண்டிருந்தார். (மூளை சுறு சுறுப்பாக இருந்தால், எமன் வர்றது தாமதம் ஆகுமாம்) 'டே சீமாச்சு...' என்று ராத்திரி ஒரு மணிக்கு அழைத்தார் அப்பா.
'முழிச்சுட்டுதான் இருக்கேன். சொல்லுங்கப்பா...' என்றான் மகன்.
'பேசாம ஏதாவது ஓட்டல்லே, காட்டேஜ் புக் பண்ணிருடா...' என்றார்.
'எதற்குப்பா?' என்றான் மகன்.
'வர்றவங்க அழக் கொள்ள, காரியம் பண்ண சவுகரியமாயிருக்கும். காசைக் கணக்கு பார்க்காதே. வேண்டிய அளவு சம்பாதிச்சிருக்கோம்...' என்றார்.
அப்பா சொன்னதை மகன் கேட்கவில்லை.
அப்பா காரியம், கீக்கிடமான அந்த ஏழு மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்த போர்ஷனில் தான், பல்வேறு இடைஞ்சலுக்கு நடுவில் நடந்தது.
சவுகரியமான ஓட்டலில், ஈமச் சடங்கை வைத்துக் கொள்ளும் அளவு, நமக்கு இன்னும் தைரியம் ஏற்படவில்லையோ அல்லது எந்த ஓட்டல்காரருக்கும் ஐடியா உதிக்கவில்லையோ!
***
புரசைவாக்கத்திலுள்ள கங்காதரேஸ்வரர் கோவிலில், சாயங்கால பூஜை வெகு அழகாக நடக்கும்.
சுவாமிக்கு அலங்காரம் முடிந்து, தூப, தீபங்கள் காட்டி, அர்ச்சனை முடிந்து, கற்பூர தீபம் ஏற்று முன், மேள தாள சத்தங்கள், சில நிமிடங்கள் மவுனமாகி, ஓதுவார் மூர்த்தி, தமிழிசையில் ஒரு பதிகம் பாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படும்.
ஓதுவார் ரெட்ட ரெடியாக நிற்பார், தாளமும் கையுமாக.
அந்த சில நேர கணங்களுக்கு, அவர் தான் கதாநாயகர். கூட்டத்தின் முதன்மையிடம் அவருக்குத் தான். கயிறு கட்டிய தாளத்துடன், அவர் அருமையான பாடல் ஒன்றை, கடவுளுக்கு அர்ப்பணிப்பார்.
அன்றைய சாயங்கால பூஜையை தரிசிக்க, குடும்பத்துடன் சென்றிருந்தேன்.
ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் நின்று தரிசித்துக் கொண்டிருந்தனர்.
எங்களுடைய நாலு வயது மகனும், எங்களுடன் வந்திருந்தான்.
சமர்த்தாக நின்று, பூஜையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஓதுவார் மூர்த்தி பாடுவதற்கான நிசப்த வேளை வந்தாயிற்று.
பக்தி பரவசத்துடன், உரிய ராகத்தில் ஓதுவார், 'தோடுடைய செவியன்...' பதிகத்தை பாடுவதை, என் அருகே இருந்த என் மகன், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். கைகூப்பியவாறு, உன்னிப்பாக குழந்தை கேட்பதைப் பார்த்து, அவன் தாய்க்கும், எனக்கும் பெருமையாகக்கூட இருந்தது.
எல்லாரது கண்களும், அவனை கவனிப்பதை நாங்கள் கவனித்தோம்.
'வீட்டுக்குப் போனதும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்...' என்று நினைத்துக் கொண்டேன்.
ஓதுவார் மூர்த்தி, பாடி முடித்தாயிற்று.
இன்னும், ஒரு பாட்டும் பாடக் கூடுமோ என்ற சந்தேகத்தில், அர்ச்சகர் பூஜையைத் தொடர, ஓரிரு நிமிடம் தாமதமாயிற்று.
ஓதுவாருக்கு நல்ல குரல் வளம். சில சமயம், இரண்டு பாடல்கள் கூடப் பாடுவார், அவருடைய, 'மூடு'க்கு ஏற்றாற்போல்.
அந்த நிசப்தம், யோசனை செய்து கொண்டிருந்த வினாடியில், ஒரு திடீர் பாட்டு, கீச்சுக் குரலில், ஸ்பஷ்டமாகக் கணீரென்று ஒலித்தது.
'வா வாத்யாரே ஊட்டாண்டே... வராங்காட்டிநா உடமாட்டேன்...
ஜாம் பஜார் ஜக்கு; நான் சைதாப்பேட்டை கொக்கு...'
இந்தப் பாடலை ஒலித்தவன், என் பிள்ளைதான். கை கூப்பியபடி, கண்மூடி இருக்கும் நிலையில், தெளிந்த குரலில், 'ஜாம் பஜார் ஜக்கு...' பாடத் தொடங்கி விட்டான்.
'டேய்... டேய்... டேய்!' என்று, அவனுக்குப் பிரேக் போட்டு, வாயைப் பொத்தி, பாட்டை நிறுத்தினேன்.
பக்தர்கள் எல்லாருக்கும் சிரிப்பு; எனக்கும், மனைவிக் கும் ஏக வெட்கமாகி விட்டது.
குழந்தையோ, ஏன் தன் பாட்டை, அப்பா நிறுத்தி விட்டார் என்று அறியாமல் திகைத்தான்.
சுவாமி முன்னாலே, ஓதுவார் பாடினது போல, எல்லாருமே ஆளுக்கொரு பாட்டு சுவாமிக்காகப் பாட வேண்டுமோ என்று, அவனது குழந்தை உள்ளம் நினைத்து விட்டது.
அவனுக்குத் தெரிந்த பாட்டு, 'ஜாம் பஜார் ஜக்கு...' தான்; அதை பாடி விட்டான்.
(அப்போது மனோரமா பாடிய, அந்த சினிமா பாட்டு, வெகு பிரபலமாயிருந்தது.)
'அது பக்திப் பாட்டா, சினிமாப் பாட்டா என்பதெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. ஆனால், இன்று கங்காதரேஸ்வரர் காதில், கட்டாயமாக ஒரு நேயர் விருப்பப் பாட்டு விழுந்து விட்டது. குழந்தை பாடியதால், அதை அவர் பக்திப் பாட்டாக எடுத்துக் கொண்டிருப்பார்...' என்று, அருகிலிருந்த பெரியவர் கூறியது பொருத்தமாயிருந்தது.
— தொடரும்.
பாக்கியம் ராமசாமி
