தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்காணிப்பு அவசியம் இருக்கட்டும்!

சமீபத்தில், என் தோழி நடத்துகிற பியூட்டி பார்லருக்கு சென்றிருந்தேன். அங்கே, எனக்கு தெரிந்த, பிளஸ் 2 படிக்கும் பெண், பேஷியல் செய்து கொண்டிருந்தாள். கை, கால், தலைமுடி என்று அழகுபடுத்திக் கொண்டாள், சர்வ சாதாரணமாக, 2,000 ரூபாய் கொடுத்தாள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். 'வீட்டில் ஏதாவது விசேஷமா அல்லது பிறந்த நாளா?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'மறுநாள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, எங்கள் பள்ளிக்கு அடுத்துள்ள ஆண்கள் பள்ளியில் நடக்க இருக்கிறது. அதனால் தான், அலங்காரம் செய்து கொண்டேன்...' என்றாள். இதை கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.

இதற்கெல்லாம் மூலக்காரணம் பெற்றோர். குழந்தைகள் கையில் ஆயிரக்கணக்கில் பணம் மற்றும் மொபைல் போன் கொடுப்பது. பிறகு, நடக்கக் கூடாதது நடந்து விட்ட பின், புலம்புவது... இதெல்லாம் தேவையா?

பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தை களோ கண்காணிப்பு மிகவும் அவசியம்!

எஸ்.உஷா, மதுரை.


சபாஷ்... பொறுப்பான வார்டன்!

விடுதியில் தங்கி படிக்கும் என் மகன், சமீபத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தான். நாங்களும் வழக்கம் போல, பள்ளி நடப்புகளை விசாரித்துக் கொண்டிருந்தோம். அப்போது, புதிதாக வந்து சேர்ந்த வார்டனை பற்றி, ரொம்ப பெருமையாக பேசினான். 'அப்படி என்ன தான் செய்றார் உங்க வார்டன்...' என்று கேட்டோம்.

'தினமும் படிப்பது, ஹோம் ஒர்க் செய்வது போன்ற வேலைகள் எல்லாம் முடித்ததும், இரவு உணவுக்கு முன்னதாக, அரைமணி நேரம், எங்களோடு அமர்ந்து ஜோக் அடிப்பது, சிறுகதைகள் சொல்வது, சின்ன சின்ன போட்டிகள் நடத்துவது, புது புது விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதில் ஒவ்வொரு மாணவர்களையும் ஈடுபட வைப்பது, 'க்விஸ்' போட்டி நடத்துவது, நாளிதழில் வெளியாகும் முக்கிய செய்திகளை விவரிப்பது என்று, எங்களுக்கு பல விஷயங்களை சொல்லித் தருவார்...' என்று கூறினான்.

அந்த வார்டனை சந்தித்து பாராட்டினோம். பெற்றோரை பிரிந்து, நீண்ட தொலைவில் தங்கி படிக்கும் மாணவர்களை எந்தவிதமான ஏக்கங்களும், மற்ற தவறான விஷயங்களும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவர்களது படிப்பு வேலைகள் முடிந்தவுடன், தினமும் கொஞ்ச நேரம் சந்தோஷப்படுத்தலாம் என்ற முடிவில் இவ்வாறு செய்வதாகக் கூறினார்.

வார்டன் என்றாலே எதிரியாக பாவிக்கும் மாணவ சமுதாயத்தில், சற்று மாற்றிக் காட்டும் தனித்துவம் மிகுந்த வார்டனை தேர்ந்தெடுத்த அந்த விடுதி நிர்வாகத் தினரையும் பாராட்டி விட்டு வந்தோம்.

வி.கீதாஞ்சலி, கதிர்நாயக்கன்பட்டி.

அவசரப்பட்டு பேசாதீர்கள்!

தினமும் இரவில், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு, ஆட்டோவில் செல்கிறேன். ஒரு நாள், ஆட்டோவில் சென்ற போது, மெதுவாக உருட்டி, உருட்டி ஆட்டோவை ஓட்டினார் ஓட்டுனர். அடுத்த நாளும், அவரே வந்தார். அன்றும் அப்படியே!

மூன்றாம் நாளும் அவர் வரவே, சற்று தயங்கியபடியே, அதே ஆட்டோவில் ஏறினேன்; அதே உருட்டல். எரிச்சலுடன், ஆட்டோவை நோட்டம் விட்டேன். முகவரி இல்லை; 'இன்டிகேட்டர்' விளக்குகள் இருக்கும் இடங்களில் வெறும் ஓட்டை. பிரேக் பிடிப்பதற்கு, கைக்கு எட்டும் வகையிலான ஒரு இரும்புத் தடியை இழுத்து, இழுத்து ஏதோ செய்தபடி, ஓட்டுனர் ஓட்டியபடி இருந்தார். சீட்டுகள் செம பழசு. மேல் கூரையில், வெறும் கம்பிகளும், அவற்றின் மீது, ஒப்புக்கு ஒரு ரெக்சின் விரிப்பும் மூடப்பட்டிருந்தன.

பொறுக்க முடியவில்லை என்னால்! 'என்ன டிரைவர்... காயலான் கடைக்கு போக வேண்டியதை, இப்படி உருட்டிக்கிட்டிருக்கீங்க... 'இன்டிகேட்டர்' விளக்கு கூட இல்லாம... பிரேக்குக்கு ஒயரை பிடிச்சு பிடிச்சு இழுக்குறீங்க... போலீசிடம் சொல்லவா?' என்றேன். '89 லேர்ந்து இத ஓட்டுறேம்மா...' என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.

விடவில்லை நான்; தொடர்ந்து ஐந்து நிமிடம், மூச்சு விடாமல் இறைந்து, ஆட்டோவை நிறுத்தும்படி கூறினேன்.

நான் சப்தமிடுவதை நிறுத்தியதும், மெதுவாக, 'என்னை முழுசா பாத்தீங்களாம்மா?' என, டிரைவர் கேட்டார். 'இல்லை' என்றேன். 'எனக்கு கால்கள் கிடையாதும்மா...' என்றார். தூக்கிவாரிப் போட்டது!

பிறகென்ன... வழி நெடுக, மன்னிப்பு கேட்டேன். அவசரப்பட்டு வார்த்தைகளை விடக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்!

பி.பானுமதி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us