
திருமணத்தில் தாலி கட்டும்போது, மாப்பிள்ளை முதல் முடிச்சு போட, மணமகனின் சகோதரி - பெண்ணின் நாத்தனார், அடுத்த இரண்டு முடிச்சுகளை போடும் வழக்கம், தென் மாவட்டங்களில் உண்டு.
ஆனால், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், பாபநாசநாதர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில், நாத்தனார் தான் முடிச்சு போட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில், அம்பாளே பெண்ணுக்கு நாத்தனாராக இருந்து, திருமணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.
பொதிகைக்கு வந்த அகத்தியரிடம், உரோமசர் என்பவர் சீடராக சேர்ந்தார். இவர், சிவ பூஜை செய்ய விரும்பி, தாமிரபரணி நதியில், தாமரை மலர்களை மிதக்க விட்டார். அவற்றில், ஒன்பது மலர்கள் குறிப்பிட்ட இடங்களில் கரை ஒதுங்கின. அவை ஒதுங்கிய இடங்களில், லிங்கம் வடித்து, பூஜை செய்தார்.
காலப்போக்கில், இந்த இடங்களில் கோவில்கள் எழுந்தன. இவை கைலாயத்துக்கு ஒப்பானவை என்பதால், 'நவ கைலாயங்கள்' எனப்பட்டன. இதில் ஒன்று, பாபநாச நாதர் கோவில்.
இங்கு, அம்பாளுக்கே முக்கியத்துவம். இந்தியாவிலுள்ள சக்தி பீடங்கள், 51ல், இது, விமலை பீடம். விமலா என்றால், மாசு மருவற்ற அல்லது சுத்தமானது என, பொருள். இந்த பெயர் சரஸ்வதியைக் குறிக்கும். இதைக் குறிக்கும் வகையில், அம்பாளுக்கு தினமும் மாலையில், சரஸ்வதிக்குரிய வெள்ளை புடவை அணிவிக்கப்படும். கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்காக, அம்பாளிடம் வேண்டுதல் வைப்பர்.
முகூர்த்த காலங்களில், இங்கு, ஏராளமான திருமணங்கள் நடக்கும். அம்பாளே நாத்தனாராக இருந்து, திருமணம் நடத்தி வைப்பதாக ஐதீகம் உள்ளதால், தாலி பாக்கியம் நிச்சயம்.
திருமணம் நடக்கும் இடத்தின் அருகில், ஒரு உரலும், உலக்கையும் இருக்கும். இதனுள் விரலி மஞ்சளை இட்டு இடிப்பர். அதில் கிடைக்கும் பொடியை தாலியிலும், நெற்றியிலும் இட்டுக்கொள்வர். கன்னிப்பெண்கள் இதை இட்டால், சிறந்த வாழ்க்கை துணை அமையும்.
பொதிகை மலையில், பாறைகளின் ஊடே ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் தாமிரபரணி, இந்தக் கோவில் முன் வரும்போது, சமநிலை அடைகிறது.
ஒரு கரடு முரடான பாறை போன்றது, மனம். அதனுள் பல நினைவுகளும், ஆற்று நீரைப் போல மோதும். பாபநாச நாதரை மனதார வணங்கினால், மனதை சமநிலைப்படுத்தி, அமைதியான வாழ்வை அருள்வார் என்பதற்கு, தாமிரபரணி உதாரணம்.
வரும், 24ம் தேதி, தை அமாவாசையன்று, இங்கு, முன்னோர் வழிபாடு நடக்கிறது. அன்று, இங்கு வந்து வணங்கினால், செய்த பாவம் தீரும்.
தி. செல்லப்பா