
மாமியார் - மருமகள் பிரச்னை தீர...
கடந்த ஆண்டு திருமணமான உறவினரின் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில், ஏற்பட்ட அனுபவத்தை கூறினார். அதாவது, மருமகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணி, ஆரம்பத்திலிருந்தே கெடுபிடியாக இருந்துள்ளார், அவளது மாமியார். மருமகளும், சுபாவத்திலேயே அமைதியான பெண்ணாக இருந்ததால், மாமியாரின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து, அனுசரணையாகவே இருந்துள்ளார்.
ஆனால், அன்றாடம் நடப்பவைகளை, கணவரிடம் சொல்லி விடுவாள். அவரும், 'போக போக, உன் சுபாவத்தை அம்மா புரிந்து கொள்வாள், பொறுமையாக இரு...' என்று கூறி வந்துள்ளார்.
இப்படியே ஒரு ஆண்டு கடந்து விட்டது.
மருமகளை பற்றி புரிந்தாலும், தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இதற்கிடையே, தன் பக்க நியாயத்தையும், மாமியார் செய்த அடாவடிகளையும், அன்றன்றைக்கு குறிப்புகளாக எழுதி வைத்திருந்தார், மருமகள்.
ஒருநாள், மாமியார், மாமனார் மற்றும் கணவரை அமர வைத்து, சாவகாசமாக, கடந்த ஒரு ஆண்டாக குறிப்பெடுத்த பட்டியலை படித்து காண்பித்து, கிழித்து போட்டு விட்டார்.
'நான், நம் குடும்பத்தில் நல்லபடியாகவும், நிம்மதியாகவும் வாழத்தான் வந்திருக்கிறேன். யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. இனியாவது, ஒருவரை ஒருவர் புரிந்து, எல்லாரும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழலாம்...' என, கூறியுள்ளார்.
அதன்பின், மாமியாரின் போக்கில் சுமுகமான மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் வீட்டில் அமைதி நிலவியது.
அவள் கணவரும், தன் குடும்ப விஷயம் அடுத்தவருக்கு போக விடாமல், சாதுரியமாக கையாண்ட மனைவியின் அணுகுமுறையை பாராட்டியதாக, நண்பர் கூற கேட்டேன்.
மாமியார் - மருமகள் உறவு மட்டுமல்ல, கணவன் - மனைவி, தந்தை - மகன் போன்ற உறவுகளும் மேற்கண்ட மென்மையான அணுகுமுறையை பின்பற்றி நிம்மதியாக வாழலாமே!
—எஸ்.ஆர்.எஸ். ராகவன், சென்னை.
சரியான மொபைல் எண்ணை பயன்படுத்துங்களேன்!
சமீபத்தில், சொந்த ஊரான, திருநெல்வேலி செல்வதற்காக, தனியார் நிறுவன, 'ரெட் பஸ்' மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். அதன்படி, பேருந்தில் பயணிப்பதற்கான இடமாக, சென்னை - பெருங்களத்துாரை தேர்வு செய்திருந்தேன்.
பேருந்து இரவு, 9:00 மணிக்கு வரும் என்பதால், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பஸ் அலுவலகம் சென்றேன். அப்போது, பெண்மணி ஒருவர், கைகுழந்தை மற்றும் வயதான பெற்றோருடன், அலுவலக ஊழியரிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.
'பஸ் கிளம்பி, 30 நிமிடம் ஆகிவிட்டது. நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள்...' என்றனர், அலுவலக ஊழியர்கள்.
அதற்கு, அப்பெண்மணி, 'ஆம்னி பஸ் டிரைவரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்தேன்; சரியாக பதில் அளிக்கவில்லை...' என்று புகார் கூறினார்.
அலுவலக ஊழியர்களோ, 'நாங்கள் டிக்கெட் பதிவு செய்த போது, கொடுத்த எண்ணிற்கு, மூன்று, நான்கு முறை போன் செய்தோம். உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை...' என்றனர்.
'எனக்கு, எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. டிக்கெட் பதிவு செய்த எண், வேறு; பஸ் டிரைவருக்கு நான் போன் செய்தது வேறு ஒரு எண்...' என்றார்.
'டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கொடுக்கும் மொபைல் எண்ணிற்கு தான், பஸ் டிரைவர் அழைப்பது வழக்கம்...' என்றனர், அலுவலக ஊழியர்கள்.
பேருந்தில் பயணிக்கவும் முடியாமல், முன்பதிவு செய்த பணமும் கிடைக்காமல் அவதியுற்றார், அப்பெண்.
நண்பர்களே... ரயில் மற்றும் பஸ் பயண முன்பதிவின் போது, உபயோகத்தில் உள்ள மொபைல் எண்ணையே பயன்படுத்துங்கள். இல்லையெனில், இதுபோன்ற சிக்கலில் மாட்டி அவஸ்தைப்பட நேரிடும்.
ஆர். கவிதா, பல்லாவரம்.
உடல் பரிசோதனையின் முக்கியத்துவம்!
அலுவலக நண்பர் ஒருவர், எங்கேனும், யாரையாவது சந்தித்தால், 'நடைபயிற்சி போறீங்களா... பீ.பி., சுகர் நார்மலா இருக்கா... இதய துடிப்பு ஒழுங்கா இயங்குதா... உடல் பரிசோதனையை தவறாமல் பண்றீங்களா...' என, பெரும்பாலும் உடல்நலம் குறித்த கேள்விகளையே கேட்பார்.
'நாங்க நல்லாதானே இருக்கோம்; எங்களுக்கு எதுக்கு உடல் பரிசோதனை...' என்பர். அது மட்டுமின்றி, அவர் வருகிறார் என்றாலே, நக்கலாக, 'வரார்யா ஹெல்த் இன்ஸ்பெக்டர்' என்பர்.
சமீபத்தில், அலுவலக நண்பர் ஒருவருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஈ.சி.ஜி., பார்த்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்து, அதிர்ச்சியடைந்தோம். ரத்த பரிசோதனையில், சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, வலி வெளியே தெரியாமல் மாரடைப்பு வருமாம்.
நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த, 'வெல் விஷர்' நண்பர், '50 வயதுக்கு மேல், நம் உடல், பல நோய்களுக்கு மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் நோய் ஒளிந்திருக்கும்.
'இது, சம்பந்தப் பட்டவருக்கே தெரியாது. அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொண்டால், மறைந்திருக்கும் நோய்களை எளிதில் கண்டுபிடித்து, துவக்க நிலையிலேயே சிகிச்சையளித்து குணப்படுத்தி விடலாம்...' என்றார்.
வாசக நண்பர்களே... அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
- பி. சுமதி, சென்னை.