
சாவித்திரியின் காலகட்டத்தில், கதைக்கு இருந்த முக்கியத்துவம், தன் காலத்தில், சதைக்கு மாறியதை புரிந்துகொள்ளவில்லை, சிலுக்கு. பணம், மிகவும் தேவையாக இருந்த நேரத்திலும் கீழே இறங்கி வரவில்லை.
'நீங்க, தாலாட்டு கேட்குதம்மா படத்தில் நடிச்சா தான், எனக்கு, 'லைப்' மேடம்...' என்று, சிலுக்குக்காக காத்திருந்தார், ராஜ்கபூர்.
'இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. இனி, நடையை கட்ட வேண்டியது தான்...' என்றே நினைத்தார், ராஜ்கபூர்.
'ராஜ்கபூர் போன்ற புதியவர்கள், இன்னும் நம்மை நம்புகின்றனரே...' என்று, சிலுக்குக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. நடிக்க ஒப்புக் கொண்டார்.
சிலுக்கின் மிக ராசியான கதாநாயகன், பிரபு. இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாம் வெற்றிகரமாகவே ஓடின. சிலுக்கை மிக கவுரவத்தோடு நடத்திய நடிகரும், அவர் தான்.
தாலாட்டு கேட்குதம்மா படம் வெற்றிகரமாக, 100 நாட்கள் ஓடியது. பிரபுவின் அடுத்த படமான, பாண்டிதுரையிலும் சிலுக்குக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில், சிலுக்கின் அலை ஓய்ந்து, சில ஆண்டுகளுக்கு பின், ராமராஜன் வந்த பிறகு, குடும்பத்தோடு பார்க்கிற படங்கள், அவர் நடிப்பில் நிறைய வெளியாகின. அப்படியொரு சந்தர்ப்பத்தில், அன்று பெய்த மழை படம் வெளியானது.
சிலுக்குக்கு, மார்க்கெட் போயிருக்கலாம். ஆனால், அவருக்கென்று இருந்த தனி மவுசு குறையவே இல்லை என்பதை, அன்று பெய்த மழை படம் நிரூபித்தது. பேட்டல் அட்ராக் ஷன் என்ற ஆங்கில படத்தின் தழுவலே, அன்று பெய்த மழை. அந்த படத்தில், சிறப்பாக நடித்ததற்காக, சிலுக்குக்கு, தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் அசோக்குமார்.
தமிழில், தரமான படங்களுக்கான தமிழக அரசின் மானியம், மூன்று லட்சம் ரூபாய் இப்படத்துக்கு கிடைத்தது. இதில் நடிப்பதற்காக, மொத்த, 'கால்ஷீட்' கொடுத்து, ஈடுபாட்டோடு நடித்தார், சிலுக்கு.
கேப்ரி என்ற, அந்த கதாபாத்திரத்தின், 'க்ளைமாக்சில்' அற்புதமாக நடித்தார். 'சிலுக்கை போல, வேறு யாராலும் அந்த வேடத்தில் நடித்திருக்கவே முடியாது...' என்று, மிகுந்த மனநிறைவு கொண்டார், அசோக்குமார்.
இப்படத்தில், சிலுக்குக்கு, சண்டை காட்சிகளும் இருந்தன. தமிழில் நன்றாக வசூல் செய்த, அன்று பெய்த மழை படம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும், 'டப்' செய்யப்பட்டது.
சிலுக்கின் நடிப்பில் திருப்தியடைந்த, அசோக்குமார், தம்பிக்கு ஒரு பாட்டு என்ற, தன் அடுத்த தயாரிப்பிலும், அவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். சிலுக்கோடு, அசோக்குமாரின் மகனும் படத்தில் நடித்திருந்தார்.
பலவீனமான திரைக்கதை, தோல்வியை தழுவியது.
கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தியிருந்தார், சிலுக்கு. இருந்தாலும், தான் நடிக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு, மறுக்காமல் நடித்து கொடுத்தார்.
தமிழ் சினிமாவில், 1990களில், தொடர்ந்து, 'ஹிட்'களை கொடுத்தவர், ஆர்.வி.உதயகுமார். அவரது இயக்கத்தில் நடிக்கும் ஆசை, சிலுக்குக்கும் இருந்தது.
'சிவஸ்ரீ பிக்சர்'சுக்காக, சுபாஷ் என்ற படத்தை இயக்கினார், உதயகுமார். அர்ஜுன், ரேவதி நடித்த அந்த படத்தில், சிலுக்கு ஆட வேண்டும் என்று விரும்பினார்.
கதைப்படி, ஓர் அழகியின் நடனம் அவருக்கு தேவையாக இருந்தது. தமிழ் சினிமாவில், 1996களில், கவர்ச்சி ஆட்ட நடிகையர் என்று, தனியாக யாரும் இல்லை. டிஸ்கோ சாந்தி, திருமணம் செய்து, ஆந்திரா பக்கம் போய் விட்டார்.
சிலுக்கை, மீண்டும் கவர்ச்சியாக நடிக்க அழைக்க முடியுமா என்பது, உதயகுமார் முன் வைக்கப்பட்ட வினாவாக இருந்தது. அவரிடமே கேட்டு விடலாம் என்று, உதயகுமாரும், பட தயாரிப்பாளரும், சிலுக்கின் வீட்டுக்கு சென்றனர்.
சிலுக்கின் முகம் தான் வாட்டமாக இருந்ததே தவிர, அவரது உடல் சிக்கென்று இருந்தது. உதயகுமார் விஷயத்தை சொன்னதும், தன் நீண்ட நாள் ஆசைகளில், இந்த சின்ன ஆசையாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து, ஒப்புக்கொண்டார்.
சிலுக்கு ஆடுவதற்காக, உற்சாகமாக பாடல் எழுதினார், உதயகுமார்.
'சலோமா சலோ' என்று ஆரம்பமானது, அந்த பாட்டு. அர்ஜுனும், சிலுக்கும் ஆடிப்பாட, 'மோகன் ஸ்டுடியோ'வில் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
இந்த பாடல் காட்சி வித்தியாசமாக இருக்க விரும்பினார், உதயகுமார்.
எரிமலைகளின் நெருப்பிலிருந்து, சிலுக்கு வெளியேறி, நெருப்பிலே பூத்த மலர் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தார். யாக குண்ட நெருப்புக்குள்ளிருந்து பாடல் துவங்கும்போது, சிலுக்கு வெளியே வருவது போலவும், பாடல் முடியும்போது, மீண்டும் நெருப்புக்குள்ளே போவது போலவும் காட்சியை அமைத்தார்.
உண்மையிலேயே, அப்போது, சிலுக்கு, தன் அந்தரங்க வாழ்வில், இதயத்தில் எரிமலைகள் சிதற வாழ்ந்து கொண்டிருந்தார்.
சுபாஷ் படம் வெளியானபோது, சிலுக்கின் ஆட்டம், ரசிகர்களை கிறங்கடிக்கவில்லை; மாறாக கலங்கச் செய்தது.
அது அவ்வளவு தான். ஒரு சகாப்தத்தின் நிறைவு என்பது, யாரும் சொல்லாமலேயே புரிவதாக இருந்தது.
ஒரு படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில், சிலுக்கிடம் வந்தார், ஸ்டன்ட் மாஸ்டர், விக்ரம் தர்மா. பலருடைய மனதை, பல நாட்களாக அரித்துக் கொண்டிருந்த கேள்வி. பலரும், சிலுக்கிடம் கேட்க தயங்கிய கேள்வி.
'இந்த ஆளு என்ன அழகா இருக்காருன்னு, இவரை, உங்க கூட வெச்சிருக்கீங்க... உங்க புகழுக்கும், அழகுக்கும் ஏத்தவரே இல்ல இவரு...' என்ற கேள்வியை, விக்ரம் தர்மாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, சிலுக்கு.
'என் கண்ணுக்கு, அவர் அழகா இருக்கார்... உனக்கென்ன...' என்றார்.
அந்த நபர்...
— தொடரும்.
பா. தீனதயாளன்