
பா - கே
நண்பர் ஒருவர் இல்ல விழாவுக்காக, இரண்டு நாள் பயணமாக, பெங்களூரு சென்றிருந்தேன்.
விழா இனிதே முடிய, நண்பருடன், பெங்களூரை ஒரு, 'ரவுண்ட்' வந்தபோது, சில கடைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தது. அதுபற்றி நண்பரிடம் கேட்டேன்.
அவர் கூறியது:
ஒரு டீக்கடையின் பெயர், 'இன்பினிடியா டீ ரூம் அண்டு டீ ஸ்டோர்!'
'இன்பினிடி' என்றால், கணக்கில்லாத என்று பொருள். இங்கு, 120 வகையான டீ கிடைக்கும். 'ஊலாங், ஏர் லக்ரே, சைனீஸ் சென்சா' மற்றும் 'காஷ்மீரி காஹ்வா' என, பல வகை உண்டு.
மற்றொரு டீக்கடையின் பெயர், 'மிஸ்டர் ப்ரூட்டீயா!'
இங்கு, தென் கிழக்கு ஆசியாவின் பிரபல வகைகளான, 'பபில் டீ, பழம் சேர்க்கப்பட்ட டீ' என, பல உண்டு. பழம், டீ இணைந்து தரப்படுவது, 'ப்ரூட் டீ!'
ஒரு மதுக்கடையின் பெயர், 'பார்... பார்...'
'அது என்ன, ஒரு, 'பார்' போதாதா. எதற்கு இரண்டு பார்...' என்றேன்.
இதன் பொருள், 'திரும்ப திரும்ப வருக' என்பதாகும். இந்த, 'பாரில்' நிறைய மது அருந்தி, ஓய்வெடுத்து, புத்துணர்வு பெற்று புறப்படலாம்.
மற்றொரு மதுக் கடையின் பெயர், 'சோடலி டாபர்!'
போதை ஏறிய மனிதர்கள், ஒரு மயக்கத்தில் ஊசலாடுவதுண்டு. அதற்கு ஏற்ப, உள்ளே, 'செட் - அப்'கள் அமர்க்களமாய் இருக்கும். பெயின்ட் உதிர்ந்த சுவர்கள், சுகமான குகை, 'டீ பாட்'களில் செய்த விளக்குகள், மெல்லிய தாளில் உருவாக்கப்பட்ட, சிறு சிறு அழகு பொருட்கள் என, அலங்கரித்துள்ளனர்.
மற்றொரு மதுக்கடையின் பெயர், 'ஷேக்ஸ்பியர் ப்ரூவ் பப் அண்டு கிச்சன்!'
'பிரபல நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரை ஞாபகப்படுத்துவது போல் உள்ளதே...' என, விழித்தேன்.
ஷேக்ஸ்பியரின் நாடக பாத்திரங்களின் பெயர்களை மது பானங்களுக்கு சூட்டி, சுவையூட்டியுள்ளனர். உதாரணமாக,
'ரோமியோ ஸ்வாகர், ப்ரிங்கி ப்ரூட்டஸ்' மற்றும் 'அலெக் ஒத்தெல்லா' என, சில மதுபான வகைகள் இருக்கின்றன.
- இவ்வாறு கூறி, வியப்பில் ஆழ்த்தினார், நண்பர்.
இன்று, சாப்பாடு, ஸ்நாக்ஸ் மற்றும் டீ, காபி கடைகளை திறந்தால் மட்டும் போதாது. அவற்றுக்கு புதுமையான பெயர்களை சூட்டி, சாப்பிடுபவர்களை வலை வீசி இழுக்க வேண்டும். குறிப்பாக, பானங்கள் விற்கும் கடைகளுக்கு, இது ரொம்பவே பொருந்தும் என்று நினைத்துக் கொண்டேன்.
ப
சென்னை வாசகர், இரா. மனகாவலன்; நமது நாளிதழில் வெளியாகும், 'இது உங்கள் இடம்' பகுதிக்கு, நிறைய கடிதம் எழுதுவார்; அவை வெளியாகும்.
அக்கடிதங்களை படித்து விடுவேன்.
இப்போது தான், பா.கே.ப.,விற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்; மிக முக்கியமான விஷயங்கள் அடங்கிய கடிதம் இது.
கடிதம் இதோ-
இந்த வாரத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவத்தை, அந்துமணியுடனும், வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.
'தினமலர்' நாளிதழில் வரும் சினிமா விமர்சனத்தை பார்த்து, தகுதியாக இருந்தால் தான், படம் பார்க்க போவேன்.
அதிலும், சென்னை, அசோக்நகரில், நான்கு தியேட்டர் ஒன்றாக உள்ள, 'காம்ப்ளக்சிற்கு' தான் போவேன்.
நான் பார்க்க விரும்பிய படம், மேற்படி தியேட்டர்களில் திரையிடப்படவில்லை என்றால், விட்டு விடுவேன்; வேறு தியேட்டர்களுக்கு போக மாட்டேன்; அது ஒரு பழக்கம்.
அந்த தியேட்டர்களில், எப்போதும், ஆண்கள் - பெண்கள் என, கூட்டம் அதிகமாக இருக்கும். உள்ளே அனுமதிக்க, வாசல் திறக்கும்போது, தள்ளுமுள்ளுடன் தான் போக முடியும்.
கடந்த ஒரு ஆண்டாக, நான், எந்த திரைப்படமும் பார்க்கவில்லை. சமீபத்தில், 'தினமலர்' நாளிதழில், இருட்டு, ஜடா மற்றும் குண்டு என்று, மூன்று திரைப்படங்களின் விமர்சனம் படித்து, அப்படங்களை பார்க்க முடிவு செய்து, மேற்கண்ட தியேட்டருக்கு, காலை, 9:30 மணிக்கு போனேன்.
ஆச்சரியமாக, தியேட்டர் வளாகத்தில், ஒரு ஆள் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பணியாளரிடம் விசாரித்ததில், 'சார்... நாலைந்து மாதங்களாக இதுதான் நிலைமை. எந்த படம் போட்டாலும், 10 பேருக்கு மேல் வருவதில்லை. 'ஏசி'யுடன், இந்த, 10 பேருக்கு மட்டும் படம் போட்டால், நஷ்டம் தான்...' என்று புலம்பினார்.
டிக்கெட் கவுன்டர் திறந்ததும், மதியம், 3:00 மணி காட்சிக்கு, இருட்டு; அடுத்த நாள் மதிய காட்சிக்கு, ஜடா; அதற்கடுத்த நாள், குண்டு படத்திற்கு என, 112 ரூபாய் வீதம், மூன்று முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி வீட்டிற்கு வந்தேன்.
அன்று மதியம், 3:00 மணிக்கு, இருட்டு படம் பார்க்க போனேன். குளிர்சாதன வசதியுள்ள, 300 பேருக்கு மேல் அமரக்கூடிய அந்த அரங்கத்திற்குள், 30 பேர் தான் இருந்தனர்.
'அட கடவுளே... இப்படி இருந்தால், தியேட்டர் உரிமையாளருக்கு எப்படி கட்டுப்படியாகும்...' என்று, நினைத்தபடி, படம் பார்த்து வந்து விட்டேன்.
மறுநாள், ஜடா படம் பார்க்க, ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுடன், தியேட்டருக்கு போனேன்.
நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலர், என்னிடமிருந்த டிக்கெட்டை வாங்கி பார்த்து, 'சார்...' என்று, ஒரு மாதிரி இழுத்தார்.
'என்னய்யா...' என்றேன்.
'சார்... இன்னைக்கு, இந்த படம் போடலை...' என்றார்.
'ஏன்...' என்றேன்.
அதற்கு, அவர் கூறிய பதில், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'சார்... இந்த படத்துக்கு விற்பனை ஆன டிக்கெட், ஒண்ணே ஒண்ணு தான். அது, நீங்க வாங்கின டிக்கெட்; இந்த ஒரு டிக்கெட்டுக்கு, எப்படி சார் படம் போடறது... கவுன்டர்ல கொடுத்தீங்கன்னா, டிக்கெட் பணத்தை தருவாங்க; வாங்கிக்கங்க...' என்றார்.
எனக்கு ஏற்பட்ட திகைப்பில் என்ன செய்வதென்று தெரியாமல், கவுன்டரில் டிக்கெட்டை நீட்டினேன். 112 ரூபாயை கையில் திணித்தார். வாங்கி, வீடு சேர்ந்தேன்.
மறுநாள், குண்டு படமாவது பார்க்கலாம் என்று, டிக்கெட்டோடு போன எனக்கு, முதல் நாள் போட்ட, குண்டு தான் போடப்பட்டது. அதாவது, குண்டு படத்திற்கும், விற்பனை ஆன டிக்கெட் ஒண்ணே ஒண்ணு தான். அது, நான் வாங்கியிருந்த டிக்கெட். அந்த படம் நடக்க வேண்டிய தியேட்டரையே, பூட்டி விட்டனர்.
நான்கு தியேட்டர் உள்ள அந்த வளாகத்தில், மூன்றுக்கு, பூட்டு போட்டு விட்டனர். ஒரு தியேட்டரில் தான், படம் ஓடுகிறது.
ஏன் இந்த நிலை... ஜனங்களுக்கு என்ன வந்தது... யார் மேல் குற்றம்... தியேட்டரின் மேல் குறை சொல்ல வழியில்லை. இருக்கைகள், 'டாய்லெட்' மற்றும் குளிர்சாதன வசதி எதிலும் குறைவில்லை. பார்க்க தகுந்த படம் என்று, 'தினமலர்' இதழ் செய்தி வெளியிட்டிருந்தும், படம் பார்க்க ஏன் யாரும் வரவில்லை... முதல் வகுப்பு டிக்கெட் விலை அதிகமென்றால், குறைந்த வகுப்பிற்கும் ஏன் யாரும் வரவில்லை?
இப்படியிருந்தால், படத்தை திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன ஆவர்... வெளியிட்ட வினியோகஸ்தர்களின் கதி என்ன... பாவம், இந்த படத்தை ஆசையோடு தயாரித்த தயாரிப்பாளரின் நிலை என்னவாகும்...
இந்த கேள்விக்கும், திரைப்படத் துறையின் இந்த நிலைமைக்கும் காரணம் என்ன என்பதை, வாசகர்களும், ரசிகர்களும் தான் யோசித்து பதில் காண வேண்டும்.
கடிதத்தை படித்தீர்களா... உங்கள், ஊரிலும் இப்படி நடக்கிறதா?
திரைப்படத் துறை என்னவாகப் போகிறதோ... பொறுத்திருந்து பார்ப்போம்!