
கல்விக்கு, சரஸ்வதி; செல்வத்துக்கு, லட்சுமி; வீரத்துக்கு, பார்வதி என, முப்பெரும் நாயகியரை, நவராத்திரி காலத்தில் வழிபடுகிறோம். ஆனால், கல்வியின் ஒரு பகுதியான, பேச்சுத் திறமையை வளர்க்கும் நாயகர் ஒருவரும், தமிழகத்தில் உள்ளார். உத்தமராயப் பெருமாள் எனப்படும் இவரை, திருவண்ணாமலை மாவட்டம், பெரிய அய்யம்பாளையத்தில் தரிசிக்கலாம்.
மூகர் என்பவருக்கு, பேச்சுத்திறன் அளித்து, சிறந்த புலவராக்கினாள், சரஸ்வதி தேவி.
அதுபோல், பெரிய அய்யம்பாளையம் மலையில், ஆடு மேய்த்த சிறுவனின் வாழ்விலும், ஒரு சம்பவம் நடந்தது. அவனால் பேச முடியாது. அவன் முன் வந்த ஒரு பெரியவர், அவன் தலையில் கை வைத்து, 'ஊருக்குள் போய், நான் வந்திருக்கிறேன் எனச் சொல்...' என்றார்.
நடந்ததை ஊர் மக்களிடம் சொன்னான், சிறுவன்.
சிறுவனுக்கு பேசும் சக்தி வந்தது கண்டு, வியந்த மக்கள், குன்று நோக்கி வந்தனர். அங்கு, சங்கு, சக்கரத்துடன், பெருமாள் சிலை இருந்தது. மகிழ்ந்த மக்கள், அவருக்கு கோவில் எழுப்பினர். பேச்சுத்திறனற்ற சிறுவனுக்கு, பேசும் தன்மையைக் கொடுத்ததால் இவர், 'ஊமைக்கு, பேச்சு கொடுத்த உத்தமராயப் பெருமாள்...' என்று, பெயர் பெற்றார்.
முன்னுாறு படிகளுடன் கூடிய குன்றின் மீது, கோவில் உள்ளது. சுவாமி, தனியே வந்தார் என்பதால், தாயார் சன்னிதி கிடையாது. சனிக்கிழமைகளில், சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவர்.
திக்குவாய் பிரச்னை, சரியான உச்சரிப்பு இன்மை, பேச்சில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகளுக்காக, சுவாமிக்கு, தேன் அபிஷேகம் செய்வர். அதை, குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு வைப்பர். இதனால், பேச்சுத்திறன் வளரும் என்பது நம்பிக்கை.
பேச்சாளர்கள், பாடகர்கள், குரல் வளத்துக்காக, இங்கு வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், துலாபாரம் செலுத்துவர்.
உத்தமராயப் பெருமாள் எதிரே, கருடாழ்வார் இருக்கிறார். இங்குள்ள துவார பாலகர்கள் சிலை, அரிதாக கிடைக்கும், ஒரு வகை சிவப்பு கல்லால் செய்யப்பட்டது.
இங்கு, தியான குகை உள்ளது. இதன் முகப்பில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளனர். சிறுவனுக்கு இந்த குகையில் தான், பெருமாள் காட்சி தந்ததாக வரலாறு. சிறுவனுக்கு, சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும் பொங்கலுக்கு மறுநாள், 'மகரத்திருவிழா' (மகரம் என்றால் தை மாதம்) என்ற பெயரில் நடக்கும்.
வேலுார் - திருவண்ணாமலை வழியில், 23 கி.மீ., துாரத்தில் கண்ணமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
சனிக்கிழமைகளில், காலை, 7:30, -இரவு, 7:00 மணி வரையும், மற்ற நாட்களில், காலை, 7:00- - 8:00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 93455 24079, 94886 48346.
தி. செல்லப்பா