
எது முக்கியம்?
என் உறவினர் மகளுக்கு, ஒன்பதாம் மாதத்தில், வளைகாப்பு நடத்தி, வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
வீட்டில், கர்ப்பிணி பெண் இருக்கிறாள் என்ற பொறுப்புணர்வே இல்லாமல், அவள் எதிரிலேயே, உறவினரும், அவர் மனைவியும், அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 'டிவி'யை சத்தமாக வைத்து, தொடர்களும் பார்த்துள்ளனர்.
பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்பே, உறவினரின் மகள், மனநிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு, அவளுக்கு, 'கவுன்சிலிங்' தந்தனர்.
அதன் பிறகு, நார்மலான உறவினரின் மகள், 'கணவர் வீட்டிலிருந்தே பிரசவம் பார்த்துக் கொள்கிறேன்...' என சொல்லி, அங்கு சென்று விட்டாள்.
வீட்டில், நிறைமாத கர்ப்பிணி இருக்கும்போது, அவள் மனநிலை பாதிப்படையும்படி, குடும்ப சண்டையும், 'டிவி' தொடர்களுமா முக்கியம்.
பொறுப்பற்ற நடத்தைகளால் அவமானப்படும் இப்படிப்பட்டவர்கள், என்று திருந்துவரோ!
- எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
'சபாஷ்' அணுகுமுறை!
ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், இருக்கைகள் கிடைக்காதோர், நின்றபடி காத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில், காசாளர் இருக்கையிலிருந்து எழுந்த ஓட்டல் உரிமையாளர், வேட்டியை மடித்து கட்டியபடி, சப்ளையர்களுக்கு உதவியாக, 'ஆர்டர்' எடுத்து பரிமாறினார்; டேபிள் துடைப்பவர்களுக்கு உதவியாக, எச்சில் தட்டுகளை எடுத்தார்.
கூட்டம் குறைந்தது, இருக்கை கிடைத்து சாப்பிட்டு முடித்ததும், உரிமையாளரிடம் கேட்டேன்.
'இந்த நேரத்தில் தான் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று, ஓட்டல் தொழிலில் குறிப்பிட்ட நேரத்தை கூற முடியாது. திடீரென கூட்டம் வரும். அந்த நேரத்தில், முதலாளி வேலையை மட்டும் பார்த்தால், வியாபாரம் படுத்து விடும்.
'ஊழியர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றவும், வியாபாரம் பரபரப்பாக நடக்கவும், கொஞ்சம் கீழிறங்கி வந்தால் தான் நல்லது. மேலும், முதலாளியே, சப்ளையராகவும், கிளீனராகவும் வேலை பார்ப்பதால், தங்கள் பணியை பற்றிய தாழ்வு மனப்பான்மையின்றி அவர்களும் பணிபுரிவர்...' என்றார்.
ஓட்டல் உரிமையாளரின் அணுகுமுறைக்கு, 'சபாஷ்' போட்டு விட்டு வந்தேன்!
- எம். குரு, புதுச்சேரி.
பெற்றோர் கவனத்திற்கு...
சமீபத்தில், எங்கள் பகுதியில் உள்ள, 'பீட்சா' கடைக்கு சென்றிருந்தேன். 'பீட்சா ஆர்டர்' செய்து காத்திருந்தபோது, ஒரு சுவாரஸ்யம் கண்ணில் பட்டது.
சாப்பிடும் மேஜை மீது, பரமபதம் விளையாட்டு படம் வரையப்பட்டிருந்தது. தாயக் கட்டையும், சோழிகளும் கோப்பையில் இருந்தன.
'இங்கிலீஷ் மீடியம்' படிக்கும், மேற்கத்திய பாணியில் வாழும் ஒரு குடும்பம், குட்டீஸ்களுடன் வந்து அமர்ந்தது. 'இது என்ன...' என்று, கேட்டனர்.
அவர்களின் பாட்டி விவரிக்க, குழந்தைகள் சுவாரஸ்யமாகி, 'விளையாடுவோமா...' என்றன.
பாட்டி, நடுவராக இருந்து, சொல்லிக் கொடுக்க, பாம்பு கடித்து, கீழே இறங்கியபோது, 'ச்சூ' கொட்டியும், ஏணியில் ஏறியபோது, குதுாகலித்து, பரமபதத்தில் பரவசமடைந்தனர்.
நாமோ, பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்காமல், 'ஸ்மார்ட் போன்' வாங்கி கொடுத்து, 'பப்ஜி கேம்' விளையாடுவது தான் நாகரிகம், 'பேஷன்' என்கிறோம். தப்பு யார் மீது?
'ஆர்டர்' செய்த, 'பீட்சா' வந்து, சாப்பிட்ட பிறகும், அக்குழந்தைகள் விளையாட்டை நிறுத்தாமல் விளையாடியது, எனக்கு சந்தோஷமாக இருந்தது.
பெற்றோரே... நம் பாரம்பரியத்தை, பிற்போக்குத் தனம், 'ஓல்டு பேஷன்' என்று, நாமே ஒதுக்கி, நவீனத்தை மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் தவறை, இனி செய்யாது, திருத்திக் கொள்வோம்!
- மல்லிகா அன்பழகன், சென்னை.