PUBLISHED ON : செப் 25, 2022

சர்க்கரை பொங்கல்!
தேவையானவை: பச்சரிசி, பொடித்த வெல்லம் - தலா 2 கப், பால் - 8 கப், தண்ணீர் - 1 கப், ஏலக்காய் - 5, காய்ந்த திராட்சை, முந்திரி - தலா 10, நெய் - 100 கிராம், சர்க்கரை - 2 தேக்கரண்டி.
செய்முறை: பாலுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் கொதி வரும் சமயம் பச்சரிசியை களைந்து சேர்த்து அடி பிடிக்காமல் நன்கு கிளறவும். மற்றொரு பாத்திரத்தில், பொடித்த வெல்லம் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.பாலும், அரிசியும் சேர்ந்து கெட்டியாக வரும்போது, வெல்லக் கரைசலை கலந்து கெட்டியானதும் இறக்கவும். இறுதியாக, காய்ந்த திராட்சை, முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். மிக்சியில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு பொடித்து சேர்த்து கலந்து பரிமாறவும்.
புளியோதரை!
தேவையானவை: புளி - கால் கிலோ, சிவப்பு மிளகாய் - 10, பெருங்காயத் துாள், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி, வெல்லம் - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 500 மில்லி, நல்லெண்ணெய் - 50 மில்லி, மஞ்சள் துாள் - சிறிதளவு, கடுகு, உப்பு, கொத்தமல்லி - தேவையான அளவு.
பொடி செய்ய: கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி, மிளகு, சிவப்பு மிளகாய் - தலா 20, சீரகம், வெந்தயம் - தலா 1 தேக்கரண்டி, எள்ளு - 2 தேக்கரண்டி.
செய்முறை: பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். புளியை கெட்டியாக கரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளி கரைசலை ஊற்றி மஞ்சள் துாள், வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி மூடி வைக்கவும். பின்னர் இதனுடன், நல்லெண்ணெய், பொடித்த பொடியை சேர்த்து கலந்து இறக்கவும். குக்கரில் தேவையான அளவு சாதம் வடித்து, தயாரித்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து கொத்தமல்லி தழை துாவி கலந்து பரிமாறவும்.
கதம்ப சாதம்!
தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, நுால்கோல், பீட்ரூட், சவ்சவ், அவரை மற்றும் வாழைக்காய் - தலா 50 கிராம், முருங்கைக்காய் - 2, சாதம் - 3 கப், புளி - எலுமிச்சை அளவு, நெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, நெய், உப்பு, எண்ணெய் - சிறிதளவு.அரைக்க: கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி, தனியா, சீரகம் - தலா 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 6 மிளகு - 10, தேங்காய் - ஒரு மூடி.
செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வேக வைத்துள்ள காய்கறிகளுடன், புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், அரைத்த பொடி, உப்பு, சாதம் ஆகியவற்றை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை வைத்திருந்து இறக்கி, நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து பரிமாறவும்.
கற்கண்டு பாயசம்!
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், பொடித்த கற்கண்டு - 150 கிராம், தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி, கசகசா - 2 தேக்கரண்டி, ஏலக்காய் - 3, திராட்சை, முந்திரி பருப்பு - தலா 10, நெய் - 2 தேக்கரண்டி, பால் - 100 மில்லி.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன், கழுவிய ஜவ்வரிசியை சேர்த்து, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.பின்னர் தேங்காய் துருவல், கசகசா, ஏலக்காயை மிக்சியில் பொடித்து சேர்த்து, நன்றாக கொதி வந்ததும் இறக்கி, பால், பொடித்த கற்கண்டு சேர்த்து கலந்துகொள்ளவும். இறுதியாக, முந்திரி, திராட்சை, ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.

