sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 25, 2022

Google News

PUBLISHED ON : செப் 25, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு —



நான், 78 வயது முதியவள். எனக்கு, 19 வயதில் திருமணம் நடந்தது. பெற்றோருக்கு நாங்கள் மொத்தம் ஏழு குழந்தைகள். ஒரு அண்ணன், இரண்டு தம்பி, மூன்று தங்கையர். என் பாட்டியோடு மொத்தம், 10 பேர் உள்ள குடும்பம்.துவக்கப்பள்ளி ஆசிரியர், அப்பா. அவர் ஒருவர் சம்பளத்தில், 10 பேர் கொண்ட குடும்பம் தள்ளாடியது.புகுந்த வீடு சென்ற என்னிடமிருந்து, பிறந்த வீடு எதிர்பார்த்தது. கணவர் மற்றும் மாமியார் சம்பாத்தியத்திலிருந்து எடுத்து பிறந்த வீட்டின் வறுமையை போக்க, நிறைய பண உதவி செய்துள்ளேன்.எல்லாரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தார், அப்பா. இன்று, என் உடன் பிறந்த எல்லாரும் பேரன் - பேத்திகளுடன் நன்றாக உள்ளனர். ஆனால், நன்றி மட்டும் இல்லை.

திருமணம் செய்ததும், அண்ணன், தம்பியர் மூவரும் தனி தனியாக சென்று விட்டனர். பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு, என் தோளில் ஏறி, அவர்கள் காலமாகும் வரை பராமரித்தேன்.என் அப்பா, 1992ல் காலமானார். அதற்கு பின், உடன் பிறந்தவர்கள், அப்பாவின் பழைய ஓட்டு வீட்டை பாகம் பிரிக்க வந்தனர்.

எனக்கு திருமணம் ஆன, 1963ல் இருந்து, அப்பா காலமான, 1992ம் ஆண்டு வரை, என் பிறந்த வீட்டிற்கு நான் கொடுத்தவற்றை, கணக்கு போட்டு காட்டினார், கணவர். 5 லட்ச ரூபாய்க்கு மேல் வந்தது.

என் உடன் பிறந்தவர்களிடம், அந்த கணக்கை காட்டி, 'அப்பா வீட்டின் மதிப்பு, 2 லட்ச ரூபாய் தான் வருகிறது. நான், 5 லட்சம் கொடுத்திருக்கிறேன். அதனால், அப்பா வீடு எனக்கு தான். உங்களுக்கு பங்கு எதுவும் கொடுக்க முடியாது...' என்று கூறி விட்டேன்.

அவர்கள் அதை ஏற்காததால், பாகப்பிரிவினை பேச்சு தொடர்கிறது. அதனால், அன்பு சகோதரி, என் மூன்று வினாக்களுக்கு விளக்கம் அளித்து, வழிகாட்டுமாறு கேட்கிறேன்...

1. என் அப்பா பெயரில் வீடு உள்ளது. 30 ஆண்டுகளாக வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் எல்லாம் செலுத்தி, என் பொறுப்பில் வைத்துள்ளேன். 30 ஆண்டுகள் ஆனதால், உடன் பிறந்தவர்களை ஒதுக்கி விட்டு, வீட்டை என் பெயருக்கு மாற்ற முடியுமா, சட்டத்தில் அதற்கு வழி உள்ளதா?

2. வீட்டின் மதிப்பு, 1992ல், 2 லட்சம். 1992 வரை, பிறந்த வீட்டிற்கு நான் கொடுத்தது, 5 லட்சம். அதனால், வீடு எனக்கு சொந்தம் என்று வாதிட முடியுமா, நீதிமன்றம் என் வாதத்தை ஏற்குமா?3. அண்ணன், தம்பியர் மூவரும், பெற்றோரை பேணிக் காக்கும் பொறுப்பை தட்டிக்கழித்து, என் தலையில் கட்டி விட்டு ஓடிப்போயினர். என் பெற்றோரை காலமாகும் வரை பாதுகாத்தேன். அதில் எனக்கு எல்லா வகையிலும் சுமை கூடி துன்பப்பட்டேன். அதற்காக, அண்ணன், தம்பியரிடம் இழப்பீடு கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா?

நான் குழம்பிப் போய் உள்ளேன். அன்பு கூர்ந்து எனக்கு தெளிவான ஆலோசனை வழங்குங்கள்.

இப்படிக்கு

விஜயா.


அன்புள்ள சகோதரிக்கு

உங்களுக்கு மகன், மகள், பேரன், பேத்தி உள்ளனரா என்பது பற்றி, உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. உங்களுக்கு குழந்தை செல்வம் இல்லை என்றே யூகிக்கிறேன். என் யூகிப்பு உண்மையாக இருந்தால், யாருக்காக அப்பாவின் முழு வீடும் உங்களுக்கு சேர வேண்டும் என பேராசைபடுவீர்கள்?

புகுந்த வீட்டின் பணத்தை எடுத்து, பிறந்த வீட்டு வறுமையை போக்கினீர்கள். உடன் பிறப்புகள் புறக்கணித்தாலும், பெற்றோரை அவர்களின் ஆயுட்காலம் முழுக்க பராமரித்துள்ளீர். 30 ஆண்டுகளாக அனைத்து வரிகளையும் கட்டி, வீட்டை பாதுகாத்துள்ளீர்.

எல்லாம் சரி, பெற்ற தாய், தன் குழந்தைக்கு கொடுத்த தாய்பாலுக்கு பணக்கணக்கு பார்ப்பாளா? பெற்றோருக்கு செய்த பணிவிடை மற்றும் உடன்பிறந்தோருக்கு செய்த உதவிகளுக்கு ரூபாய் கணக்கு எழுதலாமா?

ஏறக்குறைய, 60 ஆண்டுகள், கணவருடன் இல்லற வாழ்க்கை நடத்தி விட்டீர்கள். இன்னும் அதிகபட்சம், எவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்போம் என்று தெரியாது. வீட்டு விஷயத்தை மனிதாபிமானத்தோடும், சகோதர பாசத்தோடும் அணுகுங்கள். நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கு வருவோம்...

1. வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் எல்லாம் உங்கள் அப்பாவின் பெயரில் தானே கட்டினீர்கள்? வரி கட்டியதற்கான பில்கள், ஐந்து லட்சம் உதவி செய்ததற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள், உரிமையியல் வழக்கு தொடரலாம்.உங்களுக்கான பங்கை கூடுதலாய் கேட்கலாமே தவிர, முழு வீட்டுக்கும் உரிமைகோர முடியாது. உங்கள் அப்பா உயிரோடு இருக்கும் போது, நீங்கள் அவருக்கும் உடன் பிறந்தோருக்கும் செய்யும் உதவிகளை கண்கூடாக பார்த்திருப்பாரே...

அவரே தன் வீட்டை தானமாக உங்களுக்கு எழுதி வைத்து போயிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? தவிர, உரிமையியல் வழக்கு போட்டால், அது, 20 ஆண்டுகள், சிந்துபாத் கதை போல இழுக்கும்.

2. கடந்த, 1992ல், அப்பாவின் பழைய ஓட்டு வீட்டின் மதிப்பு, 2 லட்சம். இப்போது அந்த ஓட்டு வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டலாமே. அப்பாவின் ஓட்டு வீட்டின் தற்போதைய மதிப்பு, 50 லட்சம் இருக்கலாம்.

நீங்கள் கூண்டுக்குள் வளர்க்கும் கிளிபிள்ளை அல்ல, நீதிமன்றம். நீங்கள் சொல்வதை எல்லாம் திருப்பிச் சொல்ல. வீட்டை அபகரிக்கத்தான் சிறுகசிறுக பண உதவி செய்து கணக்கு நோட்டில் பதிந்தீர்களோ என்ற சந்தேகம், எனக்கே எட்டி பார்க்கிறது. இதையே நீதிமன்றமும் கேட்கும்.3. ஏழு பிள்ளைகளில் நீங்கள் மட்டும், உங்கள் பெற்றோரை பார்த்து கொண்டீர்கள். அத்துடன் விஷயம் முடிந்தது. பெற்றோரை பார்த்துக் கொண்ட உங்களுக்கு அவர்களை பார்த்துக் கொள்ளாத அண்ணன், தம்பி இழப்பீடு தரவேண்டும் என, நீங்கள் கோருவது அபத்தமானது; சிறுபிள்ளை தனமானது.

பெற்றோரை புறக்கணித்த உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு தகுந்த தண்டனையை இறைவன் தருவான் என, நிம்மதிபடுங்கள்.ஒரு குழப்பமும் வேண்டாம். வழக்கறிஞர் வைத்து அப்பாவின் வீட்டை விற்பனை செய்யுங்கள். கிடைக்கும் பணத்தை ஏழு பங்குகளாக பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடன்பிறப்புகள் பிரியப்பட்டால், பங்கை எட்டாய் பிரித்து, இரண்டு பங்கை உங்களுக்கு தரட்டும்.

ஐந்து லட்சம் கணக்கு எழுதிய நோட்டை கிழித்து போடுங்கள். மீதி வாழ்நாளில் உடன்பிறந்தோரிடம் இனிமையான உறவுமுறையை பேணுங்கள்.என் யூகிப்பு தவறாக இருந்து உங்களுக்கு மகன், மகளும், பேரன், பேத்திகளும் இருந்தால், மகன், மகளுக்கு உங்கள் பங்கை பிரித்துக் கொடுங்கள். மண்ணும், செங்கல்லும், ஓடுகளும் கொண்ட ஒரு பழைய வீடா, 80 ஆண்டு கால சகோதர பாசத்தை துண்டாட வேண்டும்? நுாறாண்டு காலம் நீங்களும், உங்கள் கணவரும் வாழ்ந்து, புது சாதனை படையுங்கள்.

— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us