
வேலை நிமித்தமாக அவசரமாக போய் கொண்டிருந்தேன். அந்த பரபரப்பில், யாரோ என்னை அழைத்து, பின் தொடர்ந்து வருவதை, என்னால் கவனிக்க முடியவில்லை. எதிரில் வந்த ஒருவர், 'சார், உங்களை ஒருத்தர் கூப்பிடுறார்...' என்று சொல்லவும், நின்று திரும்பிப் பார்த்தேன். அதற்குள் என்னை நெருங்கி விட்ட அவன், என் கைகளை பிடித்துக் கொண்டான்...
''எப்படி இருக்கீங்க அண்ணா,'' என்றவனை அடையாளம் கண்டுகொள்ள சில நொடிகள் பிடித்தது. மிடுக்காக, களையாக நின்ற பிரபுவை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ''நல்லா இருக்கியாப்பா?''
''நல்லா இருக்கேன். உங்களை பார்க்கவே முடியலை.''
''சென்னை சமுத்திரத்திலே வந்து சங்கமமாயிட்டேன். என்னையே என்னால் பார்க்க முடியல; இதுல மத்தவங்களை எங்கே பார்க்கறது. ஊர்ல அம்மா, அக்கா நல்லா இருக்காங்களா, உனக்கு படிப்பு முடிஞ்சுதா?'' என்று கேட்டேன்.
''நாங்கெல்லாம், இப்ப சென்னையில தான் இருக்கோம். கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமே,'' என்று பக்கத்து ஓட்டலுக்கு இழுத்துப் போனான். அவசர வேலையை ஒத்தி வைத்து, ஆர்வமுடன் அவனைப் பின் தொடர்ந்தேன்.
பிரபுவுக்கும், எனக்கும் வயது வித்தியாசம் உண்டு என்றாலும், சிறுவயதில் நாங்கள் விளையாட்டு தோழர்கள். கபடியாகட்டும், கேரமாகட்டும், எந்த விளையாட்டிலும், அவன் என் பக்கம் தான் இருப்பான். வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால், எந்த பேதமுமில்லாமல் எல்லாரிடமும் நன்றாக பழகுவான். அதனால், ஊரில் அனைவருக்கும் அவனையும், அவன் குடும்பத்தாரையும் பிடிக்கும். அவன் அப்பா ரைஸ் மில் வைத்திருந்தார். ஒரே அக்கா. அழகு, பாந்தம், அதிர்ந்து நடக்க மாட்டாள். தேவைக்கு அதிகமாக பேச மாட்டாள். பள்ளி இறுதி வரை படித்து நின்று விட்டிருந்தாள். அவளுக்கு கல்யாண பேச்சு எடுத்த போது தான், அப்பா மாரடைப்பில் அகால மரணமடைந்தார். குடும்பம் திகைத்தது. நல்ல வேளையாக, அவன் உறவுக்காரர் ஆதரவு தர முன் வந்தார்.
'வீடு, நிலம் எல்லாம் நான் பராமரிக்கிறேன். செண்பகா கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன். நீ படிப்பை தொடரு...' என்று சென்னைக்கு, பிரபுவை வழியனுப்பி விட்டார்.
சொத்து பராமரிப்பில் ஏதோ வில்லங்கம். ஒருமுறை பிரபுவுக்கும், அவருக்கும் தகராறு வந்தது. அவர் உடனே தன் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டார். செண்பகாவின் கல்யாண ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டதாக கேள்வி.
'ஏதோ, சின்ன பையன், விவரம் இல்லாமல் கேட்டான்றதுக்காக கல்யாணத்தையே நிறுத்தணுமா. ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நின்னு போனால், மீண்டும் அமையறது எத்தனை கஷ்டம்! பெரியவங்க நீங்க பொறுப்பா கல்யாணம் முடியுற வரைக்குமாவது இருந்திருக்கலாமே...' என்று ஊரே சொல்லிப் பார்த்தும், பிடிவாதமாக இருந்துவிட, பிரபு தானே மாப்பிள்ளை பார்த்து, செலவழித்து, அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்தான். ஆனால், செண்பகா ஆறாம் மாதத்திலேயே விதவையாகி, கர்ப்பிணியாக பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள். அது பெரிய சோகம் என்றால், 'சின்ன புள்ள வெள்ளாமை, வீடு வந்து சேராதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...' என்று மனிதாபிமானம் இல்லாமல், உறவுக்காரர் கொக்கரித்தது இன்னும் வேதனை. அந்த பாதிப்பில், பிரபுவுக்கு மனநலன் குறைந்ததாக கூட கேள்வி.
பிரபுவை பார்க்க வேண்டும் என்று மனம் துடிக்கும். என்னால், அவன் நிலைமையை உணர முடிந்தது. அவன் இடத்தில் என்னை வைத்துப் பார்த்து, அந்த வேதனையை அனுபவித்திருக்கிறேன். பிஞ்சு குழந்தையும், கையுமா, சூன்யத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கும் செண்பகாவை, ஒரு முறை பார்த்து ஆறுதல் சொல்லக் கூட முடியாமல் அழுதிருக்கிறேன். பிரபு நிலை குலைந்து போயிருந்தான். கடைசியாக அவனைப் பார்த்தபோது, அவன் சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது.
'மோசடி... எல்லாம், அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தும், வெளியில் காட்டிக்காம இருந்திருக்காங்க. ஏதாவது கேட்டால் அவர்கள் கை விட்டு விடுவார்களோன்னு பயம். என்கிட்டயும் மறைச்சுட்டாங்க. அதையும் கடந்து ஏதாவது கேட்டால், உங்க பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் ஆக வேண்டாமான்னு கேட்டு வாயை அடைச்சுட்டாங்க. விவகாரம் என் பார்வைக்கு வந்த போது, என்னால தாங்க முடியலைண்ணா. சத்தம் போட்டுட்டேன். அந்த கண நேர கோபத்துக்கு, நான் கொடுத்த விலை அதிகம்...
'இன்னைக்கு என் அக்கா விதவையா உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்க சகிக்கலே.அதை விட, அம்மாவின் நிலை. கடவுளே... நான் ஏன் அவர்களை கோவிச்சுக்கிட்டேன். அம்மாவை போல, கொஞ்சம் நாள் அக்கா கல்யாணம் வரைக்குமாவது வாய் மூடி இருந்திருக்கக் கூடாதா...
'அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையை கட்டியிருந்தால் அக்கா சுகமா, சுமங்கலியா இருந்திருப்பாளே... அந்த சொத்தை காப்பாத்த போய், அக்காவின் வாழ்க்கையை அல்லவா, பறி கொடுக்க வேண்டியிருந்தது. குற்ற உணர்வு என்னை வாட்டுதுண்ணா...' என்று கண் கலங்கினான்.
'அதோடில்லாமல் இப்போ புது குழப்பம்...'
'சொல்லு' என்பது போல் பார்த்தேன்.
'அக்காவுக்கு, இன்னொரு கல்யாணம் செய்து வைக்க சொல்லி அம்மா வற்புறுத்துறாங்க. எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கு. அக்கா வேண்டாம்ன்னு சொன்னாலும், 'எத்தனை நாளைக்கு, இப்படி தனி மரமா இருக்க முடியும். நாளைக்கு உன் தம்பிக்கு கல்யாணமாகி, இந்த வீட்டுக்கு ஒருத்தி வந்துவிட்டால், உன் நிலைமை என்ன, வாழ வேண்டிய வயசுடி, இன்னொரு கல்யாணம் செய்துக்க'ன்னு அம்மா எடுத்து சொல்லிட்டு இருக்காங்க...'
'அதுவும் சரிதான்...'
'ஆனால், அண்ணா, அதை எப்படி சொல்றதுன்னு புரியல. இன்னொரு மாப்பிள்ளையான்னு... நினைக்கும்போதே, பயம் மனசை கவ்வுது. மனசுல என்ன என்னமோ விபரீத எண்ணங்கள் ஓடுது. ஒரு முறை பட்ட அடியில் நடுங்கிப் போயிருக்கிறேன். இன்னொரு அடியை என்னால தாங்க முடியாதுண்ணா...' என்று நடுக்கத்துடன், அவன் வார்த்தைகள் வந்து விழுந்த போது, தான் நான் அதிர்ந்தேன்.
'ஏண்டா பிரபு, ஏன் அப்படி நினைக்கிற. ஒரு முறை தப்பாயிட்டால், இன்னொரு முறையும் அப்படியே ஆகும்ன்னு ஏன் பயப்படறே?'
'தைரியம் போச்சுண்ணா... யார் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், அந்த அடி மனசுல பதிந்திருக்கிற பயத்திலிருந்து மீள முடியல. அக்கா இன்னொரு கல்யாணம் செய்து, இன்னொரு குழந்தையோடு மீண்டும் விதவையாகி வர்றது போல, ஒரு காட்சி. கடவுளே... சொல்ல முடியலைண்ணா...' என்று அழுதான்.
'நான் சைக்யாட்ரிஸ்ட்டை கன்சல்ட் செய்து, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வர்றேண்ணா. யாருக்கும் தெரியாது. கவுன்சிலிங்கும், மருந்தும் எடுத்தும் நாளுக்கும் நாள் குழப்பம் அதிகமாகுது. டாக்டர் திட்றார். அப் நார்மலுக்கு போய்ட்டால், இன்னும் கஷ்டமாயிடும்ன்னு டாக்டர் எச்சரிக்கிறார்...' என்று, கைகளை விரித்தான்.
அவன் பயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னொரு சோகம் வந்து விடுமோ என்ற அச்சம், அவனை ஆட்டிப் படைக்கிறது. சைக்யாட்ரிஸ்டின் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் திமிறுகிறது. நிலைமை மோசம் தான். என்ன சொல்லி இவனை தேற்ற முடியும்.
'ஏன் பிரபு... உன் செலக்ஷன் மீது தானே உனக்கு பயம். வேறு யாராவது மாப்பிள்ளை பார்க்கட்டுமே... பொறுப்பை உன் அம்மாவிடமோ வேறு உறவுக்காரர்களிடமோ விட்டுவிடு...'
'மத்தவங்க பார்த்தாலும், அப்படி ஆகாதுன்னு என்ன நிச்சயம்...' என்று கேட்டு, திடுக்கிட வைத்தான்.
யோசித்தேன். ஒன்று தோன்றியது.
'என் மேல் நம்பிக்கை இருக்கா பிரபு. நான் சொன்னால் கேட்பியா?'
'நிச்சயமா...'
'அப்படியானால் ஒண்ணு செய். உன் அக்கா கல்யாண விவகாரத்தை அப்படியே, 'ட்ராப்' செய்திடு. புரியுதா... அவளுக்கு இன்னொரு கல்யாணங்கிற பேச்சே இப்ப வேணாம். ஸ்கூல் பைனல் படிச்சிருக்கிற அவங்களை மேற்கொண்டு படிக்கவை. இன்னொரு கல்யாணத்துக்கு செய்யுற செலவை, அவங்க படிப்புக்கு செலவு செய். கல்யாணம், உன் சந்தேகப்படி தப்பாக போக வாய்ப்பிருக்கு. ஆனால், அவங்களுக்கு கொடுக்கிற கல்வி, ஒரு போதும் தப்பாகாது. மேலும், அது தவறுகளையெல்லாம் சரி செய்யும். நீயும் நிச்சலனமா இருக்கலாம். இதை அம்மாவிடமும், அக்காவிடமும் சொல்லி சமாதானம் செய்து, காலேஜில் சேர்க்கும் வழியை பார்...' என்றேன்.
'யோசிக்கிறேன்...' என்றான்.
எனக்கிருந்த, ஒரே உறவான அம்மா காலமாகி விட, இருந்த வீட்டை விற்று விட்டு இங்கு வந்துவிட்ட பின், எனக்கு ஊருக்கு போக வேலையும் இல்லை; நேரமும் இல்லை என்றாகிவிட்டது.
எத்தனையோ வருடங்கள், உருண்டோடி விட்ட நிலையில், இப்போது தான் பிரபுவின் தரிசனம்.
''சொல்லு பிரபு,'' என்றேன் காபியை சுவைத்தபடி.
''நீங்க சொன்னது தீர்க்க தரிசனம்ணா. அந்த வார்த்தை மந்திரம் போல் செயல்பட்டு, எங்கள் குடும்பத்தை தலைகீழா மாத்திடுச்சு...
''ஆமாம் அண்ணா... நாம கடைசியா சந்தித்த போது, நீங்க சொன்ன அறிவுரைப்படி, வீட்டில் பேசினேன். அக்காவுக்கு முதல்ல, அந்த யோசனை பிடிச்சிருந்தது. மேற்கொண்டு படிக்கிறேன்னாங்க. மேற்படிப்புக்கு சென்னை வர வேண்டியிருந்தது. கொஞ்சம் சொத்துக்களை வித்து, சென்னைக்கு வந்துட்டோம். அக்காவை காலேஜில் சேர்த்தோம். அம்மா, குழந்தையை கவனிச்சுகிட்டாங்க. நானும், என் படிப்பை தொடர்ந்தேன். அக்கா கம்யூட்டர் சயின்ஸ் படிச்சதும், ஐ.டி., கம்ப்பெனியில் வேலை கிடைச்சது. அங்கே வேலை செய்த சுரேஷ் என்பவர், அக்காவின் நிலைமை தெரிஞ்சும், கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார். அவர் குடும்பத்தாருக்கும் சம்மதம். ஆனால், கல்யாணத்தை எளிமையா தான் செய்தோம். அக்கா நல்லா இருக்கா. இப்ப இரண்டாவது குழந்தை பிறந்திருக்கு,'' என்றான் மலர்ச்சியோடு.
''கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உனக்கு படிப்பு முடிஞ்சுதா?''
''வேலையில் இருக்கேன்.''
''வெரிகுட்.அப்படியே நீயும், ஒரு கல்யாணத்தை செய்துக்க வேண்டியது தானே...'' என்றேன். வெட்கமாக தலை கவிழ்த்து, ''முடிஞ்சிருச்சி... போன மாதம். கூட வேலை பார்த்த பொண்ணைத் தான் கட்டிக்கிட்டேன்''
''யாராயிருந்தால் என்ன, நல்லா இருக்கணும் அவ்வளவுதான்.''
''அத்தனைக்கும் காரணம் உங்க ஆலோசனை. ரொம்ப கடமை பட்டிருக்கேன். எப்ப அண்ணா எங்க வீட்டுக்கு வர்றிங்க? எல்லாரும் ஆவலா இருக்கோம்.''
''எப்ப வேணாலும் வரலாம். ஆனா, இந்த கடமை, உடமை வார்த்தையெல்லாம் போட்டு, காபரா செய்யாதே. நான் ஏதோ முனிவனோ, முக்காலம் தெரிஞ்சவனோ அல்ல. நான் சொன்னது அப்படியே பலிக்கறதுக்கு. அந்த நேரம் உன்னை சமாதானப்படுத்த சொல்லி வச்சேன். அதை நீ நம்பிக்கையோடு, செய்த பாரு... அங்க வந்தது தான் வெற்றி. எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு. ஒரு நாள் வர்றேன்,'' என்று முகவரியை வாங்கிக் கொண்டு, என் பயணத்தை தொடர்ந்தேன்.
நடந்து தான் போனேன். ஆனால், ஏதோ மிதக்கிற மாதிரியே உணர்வு. பிரபு குடும்பத்தாருக்கு, ஒரு விடிவு ஏற்பட்ட ஆனந்தம். அதுவும் என்னால் என்று, பிரபு சொன்னதில் உண்டான பெருமிதம். 'அப்படி யெல்லாம் இல்லை' என்று பிரபுவிடம் சொன்னாலும், மனம் அந்த, 'கிரெடிட்'டை விட்டுத் தர விரும்பவில்லை போலிருந்தது.
என்னையும் அறியாமல் எதிரில் வந்த யாரோ ஒரு ஆளை பார்த்து, 'பெண் குழந்தையை படிக்க வைங்க சார்..' என்றேன். அவரோ, எதுவும் புரியாமல், திரும்பி, திரும்பி என்னை பார்த்தபடியே சென்றார்.
***
எஸ். பாலச்சந்திரன்