
ஒருதலைக் காதலர்களே...
* ஒரு தலைக் காதலர்களே வாருங்கள்
உட்கார்ந்து பேசுவோம்
இனியும் வேண்டாம்
இன்னொரு படுகொலை!
* உயிரும் உயிரும்
விளையாட வேண்டிய களம்
பிறர் உயிரெடுக்குமாறு
விளையாடுவது தகுமோ!
* ஏற்றுக் கொள்ளா விட்டால்
அவளைத் தூற்றாதே
ஏடு அதை எடு
கற்பனையோடு நனை - அதை
கவிதையாகப் புனை!
* காதலில் தோற்பவருக்கு
எளிதில் வசமாகும் கவிதை
முயன்று பார்...
காதல் தோல்வியும்
கவிதை தொழிலுக்கோர் முதலீடு...
நிறைய கவிஞர்கள் சான்று!
* எடுக்க நினைப்பதிலும்
அடைய நினைப்பதிலும்
இல்லை காதல்...
கொடுக்க நினைப்பதில் தான்
மிடுக்குடன் நிற்கும் காதல்!
* உன் காதல்
அன்பின் ஆணிவேராய்
இருந்திருந்தால் நிச்சயம்
அது, 'ஆசிட்' தூக்காது!
* நா தழு தழுத்தாலும்
விழியில் நீர் பிறந்தாலும்
வலியினை மறைத்து
அவளை வாழி, வாழி என
அர்ச்சனைப் பூக்களை
அள்ளித் தூவும்!
* காதலுக்காக
உயிரைக் கொடுத்தலே மரபு!
உயிரை எடுத்தல் மரபன்று...
அது காதலும் அன்று!
* 'உன்னை கொடு, என்னைத் தருவேன்'
இது வியாபாரம்...
'எனக்கு கிடைக்காதது
எவருக்கும் கிடைக்கக் கூடாது'
இது குரோதத்தின் உச்சம்...
இதில் எங்கிருக்கிறது காதல்!
* காதலி...
காதலி மறுத்தாலும்
அவளைத் தொந்தரவு செய்யாமல்
உன் காதலைக் காதலி!
* இரு தலைக் காதலில்
காதலியுடன் வாழலாம்
ஒரு போகியாய்...
ஒரு தலைக் காதலில்
காதலியை வாழ்த்தலாம்
ஒரு யோகியாய்!
* இப்போது
ஒரு தலைக் காதல் மீதான
எல்லாரின் அலட்சியக் குறியீட்டையும்
அற்புதமான ஒரு
வியப்புக்குறியாய் மாற்றலாம்!
— த.மலைமன்னன், புனல்வேலி.