
சிறியதாக இருந்தாலும், கச்சிதமாக, அழகாக இருந்தது வீடு. கல்யாணமாகி, புதுக் குடித்தனம் வந்திருக்கும் மகள் வீட்டிற்கு வந்திருந்த யமுனா, அடுப்படியில், டப்பாக்களில் மளிகை சாமான்களை கொட்டி, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில், படங்களை மாட்டிக் கொண்டிருந்த ராகவன், ''யமுனா... இங்கே கொஞ்சம் வா,'' என்று மனைவியை அழைத்தார்.
''என்னை எதுக்கு கூப்பிடறீங்க... நானும் அடுப்படியில் வேலையாத் தான் இருக்கேன்,'' என்று சொல்லியபடி வெளியில் வர, ''சம்பந்தி எப்ப வர்றதா சொன்னாங்க...''என்று கேட்டார்.
''மத்தியானத்துக்குள் வந்துடுவோம்ன்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க. ஸ்வேதாவும், மாப்பிள்ளையும் வெளியிலே போனவங்க, இன்னும் வரலயே... அவங்க வர்றதுக்குள்ள இவங்க வந்துட்டா நல்லா இருக்கும்.''
''அதனாலென்ன... அவங்க வர்றபடி வரட்டும்.''
''இல்லங்க... சம்பந்தியம்மா எப்படிப்பட்டவங்க, அவங்க குணம் எப்படின்னு இன்னும் தெரியல. கல்யாண வீட்டிலேயே, எல்லா விஷயமும் ஒழுங்காக நடக்கணும்ன்னு, எல்லாரையும் அதிகாரம் செய்துகிட்டு இருந்தாங்க. இப்ப, அவங்க வர்ற நேரத்தில், மருமகள் வீட்டில இல்லன்னா ஏதும் சொல்ல மாட்டாங்களா...'' என்றவளுக்கு, கல்யாணத்தின் போது, பெரியம்மா சொன்னது நினைவுக்கு வந்தது...
'யமுனா... நம்ம ஸ்வேதாவோட மாமியார், கொஞ்சம் கெடுபிடியா தெரியுது. புருஷன், புள்ளை எல்லாருமே, அவ சொல்றதை கேட்கற மாதிரி தான் வச்சிருக்கா. எதுக்கும் ஆரம்பத்திலேயே உன் மகளுக்கு சொல்லி வை. வளைஞ்சு கொடுத்துப் போக ஆரம்பிச்சா, நாளைக்கு, இவ சுதந்தரமா இருக்க முடியாது. ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்து வச்சிருக்கே... அதான் மனசுல பட்டதை சொல்றேன்...' என்று சொன்னது,
இப்போது மனதில், ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது.
யமுனா டிபன் செய்து கொண்டிருக்க, அம்மாவுக்கு துணையாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
குளித்து, சாமி கும்பிட்டு சமையலறைக்கு வந்த சாரதா, ''ஸ்வேதா... நீ எழுந்திரு; போயி உன் வீட்டுக்காரருக்கு என்ன வேணும்ன்னு கவனி. நானும், உங்க அம்மாவும் அடுப்படி வேலைகளைப் பாத்துக்கிறோம். நீ இப்ப சிரமப்பட வேணாம். நீயும், உன் புருஷனுமா இருக்கும்போது, அவனுக்கு பிடிச்சதை செஞ்சு கொடு, சரியா...'' என்று புன்னகையுடன் மருமகளிடம் சொன்னாள்.
ஸ்வேதா எழுந்து ஹாலுக்கு சென்றாள்.
''சம்பந்தி... நீங்களும் ஹாலில் போய் உட்காருங்க; பெரிசா ஒண்ணும் வேலை இல்ல. நம்ப ஆறு பேருக்குத் தானே... நானே செஞ்சுடுவேன்,'' என்றாள் யமுனா.
''உங்கள மாதிரி எனக்கும் பொறுப்பு இருக்கு இல்லயா... நானும் சேர்ந்து செய்யறேன். சின்னஞ்சிறிசுக ஏதாவது பேசிட்டு இருக்கட்டும். ஸ்வேதாவை கூப்பிடாதீங்க...'' என்றாள் சாரதா.
'பரவாயில்லயே... இவ்வளவு தூரம் மருமகளுக்கு பரிந்து பேசுகிறாளே... சமையலிலும் கூடமாட உதவி செய்கிறாள். பார்க்க நல்ல குணமாகத் தான் இருக்கு...' என மனதில் நினைத்தாள் யமுனா.
''கல்யாணத்துக்கு நிறைய லீவு எடுத்துட்டதால, அவருக்கு ஆபீசில லீவு கிடைக்கல. நாங்க நாளைக்கு கிளம்பணும். நீங்க ஒரு வாரம் மகளோடு இருந்து, அவளுக்கு எல்லாம் பழக்கிக் கொடுத்துட்டு போங்க,'' என்றாள் சாரதா.
''இல்ல சம்பந்தி. நாங்களும் ரெண்டு நாளுல கிளம்பிடுவோம்; ஸ்வேதாவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேன். சமையலும் நல்லாத் தெரியும். குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, நல்லபடியாக எல்லாத்தையும் கவனிச்சுப்பான்னு நினைக்கிறேன்,'' என்றாள் சிறு கவலையுடன் யமுனா.
''நீங்க கவலைப்பட வேணாம்; என் மகனும், ஸ்வேதாவுக்கு எல்லா விதத்திலும் உதவியா இருப்பான்; ரெண்டு பேரும் சந்தோஷமாக குடித்தனம் நடத்தட்டும்,'' என்றாள் யமுனா.
அதற்குள் ஸ்வேதா அங்கு வர, ''ஸ்வேதா இங்கே வாம்மா...'' கூப்பிட்ட சாரதா, அருகிலிருந்த புதுப்புடவையை அவளிடம் கொடுத்து, ''இதைக் கட்டிக்கிட்டு, உன் கணவனோட சினிமாவுக்குப் போயிட்டு வா,'' என்றாள்.
''வேணாம் அத்தை... நீங்க, நாளைக்கு ஊருக்குப் போறதா சொல்றீங்க. அதனால, இன்னைக்கு உங்களோடு வீட்டிலேயே இருக்கோம்,'' என்றாள் ஸ்வேதா.
''நான் என்ன விருந்தாளியா... உங்க மாமாவுக்கு லீவு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி வருவேன்; நீ போய்ட்டு வாம்மா,'' மருமகளை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் சாரதா.
மாலையில், யமுனாவின் கணவனும், சாரதாவின் கணவனும் வாக்கிங் சென்றிருக்க, வீட்டில், யமுனாவும், சாரதாவும் மட்டும் இருந்தனர்.
பூஜை அறையில் விளக்கேற்றி, சாமி கும்பிட்ட யமுனா, சூடத் தட்டுடன் வெளிவந்து, சாரதாவிடம் ஆரத்தியைக் காண்பிக்க, தொட்டுக் கும்பிட்டவள், ''யமுனா... தீபத் தட்டை வச்சுட்டு வாங்க; உங்ககிட்ட சில விஷயங்கள் மனசுவிட்டுப் பேசணும். நாம் ரெண்டு பேர் தனியா இருக்கோம். இது மாதிரி சந்தர்ப்பம் அமையாது,'' என்றாள்.
முதன் முறையாக, தன்னை உரிமையுடன் பேர் சொல்லி அழைத்து பேசும் சம்பந்தியை, ஆச்சரியமாகப் பார்த்தபடி, 'என்ன சொல்லப் போறாளோ...' என்று நினைத்தவளாக, அவளிடம் வந்து அமர்ந்தாள்.
''யமுனா... நீங்களும் என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்; நாம் ரெண்டு பேரும் சகோதரிகள் மாதிரி தான். இது, நமக்கு, நம் பிள்ளைகளால் கிடைச்ச புது பந்தம். இந்த உறவை, அன்பான பரிமாற்றத்தால், உணர்வுபூர்வமானதாக நாம தான் மாத்தணும்,'' என்றாள் சாரதா.
பீடிகையுடன் பேசும் அவளை, அமைதியாக பார்த்தபடி இருந்தாள் யமுனா.
''நம்ப குழந்தைகள் ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கணும். அவங்க வாழ்க்கையில் எந்தவித பிரச்னைகளும், நெருடல்களும் இல்லாம, அன்னியோன்யமாக வாழணுங்கிறது தான் நம்ப பிரார்த்தனை. அதற்கு முதற்படியை நாம தான் எடுத்து வைக்கணும்.
''என்ன... நான் சொல்றது உங்களுக்கு புரியலயா... புதுசா கல்யாணமான கணவன், மனைவிக்குள் பிரச்னை வர்றதுக்கு யார் தெரியுமா காரணம்... அவங்க பெத்தவங்கதான். தேவையில்லாம பெண்ணோட மனசில, மாமியார ஒரு விரோதி மாதிரி பாக்க வைச்சு, சிறு சிறு விஷயங்களை, மகளிடம் பூதாகரமாகப் பெரிதுபடுத்தி சொல்லி, அவள் மனதில் சஞ்சலத்தை உண்டாக்குறதே அவளோட அம்மா தான். அதே மாதிரி, பிள்ளையை பெத்தவளும், மருமகளின் குடும்பத்தை, ஏதோ தனக்கு அடிமைப்பட்டவங்களாக நினைச்சு, வித்தியாசமாக பாக்கிறதும், மகனிடம் அவர்கள் பற்றி தரக்குறைவாக பேசறதும், அந்தப் பிள்ளைகள் மனசில பாதிப்பை ஏற்படுத்துகிறது.
''அதனால, நாம அப்படி இருக்கக் கூடாது. நாம ரெண்டு பேரும் உடன்பிறவா சகோதரிகளாக, அன்பா பழகி, நம்ம பிள்ளைகளுக்கு, நம்மளப் பத்தி, நல்ல அபிப்பிராயம் வர்ற மாதிரி நடந்துக்கணும். நான் ஸ்வேதாவுக்கு மாமியாராக இருப்பதை விட, அம்மாவாக இருக்கத் தான் பிரியப்படறேன்.
''நம்ப குழந்தைங்க, என்னைக்கும் சந்தோஷமாக, நிறைவாக வாழுறதுக்கு, நாம அஸ்திவாரமாக இருப்போம். நான் சொல்றது உங்களுக்கு ஒப்புதல் தானே...'' என்றாள்.
நல்ல மனதுடன் உணர்வுப்பூர்வமாக பேசும் சாரதாவை மகிழ்ச்சியுடன் பார்த்து, ''என் மகள் ஸ்வேதா, இனி, உங்களுக்கும் மகளாக இருப்பாள் என்ற உத்தரவாதத்தைக் கொடுக்கிறது மட்டுமில்ல, அவங்க வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்ற மனநிறைவையும் கொடுத்திருக்கிற உங்களை, என் சகோதரியாக மனசார ஏத்துக்கிறேன்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் யமுனா.
பி.பிரவிணா

