PUBLISHED ON : நவ 20, 2011

எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான். அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே, பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து, பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும் என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும் பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில், 'வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக் கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று, சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும், 'வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம், 'உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம் வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள் பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும் அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில் பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா, வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன. சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, 'இனிமேல், எங்களை, 'வேண்டாம்' என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால், புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள் குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண் குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
***
சி. வெற்றிமாறன்
