/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம்... - அசத்தும் கிராமம்!
/
கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம்... - அசத்தும் கிராமம்!
கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம்... - அசத்தும் கிராமம்!
கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம்... - அசத்தும் கிராமம்!
PUBLISHED ON : ஜூலை 21, 2013

குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குவோர் உண்டு...போஸ்டர் அடித்தே அரசியல் கட்சிகளில் பதவி பெறுவோர் உண்டு...அந்தளவு எந்த ஊருக்கு சென்றாலும், எல்லா வகையான போஸ்டர்களையும் காணலாம். ஆனால், இக்கிராமத்திற்கு சென்ற போது, மருந்துக்குக் கூட போஸ்டர்களையோ, அரசியல் கட்சிக் கொடிகளையோ, காணமுடியவில்லை.
பயணிகள் நிழற்குடை மற்றும் பொதுசுவர்களில், போஸ்டர்கள் ஓட்டவோ, அச்சுப் பதிக்கவோ கூடாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பெருமைக்கு உரியது, மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேவுள்ள ஒத்தவீடு என்ற கிராமம்.
வண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமம், தற்போது மதுரை மாநகராட்சியில் இணைந்து விட்டது. லோக்சபா மற்றும், சட்டசபை தேர்தல் நேரங்களில் கூட, இந்த ஊரில் எந்த கட்சியினரும் போஸ்டர் ஒட்டுவதில்லை.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஊருக்குள் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. ஊர் பொது இடத்தில் நின்று, ஆதரவு கேட்க மட்டுமே அவர்களுக்கு அனுமதி. எந்த அரசியல் கட்சி கொடிகளும் இங்கு இல்லை. ஊர் மக்கள் நலன் கருதி, மூன்று தலைமுறைகளுக்கும் மேல் இந்த கட்டுப்பாட்டை கடைபிடிப்பதால், தாயும், பிள்ளையுமாக வாழ முடிகிறது, என்கின்றனர் கிராமத்தினர்.
'பொங்கல் போன்ற விழா நாட்களில், ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என, பாகுபாடு இன்றி, அனைவர் வீடுகளுக்கும் செல்வோம். பூஜைகள் செய்து பொங்கல் வைப்போம். இதுவரை சண்டை, சச்சரவு ஏற்பட்டதில்லை. அரசியல் கட்சியினரும் ஊர் கட்டுப்பாட்டை மதித்து நடக்கின்றனர்...' என்கிறார் கிராமவாசி ஒருவர்.
'ஊரில் 150 வீடுகள் உள்ளன. இதுவரை எனக்கு தெரிந்து யாரும் ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதாக இல்லை. இதுவரை எந்த பிரச்னைக்காகவும், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதில்லை. வரும் தலைமுறைகளும் இதை பின்பற்றுவர் என்ற நம்பிக்கையுள்ளது...' என்கிறார் மற்றொருவர்.
அவர்களது நம்பிக்கை வீண்போகக் கூடாது, என்ற வாழ்த்துக்களுடன் அங்கிருந்து விடைபெற்றோம்!
***
எம். கண்ணன்

